Published : 13 May 2016 09:02 AM
Last Updated : 13 May 2016 09:02 AM

உத்தராகண்ட் உணர்த்தும் பாடங்கள்!

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் வெற்றி பெறுவார் என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டது. ராவத்துக்கு எதிராக அணி திரண்ட ஒன்பது அதிருப்தி காங்கிரஸ் உறுப்பினர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாமல் தடுக்கப்பட்டதால் ராவத்தின் வெற்றி எளிதாகிவிட்டது.

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கும் மசோதாவை அரசு கொண்டுவந்தபோது, பாஜக உறுப்பினர்களும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களும் அதன் மீது வாக்குச் சீட்டு மூலம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், குரல் வாக்கெடுப்பு போதாது என்று வலியுறுத்தினர். ஆனால், பெரும்பான்மை வலு தனக்கு இல்லை என்று உணர்ந்த அரசு, குரல் வாக்கெடுப்பில் மசோதா ஏற்கப் பட்டதாக அறிவித்துவிட்டு, அவையை ஒத்திவைத்தது. அத்துடன் பேரவைத் தலைவர் முதல்வரின் பரிந்துரைப்படி அதிருப்தி உறுப்பினர்களின் பேரவைப் பதவியை ரத்து செய்து அவர்களை நீக்கிவிட்டார். பேரவைத் தலைவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிருப்தியாளர் களை நீக்கியது காங்கிரஸ் அரசின் தவறு என்றால், குடியரசுத் தலைவர், ஆட்சியை அமல்படுத்திய பாஜக அரசின் செயல் மற்றொரு தவறு.

பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. பேரவை உறுப்பினர்க ளுக்குப் பணம் கொடுக்கப் பேரம் பேசியதாக வெளியான காணொலிக் காட்சிப் பதிவு தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் (சி.பி.ஐ.) விசாரணையை ஹரீஷ் ராவத் சந்தித்தாக வேண்டும். அடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி காங்கிரஸ் உறுப்பினர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் அடுத்து விசாரித்து அளிக்கப்போகும் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதையும் பொறுத்தே அவருடைய அரசின் எதிர்காலம் அமையவிருக்கிறது.

அகில இந்திய அளவில் உத்தராகண்ட் விவகாரம் சில அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆளும் கட்சியில் ஒரு பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக, பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்த முதலமைச்சர், ‘கட்சி மாறல் தடைச் சட்ட’ உதவியின் கீழ் சிலரைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு பதவியில் நீடிக்க வேண்டுமா என்பது முதல் கேள்வி. அரசியல்ரீதியாக இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்பதற்காகப் பேரவை உறுப்பினர்களின் பதவிகளை ரத்து செய்வது ஏற்கத் தக்கதா என்பது அடுத்த கேள்வி. முதலமைச்சர் தங்களுக்குச் சாதகமாக ஏதும் செய்யவில்லை என்பதற்காக ஆளும் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கூட்டாகச் சேர்ந்து, கலகக்குரல் எழுப்பி ஆட்சியைக் கவிழ்க்க அனுமதிக்க வேண்டுமா என்பது மற்றொரு கேள்வி.

பேரவையில்தான் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இனி பேரவைத் தலைவர், ஆளும் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காகப் பேரவை உறுப்பினர்களை ஏதாவது காரணம் கூறித் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை எந்தவித வரம்பும் இல்லாமல் அனுமதிப்பது சரியா என்ற புதிய கேள்வி எழுகிறது. கட்சி மாறல் தடைச் சட்டத்தை ஆளும் கட்சிகள் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால், மாநில அரசுகளின் இத்தகைய சதிகளையும் முறியடிக்க சட்டரீதியாக எதையாவது செய்தாக வேண்டும் என்ற பாடத்தை உத்தராகண்ட் வலியுறுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியை அரசியல்ரீதியாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. இது மத்திய அரசு மனதில் நிலைநிறுத்த வேண்டிய முக்கியமான பாடம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x