Last Updated : 21 May, 2016 09:13 AM

 

Published : 21 May 2016 09:13 AM
Last Updated : 21 May 2016 09:13 AM

எல்லாமே வெறும் கணக்குதான்!

தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகி, அதிமுக ஆட்சி தொடர்வது உறுதியாகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெம்பாகவே இருந்தார். உற்சாகமாக இருந்தார் என்றுகூடச் சொல்லலாம். கூட்டணியின் வெற்றிக் கணக்கு 100-ஐ நெருங்கியது, வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது ஆகியவை மட்டும் அவரது உற்சாகத்துக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது. திமுகவின் மரபார்ந்த வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பெற முடிந்திருப்பதும் மாற்று சக்தி குறித்த பேச்சுகளுக்குப் பலமான அடி கொடுத்திருப்பதும் அவரது உற்சாகத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

வலுவான எதிர்க்கட்சியாக உருப்பெற்றிருக்கும் திமுக, இதை வெற்றியாகவே மாற்றியிருக்க முடியும் என்பதை வைத்துப் பார்க்கும்போது ஸ்டாலினின் புன்னகைக்குப் பின்னால் இருக்கக்கூடிய வேதனையை உணர முடியும். தமிழகத் தேர்தல் களத்தின் சூட்சுமத்தை திமுகவில் தேர்தல் வியூகத்தை வகுத்த அணியினர் போதிய கவனத்துடன் அணுகவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தமிழகத் தேர்தல் என்பதே கணக்குதான். பிற அம்சங்கள் எவ்வளவு முக்கியமானவையாக இருந்தாலும் அவை இரண்டாம்பட்சம்தான். ஆகிவந்த வாக்கு விகிதக் கணக்குகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி வாங்கிய வாக்குகள் 40.8 சதவீதம். இரண்டாம் இடத்தில் வந்த திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 39.7 சதவீதம். வித்தியாசம் 1.1 சதவீதம். வேறொரு கட்சியுடனான கூட்டணியின் மூலம் 2 அல்லது 3 சதவீத வாக்குகளை திமுகவால் பெற முடிந்திருந்தால் அக்கூட்டணி பெரு வெற்றி பெற்றிருக்கும்.

பழைய கணக்குகள்

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெற்ற மகத்தான வெற்றிக்கு, திமுக ஆட்சியின் மீதான கடும் அதிருப்தி காரணமாகச் சொல்லப்பட்டது. திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் முதலான கட்சிகளின் வலுவான கூட்டணி தோற்றதற்கு அதிருப்தி மட்டும் காரணம் அல்ல. தனிப்பட்ட முறையில் அதிக வாக்கு விகிதம் கொண்ட அதிமுக, தேமுதிகவுடன் வைத்துக்கொண்ட கூட்டு முக்கியக் காரணம்.

2006-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுகவால் தனிப் பெரும்பான்மை பெற இயலவில்லை என்றாலும் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை (163 இடங்கள்) கிடைத்தது. ஆக, இங்கும் கூட்டணிதான் வென்றது. வாக்கு விகிதக் கணக்குதான் வென்றது.

2001 தேர்தலில் திமுகவுக்கு எதிரான அலை எதுவும் இல்லை. ஆனாலும் அதிமுக வென்றது. காரணம், காங்கிரஸுடனான கூட்டு. 1996 தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான அலை கடுமையாக இருந்தாலும், தமாகாவின் துணையுடன்தான் திமுக பெருவெற்றி பெற்றது. 1991 தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் இரு அணிகள் ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் திமுக வென்றது. அதே ஆண்டின் இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துப் பெரு வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.

எம்ஜிஆர் காலத்தின் நிலை

1984 தேர்தலில் இந்திரா காந்தி படுகொலை, எம்ஜிஆர் உடல் நிலை எனும் இரட்டை அனுதாப அலை மீது அதிமுக, காங்கிரஸ் கூட்டணி சவாரி செய்தாலும் இந்த அலைகள் அக்கூட்டணியின் வாக்கு விகிதத்தைக் கூட்டவே உதவின.

1980-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக, காங்கிரஸ் கூட்டணி 37 தொகுதிகளில் வென்றது. 1977 சட்டமன்றத் தேர்தலில் வென்ற எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவால் 1980 நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. காரணம், எதிரணியில் இருந்த கூட்டணியின் வலிமை. நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டுச் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதும் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தன. தன் ஆட்சி கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையை மட்டும் எம்ஜிஆர் நம்பவில்லை. பல்வேறு சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து 14 கட்சிக் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றார்.

இந்த உதாரணங்கள் குறிப்பிடுவது ஒரே விஷயத்தைத்தான்: தமிழகத் தேர்தல் களத்தில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் நிரந்தமான காரணி வாக்கு விகிதம்தான். வலுவான கூட்டணி அமையும்போது அதற்கு எதிராக எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என யார் இருந்தாலும் அவர் தோற்றுப்போகிறார். அதேபோல, ஒரு கட்சிக்குச் சாதகமான சூழல் எவ்வளவுதான் வலுவாக அமைந்தாலும் எதிரணியின் கூட்டணி வலுவை எதிர்கொள்ளக்கூடிய வலுவான கூட்டணி அமைக்காமல் அக்கட்சியால் வெல்ல முடியாது. 1980 முதல் இதே நிலை தொடர்கிறது.

காங்கிரஸின் வாக்கு வங்கி

ஆக, தேர்தலில் முன்னிறுத்தப்படும் பிரச்சினைகள், ஆளுமைகளின் வலிமை அல்லது பலவீனங்கள், வாக்குறுதிகள், பிரச்சார வியூகங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் வாக்குக் கணக்கு என்பது முக்கியம். இந்தக் கணக்கு திமுக, அதிமுகவைப் பொறுத்தவரை பெரிதாக மாறிவிடவில்லை. ஆனால் காங்கிரஸ் விஷயத்தில் அது குறைந்துவிட்டது. எனவேதான் காங்கிரஸின் துணையை மட்டுமே கொண்டு இப்போதெல்லாம் திமுகவால் வெற்றிபெற முடியவில்லை. 2006-ல் திமுகவுக்கு காங்கிரஸின் துணையுடன் பாமக முதலான கட்சிகளும் இருந்தன. 2011-லும் காங்கிரஸின் துணை இருந்தது. ஆனால் எதிரணியின் வலுவான கூட்டணி அதைத் தோற்கடித்தது. காங்கிரஸின் வாக்கு வங்கியை பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் பங்குபோட்டுக்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

இந்தக் கணக்குகளின் அடிப்படையில், இந்த முறையும் காங்கிரஸை மட்டும் வைத்துக்கொண்டு வெல்ல முடியாது என்னும் முடிவுக்கு திமுகவால் வந்திருக்க முடியும். அது தெரிந்ததால்தான் தேமுதிகவைக் கட்சி பெரிதும் எதிர்பார்த்தது. அது அமைந்திருந்தால் திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளைத் தக்கவைத்துக்கொள்ளாமல்போனதும் திமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கு முக்கியமான காரணம்.

தமிழகத் தேர்தலின் சூட்சுமம் என்பது கூட்டணியைச் சார்ந்தது என்பதையும் அந்தக் கூட்டணிக்கான சமரசங்கள் தவிர்க்க இயலாதவை என்பதையும் ஸ்டாலின் இப்போது உணர்ந்திருப்பார். சமரசம் எந்த அளவுக்குத் தேவை என்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் உணர்த்தியிருக்கிறார்கள். திமுகவினரைச் சிறையில் அடைத்து, ஸ்டாலின், முரசொலி மாறன் உள்ளிட்டவர்களைச் சித்திரவதை செய்த நெருக்கடிநிலைக் காலக் கொடுமைகள் நடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அதே காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி. காரணம், அரசியலில் வெற்றி என்பது எவ்வளவு முக்கியம் என்பது அவருக்குத் தெரியும். 2011 தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளால் தேமுதிக தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவ பொம்மையைக் கொளுத்தி அவமானப்படுத்தினார்கள். அதைப் பொருட்படுத்தாமல் அக்கட்சியுடன் கூட்டணி வைத்து வென்றார் ஜெயலலிதா.

வாக்குக் கணக்குகளே முக்கியக் காரணியாக விளங்கும் தேர்தல் போர்க்களத்தில் வலுவான கூட்டணி என்னும் பிரம்மாஸ்திரத்தைப் பெறுவது முக்கியமானது. 1.1 சதவீத வித்தியாசத்தில் ஆட்சி அதிகாரம் கைநழுவிய இந்தத் தேர்தல் ஸ்டாலினுக்கு அந்தப் பாடத்தை அழுத்தமாகவே புகட்டியிருக்கும்.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x