Last Updated : 10 May, 2016 09:26 AM

 

Published : 10 May 2016 09:26 AM
Last Updated : 10 May 2016 09:26 AM

6 இல்ல... 24 முனைப்போட்டி!

சட்டசபைத் தேர்தல்ல யாருக்கெல்லாம் போட்டின்னு சொல்லுங்க பாப்போம். என்னது.. பணநாயகத்துக்கும் ஜனநாயகத்துக்குமா? ‘எந்தெந்தக் கட்சிக்கு நடுவுல போட்டி?’ன்னு கேட்டேன்.

ஜெயலலிதா கண்கொண்டு பாத்தா, கண்ணுக்கெட்டுன தூரம் எதிரியே இருக்க மாட்டான். அதுவே, ஸ்டாலின் கண்கொண்டு பாத்தீயன்னா, திமுக, அதிமுக, மநகூன்னு மூணு பேர் களத்துல இருக்கிற மாதிரி தோணும். இரக்க சுபாவத்துக்காரங்களா இருந்தா, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சியையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டு ஆறு முனைப்போட்டின்னு சொல்வாங்க.

அம்புட்டுத்தானா? அதாம் இல்ல. இன்னும் கொள்ளைப்பேரு இருக்காங்க போட்டியில. ‘பிஜேபியே வெக்கமில்லாம போட்டிபோடுது, நாம போட்டியிட்டா என்ன?’ன்னு மாயாவதியோட பகுஜன் சமாஜ் கட்சியும், முயலாம் சிங் யாதவோட சமாஜ்வாடி கட்சியும் தமிழ்நாட்ல தனிச்சிப் போட்டியிடுது. இன்னொரு கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் ராஜதந்திரத்தோட ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்டிரிய ஜனதா தளம், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி, தேசிய ஸ்தாபன காங்கிரஸ் போன்ற கட்சிகளோட சேந்து மெகா கூட்டணி(?) அமைச்சிக் களமிறங்கியிருக்கு.

காந்திய மக்கள் கட்சி

போன பார்லிமெண்ட் தேர்தல்ல மூணாவது அணி அமைச்சாரே தமிழருவி மணியன்.. ஞாவகம் இருக்கா? ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ன்னு தன்னைத்தானே திட்டிக்கிட்டு, இந்தவாட்டி தனியா களமிறங்குனாரு. கஷ்டப்பட்டு 25 தொகுதிக்கு வேட்பாளர்களையும் அறிவிச்சவரு, மீதித் தொகுதிய என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப, கலாமோட உதவியாளர் பொன்ராஜ் திடீர்னு, ‘அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி’யத் தொடங்கி, இவரோட கூட்டணி போட்டாரு. அந்த சந்தோஷத்துல தனி தேர்தல் அறிக்கையும் வெளியிட்டாரு தமிழருவி. என்ன கொடுமைன்னா... தமிழகத் தேர்தல் வரலாற்றுலயே முதன்முறையா நீதிமன்றம் தடை செய்த கட்சிங்கிற பேர், கலாம் கட்சிக்குக் கிடைச்சிருக்கு.

விடியல் கூட்டணி

முரட்டுத் தூக்கம் போட்டுட்டு மத்தியானம் 1 மணிக்கு எந்திரிக்கிற நவரச நாயகன் கார்த்திக் ஆரம்பிச்ச கூட்டணிக்குப் பேரு ‘விடியல்’ கூட்டணியாம். நாடாளும் மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட ஆறு கட்சி கூட்டணிய அமைச்சிட்ட சந்தோஷத்துல பேட்டி குடுத்த கார்த்திக், “ஒளியின் திசை வேகத்தில் எங்கள் அணி செயல்படும். அதாவது, விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பயணிப்போம்”னு சொன்னாரு. அதிவேகம் ஆபத்துன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க. புறப்பட்ட வேகத்துலயே வண்டி குடைசாஞ்சி, கூட்டணி துண்டுதுண்டா உடைஞ்சிபோச்சு.

சிங்கம் கூட்டணி

முதல்வர் வேட்பாளர் கார்த்திக்கா இல்ல டாக்டர் சேதுராமனாங்கிற குழப்பத்தால விடியல் கூட்டணி உடைஞ்சிபோனதா சொல்றாங்க. அதுல இருந்து வெளிவந்த சேதுராமன், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட 7 கட்சிகள ஒண்ணு சேத்து அமைச்சதுதாம் ‘பல’மான சிங்கக் கூட்டணி.

மக்கள் எழுச்சிக் கூட்டணி

கலாமோட உதவியாளர் கட்சி தொடங்குனதப் பாத்து, ‘நாமளும் தொடங்குனா என்ன?’ன்னு கலாமோட அண்ணன் மகன் ஒருத்தர் தொடங்குன கட்சிதாம் ‘தேசிய ஜனநாயகக் கட்சி’. தேர்தலுக்கு 15 நாளைக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்சாலும் அதுக்குள்ள நாலஞ்சி பேரைப் பிடிச்சி, ‘மக்கள் எழுச்சிக் கூட்டணி’ அமைச்ச பேரன், ‘3 தொகுதியில மட்டும் நாங்க போட்டி போடுறோம். மிச்ச 231 தொகுதியில யாரு வேணுமின்னாலும் போட்டி போடுங்க’ன்னு கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்குடுத்துட்டாரு.

அதேமாரி, கோவை சிக்கந்தரோட அகில இந்திய வெல்ஃபேர் கட்சி, சமூக நீதிக் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி எல்லாம் சேந்து ‘சமூக நலக் கூட்டணி’ய அமைச்சிக் களமிறங்கியிருக்கு.

இந்த பிஜேபிகாரங்க, ‘மிஸ்டு கால் குடுத்தா உறுப்பினராவலாம்’னு சொன்னாங்க பாத்தியளா? அதேமாரி மிஸ்டுகால் குடுத்தா வேட்பாளராவலாம்னு அறிவிச்சாங்க பாருங்க.. அவங்கதாம் புதிய சக்தி அணி. சட்டப் பஞ்சாயத்து இயக்கம்னு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்கல்ல, அதோட அரசியல் அவதாரம்னு வெச்சிக்கலாம்.

அடுத்து, பச்சைத் தமிழகம். ‘இது என்னதுய்யா, அன்புமணி ராமதாஸ் மரம் நடுறதுக்குத் தொடங்குன அமைப்பா?’ன்னு கேட்டுப்புடாதீய. அணுஉலைக்கு எதிரான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரோட புது அமைப்பு. அணுஉலை, நியூட்ரினோ, கெயில், மீத்தேன் எரிவாயுன்னு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைக்காகப் போராடுறவங்க எல்லாம் ஒண்ணு சேந்து நாலஞ்சி தொகுதியில நிக்காங்க.

24 முனைப் போட்டி

அதுக்குள்ள டயடாகிட்டா எப்புடி? வேல்முருகனோட தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஜான் பாண்டியனோட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈஸ்வரனோட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, அர்ஜுன் சம்பத்தோட இந்து மக்கள் கட்சி, தமிழக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் (இதுவேற கம்யூனிஸ்ட்) போன்றவையும் களத்துல இருக்கு. இதுல ரெண்டு பேரு தனித்தேர்தல் அறிக்கை வேற வெளியிட்டிருக்காங்கன்னா பாத்துக்கோங்க.

இந்தத் தேர்தல்ல சுயேச்சைங்க அதிகமா போட்டியிடலியே ஏன்னு, டீக்கடை அரசியல் விமர்சகர்கிட்ட கேட்டேன். ‘அவங்க பூராம் ஆளுக்கொரு கட்சி தொடங்கிட்டாங்க தம்பி’ன்னு சொன்னாரு. உண்மைதான், 132 தேர்தல்கள்ல போட்டியிட்டு கின்னஸ்ல இடம்பிடிச்ச தேர்தல் மன்னன் கே.பத்மராஜன் இருக்காரே, அவரும் இந்தவாட்டி கட்சி தொடங்கிட்டாரு. அதுக்குப் பேரு என்ன தெரியுமா? எலெக்‌ஷன் கிங் பெயிலியர் பார்ட்டி!

ஆக, தமிழ்நாட்டுல 6 முனைப் போட்டி கெடையாது. 24 முனைப் போட்டி. நோட்டோவையும் சேத்தா 25. யப்பா! எல்லாரையும் சொல்லிட்டோம்ல. யாரையாச்சும் விட்டுருந்தா இந்தக் கட்டுரையோட கமெண்ட் ஏரியாவுல நீங்களே டைப் பண்ணிப் போட்டுருங்க. அப்புறம் எம்பேரு வுட்டுப்போச்சு, ஒம்பேரு விட்டுப்போச்சுன்னு ஆவுலாதி சொல்லப்புடாது, ஆமா!

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x