

தமிழ்த் தாத்தா உ.வே.சா. என்றறியப்படும் உ.வே.சாமிநாதர் இள வயதில் பெரம்பலூரில் வாழ்ந்திருக்கிறார். அங்குதான் அவர் அடிப்படைக் கல்வி கற்றிருக்கிறார். இதை அவர் தன்னுடைய சுயசரிதையான ‘என் சரித்திரத்தில்’ பதிவுசெய்திருக்கிறார். பெரம்பலூரில் உ.வே.சா. வாழ்ந்த காலகட்டத்தைப் பற்றி விரிவாக விளக்கும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்த் தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும்
ஜெயபால் இரத்தினம், வெளியீடு: விச்சி பதிப்பகம், பெரம்பலூர் - 621 212, விலை: ரூ.150
தொடர்புக்கு - 94443 61209
அம்பேத்கரிய ஆய்வாளர் டாக்டர் ராவ்சாஹேப் கஸ்பே ஆர்.எஸ்.எஸ்ஸின் கோட்பாட்டு அடிப்படைகளை விளக்கும் விதமாகவும் அதன் சித்தாந்தத்தை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தும் விதமாகவும் மராத்தியில் எழுதிய ‘ஜோட்’ என்னும் நூல் ஏழு பதிப்புகள் கண்டுள்ளது. 2019-ல் வெளியான இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ராவ்சாஹேப் புதிதாக எழுதிச் சேர்த்த பகுதிகளையும் இணைத்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்: ஒரு திரை விலக்கம்,
ராவ்சாஹேப் கஸ்பே, தமிழில்: சுந்தரசோழன், வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை - 18, விலை: ரூ.195, தொடர்புக்கு: 044- 2433 2924
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் வைரபாண்டியன் ஹாங்காங்கில் ஐடி துறையில் பணியாற்றிவருகிறார். சிறந்த சிற்றிதழ்களுக்கான ‘சுஜாதா விருது’ பெற்ற ‘361’ என்னும் நவீன இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர் இவர். இந்நூல் இவருடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. ‘கல்குதிரை’, ‘உயிர் எழுத்து’, ‘அம்ருதா’, ‘மணல்வீடு’ உள்ளிட்ட சிற்றிதழ்களிலும் ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’ உள்ளிட்ட வெகுஜன இதழ்களிலும் வெளியான கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
மீன்கள் துள்ளும் நிசி, ராஜேஷ் வைரபாண்டியன்
வெளியீடு: கடல் பதிப்பகம்,
விற்பனை உரிமை: தமிழ்வெளி, சென்னை - 600 122
விலை: ரூ.100, தொடர்புக்கு: 90940 05600
மத்திய அரசின் தேசிய நதிகள் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினராக இருக்கும் ஏ.சி.காமராஜ், மாநிலங்களுக்கிடையிலான முரண்பாடுகளால் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வராத சூழலில், அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ‘கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலைத் திட்டம்’ என்னும் அதிநவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை முன்மொழிந்தார். அந்தத் திட்டம் மற்றும் அதைச் செயல்படுத்தத் தான் எடுத்த முயற்சிகளை இந்த நூலில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும்
ஏ.சி.காமராஜ், மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை - 600 017, விலை: ரூ.230
தொடர்புக்கு: 91764 51934
தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவரும் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவருமான செல்வமணி விசுவநாதன் தன்னுடைய 47 ஆண்டு கால கல்விப்புலப் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாணவர்கள், இளைஞர்கள் வெற்றிபெற வழிகாட்டும் வகையிலும் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் இந்த நூலை எழுதியுள்ளார்.
வெற்றி.. வெற்றி.. வெற்றி..!
செல்வமணி விசுவநாதன்
வெளியீடு: புதிய புத்தக உலகம், சென்னை - 600 017
விலை: ரூ.160, தொடர்புக்கு: 97910 92200
ஆலை அரசர் என்று போற்றப்படும் கருமுத்து தியாகராசரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது கருத்துரைகளையும் 100-க்கு மேற்பட்ட குறிப்புகளாகத் தொகுத்து அளித்துள்ளது இந்நூல். தியாகராசர் தம் இளம்வயதில், இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய பத்திரிகையாளர். பின்பு இந்தியா திரும்பியதும் விடுதலை இயக்கத் தலைவராக, மொழியுரிமை வீரராக, தனித் தமிழ் நடையைக் கையாண்ட ‘தமிழ்நாடு’ இதழின் நிறுவனராக, பஞ்சாலைக் குழுவைத் தோற்றுவித்த முன்னோடியாக, பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கிய கலைத்தந்தையாக, வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கவனம் செலுத்திய முன்னோடிகளில் ஒருவராக, கட்டிடக் கலையிலும் தோட்டக் கலையிலும் ஆர்வம் கொண்ட ரசனையாளராக அவரின் பல்வேறு பரிமாணங்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு உத்வேகமூட்டும் ஒரு வெற்றிச் சரித்திரம்.
கலைத் தந்தை, பி.எல்.முத்தையா
முல்லை பதிப்பகம், அண்ணா நகர் மேற்கு,
சென்னை-40, விலை: ரூ.80,
தொடர்புக்கு: 98403 58301