Last Updated : 12 May, 2016 09:00 AM

 

Published : 12 May 2016 09:00 AM
Last Updated : 12 May 2016 09:00 AM

நிதி நெருக்கடி ஏற்படுத்தும் வாக்குறுதிகள்!

பொதுச் செலவுகளில் அரசுக்குத் தெளிவில்லையென்றால் பாதிப்பு மக்களுக்குத்தான்

அரசு அளிக்கும் பணிகளை அல்லது பொருட்களை அதிக மானியத்துடனோ அல்லது இலவசமாகவோ தருவது என்ற உறுதிமொழி தேர்தல் அறிக்கைகளின் நிரந்தர அம்சங்களாகிவிட்டன. எந்த ஒரு கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த உறுதிமொழிகள் அதிகரிக்கும்போது, செலவுகளுக்கு ஏது பணம் என்ற கேள்விக்கு கட்சிகள் சொல்லும் ஒரே பதில், ‘நாங்கள் கூடுதல் வருவாய் ஈட்டுவோம்’ என்பதுதான். எங்கிருந்து கூடுதல் வருவாய் வரும் என்ற கேள்விக்குச் சரியான பதில் இல்லை.

பொதுவாக, ஓர் அரசு பதவியேற்று புதிய திட்டங்களைச் செயல்படுத்த மூன்று வழிகளில் வருவாயை ஈட்ட முடியும். 1. தற்போதுள்ள திட்டங்களை நிறுத்துவது, அல்லது அவற்றின் தொகையைக் குறைப்பது. 2. மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாய்களை அதிகரிப்பது, மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெறுவது. 3. சந்தையில் நிலவும் வட்டி விகிதத்தில் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவது.

செலவுகளைக் குறைப்பது

புதிய செலவுகளுக்கு மிக எளிதாகப் பணம் ஈட்டுவது இந்த முறையில்தான். ஒவ்வொரு ஆண்டும் சில திட்டங்கள் முடிவுக்கு வரும். மூலதனச் செலவுத் திட்டங்கள் சில ஒவ்வொரு ஆண்டும் நிறைவுக்கு வரும், அல்லது அவற்றை எளிதில் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போடலாம். மத்திய அரசு கொடையுடன், மாநில அரசும் நிதி அளித்துச் செய்யப்படும் திட்டங்களை மத்திய அரசு நிறுத்தும்போது, அதற்கு இணையான மாநிலச் செலவும் குறையும். ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய பல திட்டங்களை ஒன்றாக இணைத்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது. இதனாலும் செலவுகள் குறையும். தற்போதுள்ள பாஜக அரசு திட்டக் குழுவைக் கலைத்து, ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் 2017-18 நிதி ஆண்டு முதல் திட்டச் செலவுகள் மாநில அரசுக்குக் குறையும்.

2011-12-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அதற்கு முந்தைய அரசு அளித்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்தை நிறுத்தி, அதற்குப் பதிலாக இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைக் கொடுத்தது. அதன் பிறகு, ‘தொலைநோக்குப் பார்வைத் திட்டம் 2023’ என்ற ஒன்றை அறிவித்து அதன் தொடர்ச்சியாக 2012-13 நிதி நிலை அறிக்கையில் ரூ.2,500 கோடி மதிப்பில் பல உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களை அறிவித்தது. அவற்றைச் செயல்படுத்தாமல் விட்டுவிட்டதைத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை 2015-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கு அறிவிக்கப்பட்ட பணம் மற்ற திட்டங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும்.

அரசின் எல்லாத் திட்டங்களையும் செலவுகளையும் இவ்வாறு நிறுத்த முடியாது. அரசுக்கென்று பல கட்டாயச் செலவுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம், அரசு உதவி பெறும் நிறுவனங் களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடை, அரசு செலுத்த வேண்டிய வட்டித்தொகை எல்லாம் இதில் அடங்கும்.

2011-12, 2012-13, 2013-14 ஆகிய மூன்றாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 66,931.34 கோடி இந்த வகைக் கட்டாயச் செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இது மாநில அரசின் சொந்த வரி வருவாயில் 87%. இதில் மானியங்களைச் சேர்க்கவில்லை. இதே மூன்றாண்டுகளில் மாநில அரசின் முக்கிய மானியத் திட்டங்களாகக் கருதப்படும் சிலவற்றுக்கு மட்டும் சராசரியாக ஆண்டுக்கு ரூ.13,302.43 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலச் சொந்த வரி வருவாயில் 17.3%. இவ்வாறு கட்டாயச் செலவுகளையும் மானியங்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அவை மாநிலச் சொந்த வரி வருவாயில் 104.3% ஐ தாண்டுகிறது. இவையல்லாமல் அரசு நிறுவனங்கள் சிலவும் கடன் வாங்கிச் சில மானியங்களைக் கொடுப்பதாகக் கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை கூறுகிறது.

தமிழகமும் குஜராத்தும்

இந்தியாவில் அதிக வரி வருவாய் பெறும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பை அடிப்படையாகக் கொண்டுதான் அம்மாநில வரி வசூலிக்கும் திறன் அறியப்படும். அவ்வாறு பார்க்கும்போது, 2011-14 ஆகிய மூன்று ஆண்டுகளில் மாநில உற்பத்தியில் தமிழகம் 8.96%, குஜராத் 7.45% சொந்த வரி வருவாயாகப் பெறுகின்றன. மாநில உற்பத்தி குறைந்தாலும் அதிக வரி பெற்றுத் தருகிற மது விற்பனை இங்கு அதிகம். அதேபோல் மாநில உற்பத்தி மதிப்பில் தொழில், வியாபாரம் போன்றவற்றின் பங்கும் தமிழகத்தில் அதிகம். மேலும், நகரமயமாக்கலும் குஜராத்தைவிட அதிகம். இதில் மதுவின் மூலம் பெறப்படும் வரி வருவாயை நீக்கிவிட்டுப் பார்த்தால், மாநில உற்பத்தி மதிப்பில் வரி வருவாய் தமிழகத்தில் 6.50% ஆகவும், குஜராத்தில் 7.44% ஆகவும் உள்ளது. மது மீதான வரி தவிர, மற்ற வரி வருவாய் ஈட்டுவதில் குஜராத்தைவிட தமிழகம் பின்தங்கியுள்ளது. இதற்குக் காரணம், நிர்வாகத் திறன் குறைவா அல்லது ஊழலா அல்லது இவை இரண்டுமா என்ற கேள்விகள் எழுகின்றன. எனவே, கூடுதல் வரி வருவாய் பெறும் சாத்தியம் தமிழகத்தில் உள்ளது. அதனைப் புதிய அரசு பயன்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.

மின்உற்பத்திச் செலவு குறையாதபோது, மின்கட்டணத்தைக் குறைப்பது, பாலின் கொள்முதல் விலை அதிகரிக்கும்போது, நுகர்வோருக்கான பால் விலையைக் குறைப்பது, சேமிப்புக் கிடங்கு வசதியையும், போக்குவரத்து வசதியையும் அதிகரிக்காமல் விவசாயப் பொருட்களின் அடிப்படை ஆதார விலையை உயர்த்துவது, டீசல் விலையும், நிர்வாகச் செலவும் அதிகரித்தாலும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது போன்ற திட்டங்கள் அரசின் வரி அல்லாத வருவாய் ஈட்டும் சக்தியைக் குறைப்பதுடன், மற்றொருபுறம் அரசின் செலவுகளை உயர்த்தும். எனவே, வரி அல்லாத வருவாய்களைப் பெருக்குவதில் தமிழகம் தனி கவனம் செலுத்த வேண்டும். ஆனால், நம்முடைய அரசியல்-நிர்வாக வரலாறு இதற்கு நேர் எதிர்.

கடன் சுமை

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ‘நிதி பொறுப்புச் சட்டம்’ ஒன்று உள்ளது. அதன்படி, தமிழகம் ஒவ்வொரு நிதி ஆண்டும் மாநில உற்பத்தி மதிப்பில் 3% மிகாமல் கடன் வாங்கலாம். அதேநேரத்தில், தமிழக அரசின் மொத்தக் கடன் நிலுவை மாநில உற்பத்தி மதிப்பில் 25% மிகாமல் இருக்க வேண்டும். இப்போது தமிழகத்தின் கடன் நிலுவை 21% இருப்பதால் அடுத்த ஆண்டு களில் அரசு அதிகக் கடன் வாங்குவதில் சிக்கல் இருக்காது. மேலும், பல மாநிலங்கள் தங்கள் கடன் நிலுவை வியூகத்தை இன்னும் மீறவில்லை என்பதால், ஒவ்வொரு ஆண்டும் பெறப்படும் கடன் தொகையை மேலும் உயர்த்திக்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்கின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டால், அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டு தோறும் அரசின் கடன், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3%-ஐ விட அதிகமாக வாய்ப்பு உள்ளது.

ஆனால், கடனை வரம்புக்குள் வைத்துக்கொள்வதில் சில நன்மைகள் உண்டு. அதில் பிரதானமானது, அரசின் வட்டிச் செலவு குறையும். அந்த சேமிப்பைக் கொண்டு மற்ற செலவுகளைக் கூடுதலாகச் செய்யலாம். எனவே, கடன் அளவை உயர்த்துவதற்குப் பதில், வரி வருவாயை உயர்த்துவது, தேவை இல்லாத செலவுகளை, மானியங்களைக் குறைப்பது, வரி அல்லாத வருவாய்களை உயர்த்துவது என்று அரசின் நிதி நிலையைச் சீர்படுத்தலாம், மக்களுக்கு அவசியம் தேவைப்படுகின்ற குடிநீர், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில்மயமாக்கம், வியாபாரம் விரிவடையச் செய்ய வேண்டியவற்றைச் செய்து, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதும், அதன் மூலம் அதிக வரி வருவாய் பெற்று எளியோருக்குச் சமூகப் பாதுகாப்பு கொடுப்பதும் அவசியம்.

எந்தெந்தப் பொதுச் செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவு இல்லையென்றாலும், தவறான பொதுச் செலவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கடைசியில் அல்லல்படுவது மக்கள்தான்!

- அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ‘தி இந்து’ மையத்தின் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்க வடிவம்.

- இராம.சீனுவாசன், பேராசிரியர்.

தொடர்புக்கு: seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x