Published : 12 May 2022 07:16 AM
Last Updated : 12 May 2022 07:16 AM

குப்பை மலைகள்: நமக்கு எந்தப் பங்கும் இல்லையா?

வைகை ஆற்றங்கரையிலும் பொருநை ஆற்றங்கரையிலும் நம் மூதாதையர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், அரிய மணிக்கற்கள், செங்கல்கள், நகைகளைக் கண்டெடுத்து நம் பண்பாடு குறித்துப் பெருமிதப்பட்டுக்கொள்கிறோம். இன்னும் நூறு, ஆயிரம் ஆண்டுகள் கழித்து, நமது எதிர்கால வாரிசுகள் தொல்லியல் ஆராய்ச்சி நடத்தினால் ஞெகிழிப் புட்டிகள், ஞெகிழிப் பைகள், செயற்கை உணவுக் கலங்கள், அணையாடைகள் (டயபர்), அலுமினிய உணவுச் சுருள்கள் உள்ளிட்டவை உத்தரவாதமாக அவர்களுக்குக் கிடைக்கும். காரணம், இவற்றில் பெரும்பாலானவை மக்குவதற்குச் சில நூறு ஆண்டுகள் முதல் பல ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகும்.

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு எரிந்து 10 நாட்கள் கடந்துவிட்டன. எல்லாம் இயல்புக்குத் திரும்பிவிட்டதாக நினைத்து நாமும் நமது வேலைகளைப் பார்க்கத் திரும்பிவிட்டோம். நிஜமாகவே எல்லாம் இயல்பாகிவிட்டனவா? சென்னை நகருக்குள் அமைந்துள்ள கடைசி சதுப்புநிலம் பள்ளிக்கரணை. பாதுகாக்கப்பட்ட அந்த சதுப்புநிலத்தின் கடைசி துண்டுப் பகுதிக்கு எதிர்ப்புறம், கண்ணிவெடிபோல் என்றாவது ஒருநாள் வெடிக்கக் காத்திருக்கிறது பெருங்குடி குப்பை மலை.

ஒரு பக்கம் பள்ளிக்கரணை சூழலியல் பூங்காவை அமைத்துக் கடந்த ஆண்டு உற்சாகம் பொங்கத் திறந்துவைத்த தமிழ்நாடு அரசு, பள்ளிக்கரணை உள்ளிட்ட 13 நீர்நிலைகளைப் ‘பாதுகாக்கப்பட்ட ராம்சர் அந்தஸ்து’ கொண்ட பகுதிகளாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரையையும் அனுப்பியிருந்தது. ஆனால், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பெருங்குடி பகுதியில் நாள்தோறும் 2,500 டன் (25 லட்சம் கிலோ) குப்பை கொட்டப்பட்டுவரும் நிலையில், பாதுகாக்கப்பட்ட ராம்சர் பகுதியாக சதுப்புநிலத்தை அறிவிக்கக் கோருவது முரண்நகை!

அழிவின் முதல் புள்ளி

1980-கள் வரை 5,000 ஹெக்டேர் பரப்புக்கு விரிந்திருந்தது பள்ளிக்கரணை சதுப்புநிலம். இன்றைக்குப் பாதுகாக்கப்பட்ட காப்புக் காட்டுப் பகுதியாக எஞ்சியிருப்பதோ வெறும் 317 ஹெக்டேர் மட்டும்தான். 1980-களின் இறுதியில், பெருங்குடியில் அரசு குப்பை கொட்டத் தொடங்கியதுதான், சதுப்புநிலத்தின் அழிவுக்கு முதல் காரணம். அதன் பிறகே அப்பகுதியில் கட்டிட ஆக்கிரமிப்பு தொடங்கியது. இதில் அரசு, தனியார் கட்டிடங்கள் என்கிற எந்தப் பேதமுமில்லை. இயற்கை குறித்தான அலட்சியம் இரண்டு தரப்பினரிடமும் மிக அதிகமாக இருப்பது கண்கூடு. தொடக்கத்தில் 75 ஏக்கர் இடம், குப்பை கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.

2011-ல் குப்பையை நிரவுவதற்காக 325 ஏக்கர் நிலப்பகுதியை சென்னை மாநகராட்சி எடுத்துக்கொண்டது. தற்போது 200 ஏக்கரில் குப்பை கொட்டப்படுவது தவிர, 175 ஏக்கர் பரப்பைப் பழைய குப்பை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இந்தக் குப்பை மலைகளைத் தவிர, இதே பகுதியில் 5.4 கோடி லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இருக்கின்றன.

இப்படி 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் குப்பை கொட்டப்படுவதன் காரணமாகவும் கழிவுநீரின் காரணமாகவும் நிலத்தடி நீர் மாசுபாடு, குப்பை எரிவதால் காற்று மாசுபாடு, குப்பை அழுகுவதால் துர்நாற்றம் போன்றவை இப்பகுதியில் சர்வசாதாரணமாகிவிட்டன. விளைவாக, மேற்பரப்பு நீர் மட்டுமில்லாமல், நிலத்தடி நீரும் மாசுபட்டே உள்ளது.

கன உலோகங்களான பாதரசம், காரீயம், காட்மியம் போன்ற வேதிப்பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளன. இப்பகுதியில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் குரோமியம், கோபால்ட், சல்பைடு போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை எனும் இயற்கைப் புகலிடமும், பள்ளிக்கரணை, சீவரம், துரைப்பாக்கம், பெருங்குடி ஆகிய நான்கு கிராம நிலப்பகுதிகளின் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வு கூறுகிறது.

தீப்பிடித்தலும் மீத்தேனும்

கோடைக்காலத்தில் பெருங்குடி குப்பை மலை தீப்பிடித்து எரிவதற்கு கழிவுகளுடன் கலந்திருக்கும் உலோகப் பொருட்களைப் பிரித்தெடுக்க, குப்பை பொறுக்குவோர் அவற்றை எரிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. ‘பயோ மைனிங்’ என்கிற திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பிரிக்காமல் கொட்டப்பட்ட குப்பையைப் பிரித்து, மக்கும் குப்பையின் மீது தென்னை நார் போடப்பட்டிருப்பதாகவும், கோடை வெப்பத்தால் அவற்றிலிருந்து தீ பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மக்கள் குப்பையை வகை பிரிக்காமல் கொட்டுவதாலும், மாநகராட்சியும் அதை அப்படியே வாங்கி மற்றோர் இடத்தில் கொட்டுவதாலும் பல நூறு ஏக்கர் குப்பை மலைகள் உருவாகியுள்ளன. தற்போது அவற்றை ‘பயோ மைனிங்’ முறையில் பிரிப்பதற்கு மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுவருகிறது.

அழுகக்கூடிய குப்பையிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவும் தீ பரவலாக எரிந்ததற்கு முக்கியக் காரணம். பெருங்குடி பகுதியிலிருந்து 8.4 கிகா டன் மீத்தேன் வெளியானதாக அண்ணா பல்கலைக்கழகம் 2019 ஜனவரியில் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. மீத்தேன் வெளியாவதில் உள்ள மற்றொரு முக்கியப் பிரச்சினை, அது காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தக்கூடிய பசுங்குடில் வாயுக்களில் ஒன்று. பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்பட்டிருந்தால், கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்களைக் கிரகித்துக்கொண்டு காலநிலை மாற்றத்தைத் தணிக்கப் பெருமளவு அது உதவியிருக்கும். பள்ளிக்கரணை சதுப்புநிலம் பெருமளவு கொல்லப்பட்டுவிட்டது ஒரு துயரம் என்றால், பெருங்குடியிலிருந்து வெளியாகும் மீத்தேனோ பிரச்சினையை இரட்டிப்பாக்கியுள்ளது.

நிதர்சன நிலை

குப்பை எரிந்தபோது உருவான புகை, பறக்கும் கரித்துகள், எரியாதபோது துர்நாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் சுற்றுப்புற மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள். அதே நேரம், கழிவிலிருந்து வெளியேறும் மீத்தேன், ஆபத்தான வேதிப்பொருள் கசிவு, அருகிலுள்ள சதுப்புநிலத்தில் வாழும் நூற்றுக்கணக்கான தாவர வகைகள், நூற்றுக்கணக்கான பறவை வகைகள், உயிரினங்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் ஆபத்து ஆகியவை குறித்து நம் கவனம் திரும்புவதில்லை. மனிதர்களுக்கு எழும் மேலோட்டமான பிரச்சினைகள் பெரிதாகப் பேசப்படுகின்றன. சூழலியல்ரீதியில் உள்ளூர ஆபத்தான நிலை கனன்றுகொண்டிருப்பது நம் கண்களில் படுவதில்லை.

இப்படிப் பெருங்குடி குப்பை மலையும் கட்டிட ஆக்கிரமிப்புகளும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சிறிது சிறிதாகக் கபளீகரம் செய்து, தற்போது குற்றுயிரும் குலையுயிருமான நிலைக்குக் கொண்டுவந்துவிட்டன. ஒரு நீர்நிலையைக் கொன்று, அதன் தலையில் குப்பையைக் கொட்டிவிட்டு, மழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது, கோடையில் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது என்று புலம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

உயிரூட்டுவதற்கான வழி

புத்தாயிரத்தின் தொடக்கம் முதல் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பாதுகாப்புக்காக குடியிருப்புச் சங்கங்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவருகின்றன. இந்தப் பின்னணியில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு சார்ந்து நியமிக்கப்பட்ட அறுவர் குழு 2008-ல் ஓர் அறிக்கையைத் தாக்கல்செய்தது. சென்னை மாநகராட்சி, சுற்றுவட்டார உள்ளாட்சிகள் 2012-க்குள் பூஜ்யக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாம் 2022-த்தைத் தொட்டுவிட்ட நிலையிலும்கூட எந்தப் பெரிய மாற்றமும் நிகழவில்லை.

குப்பை உருவாகும் இடத்திலேயே பிரிக்காதது, மக்கும் குப்பைகளை மக்க வைக்காமல் தவிர்ப்பது, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வது போன்ற அனைத்து நிலைகளிலும் தவறுகள் இழைக்கப்படுகின்றன. பெருங்குடியில் கொட்டப்படும் குப்பையில் 68% வீடுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவே. எஞ்சியவை வணிக நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள், தொழிற்சாலைக் கழிவுகள். கொட்டப்படும் மொத்தக் கழிவில் மூன்றில் ஒரு பங்கு மக்கக்கூடிய கழிவு, இன்னொரு பங்கு மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு. மக்கும் குப்பை வீட்டு எல்லையை, தெரு எல்லையைத் தாண்ட அனுமதிப்பது நம் தவறே. குடியிருப்பு, தெரு அளவில் மக்கும் குப்பை மையங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம். அதிலிருந்து கிடைக்கும் உரம் மண்ணுக்கும் தாவரங்களுக்கும் ஊட்டமளிக்கும்.

மனித உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு உள்ளுறுப்புகள் சத்தமின்றி இயங்குவதுபோல், நம்முடைய நகரங்களும் ஊர்களும் உயிர்த்திருப்பதற்கான ஆற்றலை மரங்கள், காடுகள், நீர்நிலைகள் போன்ற இயற்கை அமைப்புகளே தருகின்றன. ஆனால், நகர்மயமாக்கமும் மக்களும் ஏற்படுத்தும் கடுமையான நெருக்கடிகளால், இயற்கையின் உள்ளுறுப்புகள் வேகமாகச் செயலிழந்துகொண்டிருக்கின்றன. மனித சிறுநீரகங்களுக்கு டயாலிசிஸ் செய்வதுபோல் நகரங்களுக்குச் செயற்கைக் கருவிகள் கொண்டு உயிரூட்ட வழியில்லை. அவற்றை இயற்கை சார்ந்து மீட்டெடுப்பது மட்டுமே நம் கையில் உள்ள ஒரே வழி.

- ஆதி வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x