Published : 10 May 2022 07:31 AM
Last Updated : 10 May 2022 07:31 AM

எது சரியான கிராம சபை?

கடந்த மே 1, உழைப்பாளர் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. கரோனா ஊரடங்குக் காரணங்களால் தடைபட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த உழைப்பாளர் தின கிராம சபை சமூக ஆர்வலர்கள், கிராம இளைஞர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இம்முறை கிராம சபையில் ஊராட்சியின் வரவு-செலவுக் கணக்குகளைக் குறிப்பிடும் படிவம் 30-ஐ அச்சிட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும், 2021–22 நிதியாண்டின் வரவு-செலவு விவரங்களைப் பதாகையாகப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது, மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. ஆனால், தங்கள் ஊரின் மிக அத்தியாவசியமான விஷயங்கள் குறித்து ஊராட்சி நிர்வாகத்தோடு கலந்துரையாடுவதற்கும், அது குறித்து முடிவுகளை எடுத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கும் மிக ஆவலாக இருந்த மக்கள், இந்தக் கிராம சபையில் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.

கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விவாதப் பொருட்களாக அரசு பரிந்துரைத்தவற்றை மட்டுமே தீர்மானமாகப் பதிவுசெய்ய வேண்டுமென வாய்மொழி உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கிராம சபையில் மக்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளைத் தீர்மானமாக நிறைவேற்ற மறுத்த அலுவலர், “அரசு கொடுத்துள்ள விவாதப் பொருட்களை மட்டுமே தீர்மானமாக நிறைவேற்ற முடியும்” என்றார். சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்தக் காணொளி அதிர்ச்சியளிக்கிறது. “இதுபோலத்தான் எங்கள் ஊரிலும் நடைபெற்றது” எனப் பலரும் முறையிடுவதைப் பார்க்க முடிகிறது.

உண்மையில், அரசமைப்பு அப்படிச் சொல்லவில்லை. ஒவ்வொரு ஊராட்சியும் அந்தக் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருட்களைத் தாங்களாகவே தயாரித்து முடிவெடுத்து, அரசு கொடுக்கும் கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு, கிராம சபையில் பேச வேண்டும் - விவாதிக்க வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, மக்களின் கோரிக்கையைப் பதிவுசெய்வதுதான் கிராம சபையின் முதல் கடமை. அதற்கு மாறாக, தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கும் சேர்த்து, சென்னையில் தயாரிக்கப்படும் பட்டியலை மட்டுமே பேச வேண்டும், தீர்மானிக்க வேண்டும் என்பது அரசமைப்பை மீறுவது ஆகாதா? ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பை எதிர்க்கும் நாம், ஊராட்சிகளிடம் இப்படியா நடந்துகொள்வது? சில இடங்களில், கிராம சபையில் கலந்துகொண்டவர்கள் இதனைக் கண்டித்துத் தங்கள் ஊருக்குத் தேவையான விஷயங்களைப் பேசித் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

கிராம சபையில் மக்கள் அனைவரும் சமமாக அமர வேண்டும் என்பது விதி. மேலும், ஒரு கிராம சபைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த வேண்டியவர், சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்தான். இந்த இரண்டு அடிப்படை விதிகளும் இம்முறை எங்கெல்லாம் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்களோ அங்கெல்லாம் மீறப்பட்டதைப் பார்க்க முடிந்தது. அமைச்சர்களுக்கு என ஒரு சிறு திண்ணை போன்ற ஒரு மேடை அமைப்பு... பொதுமக்கள் தரையில்!

அடுத்த விதி மீறல், ஊராட்சித் தலைவர்கள் ஒரு ஓரமாக நின்றிருந்ததையும், அமைச்சர்கள் நடுநாயகமாக ஒரு அரசு விழாவை நடத்துவதுபோல கிராம சபைக் கூட்டத்தைத் ‘தலைமையேற்று’ நடத்தியதையும் பார்க்க முடிந்தது. கிராம சபைக் கூட்டம் அரசு அறிவிப்புகளை வழங்கும் கூட்டம் அல்ல. ஊராட்சியில் இதுவரை நடைபெற்ற திட்டங்கள் மற்றும் செலவினங்கள் குறித்த ஆய்வை மக்கள் மேற்கொள்வது, ஊராட்சி நிர்வாகமும் மக்களும் ஊருக்குப் பொதுவான விஷயங்களை விவாதித்து முடிவெடுப்பது ஆகியவைதான். கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பே தவிர, கூட்டத்தை அவர் நடத்த வேண்டும் என்பதில்லை. கூட்டத்தை ஊராட்சித் தலைவரே முன்னின்று நடத்துவார். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டமும் அதைத்தானே சொல்கிறது.

சமீபத்தில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் வழக்கமாக நான்கு நாட்கள் கட்டாயம் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களை 6 நாட்களாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது வரவேற்கத்தக்கது. இருப்பினும், கிராம சபைக் கூட்டம் என்பது ஆறு நாட்களையும் தாண்டி, மக்களின் தேவைக்கேற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு ஆண்டில் கூட்டிக்கொள்ளலாம் என்பதும் அதற்குச் சம்பந்தப்பட்ட ஊராட்சி, அரசின் முன் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்பதும் குறிப்பாக, மாவட்ட ஆட்சியரின் முன்னனுமதி பெறத் தேவை இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு அரசமைப்பு, உள்ளூர் மக்களுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தை மற்றுமொரு அரசுக் கூட்டமாக, அறிவிப்புகள் வழங்கும் நிகழ்வாக மாற்றிவிடுவார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இனிவரும் காலத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் என்பது சம்பந்தப்பட்ட ஊராட்சி மூலம் தயாரிக்கப்படும் விவாதப் பொருட்களோடு, அரசு கொடுக்கும் விவாதப் பொருட்களும் இணைக்க வேண்டும். குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் முன்மொழியும் விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை தீர்மானமாக நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாது. இரண்டாவது, முதல்வரே கலந்துகொண்டாலும் கிராம சபையில் ஒரு பார்வையாளராகத்தான் அவர் கலந்துகொள்ள முடியும். ஊராட்சித் தலைவர்தான் கிராம சபையை நடத்த வேண்டும். கடந்த முறை பாப்பாப்பட்டி கிராம சபை (அக்டோபர் 2, 2021) கூட்டத்திலும் சரி, இம்முறை செங்காடு (24.04.2022) கிராம சபைக் கூட்டத்திலும் சரி, முதல்வர்தான் கூட்டத்துக்குத் தலைமை ஏற்றார். ஊராட்சித் தலைவர்தான் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்த வேண்டும்.

தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக ஆக வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு ஊராட்சியையும் ஒவ்வொரு கிராம சபையையும் அதில் பங்காளியாக்க வேண்டும். சென்னையிலிருந்து அனுப்பப்படும் பட்டியலுக்குக் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும் என்று நினைக்கலாகாது. சம்பந்தப்பட்ட கிராம மக்கள் ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கான உரிமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டியது.

பல சமூக ஆர்வலர்கள், கிராம இளைஞர்கள், மகளிர் ஆகியோரின் தொடர் முயற்சியால், தற்போது கிராம சபை குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ள நிலையில், இனி வரும் காலத்தில் சரியான முறையில் அவை நடத்தப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

- நந்தகுமார் சிவா, பொதுச்செயலாளர், தன்னாட்சி அமைப்பு. தொடர்புக்கு: nanda.mse@gmail.com

To Read this in English: What is the right Gram Sabha?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x