சி.சு.செல்லப்பாவின் சிறார் உலகம்!

சி.சு.செல்லப்பா படைப்புகள்
எழுத்துப் பிரசுரம், சென்னை-40. விலை: ரூ.650
தொடர்புக்கு: 8925061999
சி.சு.செல்லப்பா படைப்புகள் எழுத்துப் பிரசுரம், சென்னை-40. விலை: ரூ.650 தொடர்புக்கு: 8925061999
Updated on
2 min read

மலையாள இலக்கியத்தில் பெரியவர்களுக்கான படைப்புகளில் தீவிரமாக இயங்கியவர்கள் சிறார் இலக்கியத்திலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், தமிழில் அப்படியான நிலை இல்லை என்ற வருத்தம் பலருக்குமே உண்டு. ஆயினும் விதிவிலக்காக, கு.அழகிரிசாமி, கிருஷ்ணன் நம்பி உள்ளிட்டோர் சிறார் ஆக்கங்களையும் படைத்துள்ளனர். அந்த வரிசையில், சி.சு.செல்லப்பாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது. ‘வாடிவாசல்’ உள்ளிட்ட நாவல்கள், சிறுகதைகள் சிலாகிக்கப்பட்ட அளவு, அவரின் சிறுவர்களுக்கான கதைகள் கவனிக்கப்படவில்லை.

சி.சு.செல்லப்பாவின் ஒட்டுமொத்தப் படைப்புகள் வெளியானதில், குழந்தைகளுக்கான கதைகள் எனும் பிரிவில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 1977-ல் அவர் எழுதிய முன்னுரை ஒன்றில், “ ‘நீர்க்குமிழி’, ‘பழக்க வாசனை’ என்ற இரண்டு சிறு தொகுப்புகளை இளம் சிறுவர்களும் படிக்கத்தக்கதாக இருக்கும் சிறுகதைகள் அடங்கியிருக்கும் வகையில் வெளியிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, சிறாருக்கான படைப்புகள் என்ற பிரக்ஞையோடு அவர் எழுதியிருப்பது உறுதியாகிறது.

சி.சு.செல்லப்பாவின் சிறார் கதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, ஒரு காட்சி அல்லது அனுபவத்தின் வழியே வாழ்க்கைக்கான நீதியை மறைமுகமாகச் சொல்லுதல். இரண்டு, பல தலைமுறைகளாகச் சொல்லப்பட்டுவரும் பேய்க் கதைகள். மூன்றாவது, அவரின் சிறுகதைகளின் நீட்சியைப் போல, வாழ்வில் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பேசுதல். பல ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட முத்து, பெய்யும் பெருமழையில் வெளியே வந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. அங்கு சந்திக்கும் நீர்க்குமிழியுடன் அது மேற்கொள்ளும் உரையாடலில் யார் பெரியவர், யார் அழகானவர் என்ற போட்டி வாதங்களே ‘நீர்க்குமிழி’ கதை. இதைப் போலவே ‘தக்க தண்டனை’, ‘தாயும் குட்டியும்’, ‘திருத்தம்’, ‘பொன்னொளி தீபம்’ ஆகிய கதைகள் முதல் பிரிவுக்குள் அடங்கிவிடுகின்றன.

காலையில் நீர் இறைக்கச் செல்வோம் என்று இரவில் சத்தமாகச் சொன்னதால், முன்கூட்டியே பேய் வந்து அவரை எழுப்பிச் செல்வதும், அந்தப் பேயிடமிருந்து தப்பிப்பதை விவரிப்பதும் ‘சீ நாயே’ கதை. இதோடு ‘மந்திரக்கட்டு’, ‘மந்திரக்கட்டு 2’ ஆகியவை காலங்காலமாகச் சொல்லப்படும் பேய்க் கதைகள் அடிப்படையிலான கதைகளே. சர்க்கஸிலிருந்து தப்பி காட்டுக்கு வரும் புலி, அங்கு வேட்டையாடி உணவுத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் திரும்பவும் சர்க்கஸுக்கே செல்வதைப் பற்றிய ‘பழக்க வாசனை’, தலித் சிறுமியும் ஆதிக்க சாதிப் பெண்மணியும் ஒரே வயல் வரப்பில் எதிரெதிரே நிற்கையில் நிகழும் மோதல் குறித்த கதையும், வண்டி இழுக்கும் குதிரை என நம்பி நாட்டியக் குதிரையை வாங்கி வந்து அவதிப்படும் ஒருவனின் கதையான ‘குதிரை’ உள்ளிட்ட மற்ற கதைகள் மூன்றாம் பிரிவுக்குள் அடங்கும்.

சி.சு.செல்லப்பாவின் புகழ்பெற்ற கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் சில, சிறார் கதைகளிலும் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, ‘ஸரஸாவின் பொம்மை’ கதையிலும் இதில் உள்ள பேய்க் கதைகளிலும் கதைசொல்லி அத்தான் என்று அழைக்கப்படுகிறார். ஸரஸாவும் ஒரு பாத்திரமாக வருகிறார். மாட்டை மையமாக வைத்து ‘வாடிவாசல்’ எழுதியதைப் போல ஒரு மாடு, வயலில் உழைத்த தன் சகோதர மாட்டின் உழைப்புக்கான பங்கைக் கேட்கும் விதமான கதையாக ‘நந்தி – நந்தன்’ கதையை எழுதியிருப்பார். காந்தியம் மீது அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தவர் சி.சு.செல்லப்பா. ‘முன்னுக்குப் பின்’, ‘நினைவுச் சின்னம்’ ஆகிய சிறார் கதைகளில் அது வெளிப்பட்டுள்ளது. இந்த 16 கதைகளில் ‘ஆசையும் நிராசையும்’, ‘நந்தன் – நந்தி’, ‘அவள் மேல் ஜாதியாம்’, ‘பழக்க வாசனை’, ‘குதிரை’ ஆகிய கதைகள் என்னைப் பெருமளவில் ஈர்த்தவை.

சி.சு.செல்லப்பாவின் சிறார் கதைகளை அப்படியே இந்தக் காலச் சிறுவர்களுக்கு அளிப்பதில் சில இடையூறுகள் உள்ளன. உதாரணமாக, பண மதிப்பு எல்லாம் அணா கணக்கில் உள்ளது. அதேபோல தொந்தம் போன்ற சில வார்த்தைகளை இப்போதுள்ள சிறுவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அதனால், உள்ளடக்கம் கொஞ்சமும் சிதையாமல் சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்து வெளியிடும்பட்சத்தில், சி.சு.செல்லப்பா, தற்போதைய சிறார் உலகிலும் பயணம் செய்வார்: உரையாடுவார்; சக மனிதர்மீதான எல்லையற்ற அன்பு பரிமாற்றத்தைப் பகிர்வார்.

- விஷ்ணுபுரம் சரவணன், ‘நீலப்பூ’ உள்ளிட்ட சிறாருக்கான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in