Last Updated : 21 May, 2016 09:17 AM

 

Published : 21 May 2016 09:17 AM
Last Updated : 21 May 2016 09:17 AM

மாற்றம் - முன்னேற்றம் - ஏமாற்றம்

முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்துக் களமிறங்கிய பாமக இந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூடப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதிமுக, திமுக, காங்கிரஸுக்கு அடுத்த நிலையில், நான்காவது பெரிய கட்சியாக வாக்கு வங்கி சார்ந்து தன்னை நிறுத்திக்கொண்டாலும், முதல்வர் வேட்பாளராக அது முன்னிறுத்திய அன்புமணி தன் தொகுதியிலேயே மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

1989-ல் உருவான பாமக அந்த ஆண்டிலேயே மக்களவைத் தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்டது. 15 லட்சத்துக்கும் மேலான வாக்குகளை அள்ளினாலும், எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 1991-ல் பிரதமர் ஆனார் வி.பி.சிங். மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க உத்தரவிட்டார். அப்போது கிடைத்த இடஒதுக்கீடு உரிமைகள் வன்னியர் சமூகத்தின் மத்தியில் பாமகவை பலமான ஒரு கட்சியாக வளர்த்தெடுத்துக்கொள்ள அதன் நிறுவனர் ராமதாஸுக்கு உதவியது.

1991 சட்டமன்றத் தேர்தலில் 14 லட்சம் வாக்குகளைப் பெற்றது பாமக. அதன் முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டி ராமச்சந்திரன் ஆனார். 1996-ல் சட்ட மன்றத்துக்குள் பாமக சார்பில் நான்கு பேர் போனார்கள். 1998-ல் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. பாமகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 2001-ல் 20 ஆக உயர்ந்து உச்சிக்குப் போனது. அடுத்த தேர்தலில் 18 ஆகக் குறைந்தது. 2011-ல் திமுகவோடு கூட்டணி. 30 இடங்களில் போட்டியிட்டு 3-ல் வென்றது. 1991 மக்களவைத் தேர்தலில் பாமக 12 லட்சத்துக்கும் மேல் வாக்குகளை வாங்கினாலும் எதிலும் வெல்லவில்லை. 1998-ல் 4 உறுப்பினர்களோடு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது. 1999-ல் இந்த எண்ணிக்கை 5 ஆனது. 2004-ல் 6 ஆனது.

புதிய பாதை, புதிய பயணம்

இதன் தொடர்ச்சியாக, ராமதாஸின் மகன் அன்புமணி கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு, 2004-ல் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். மத்திய சுகாதார அமைச்சர் பதவியையும் அவருக்குப் பெற்றுத் தந்தார் ராமதாஸ். கட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் வசம் வந்தது. ஒருபுறம் புகையிலை லாபிக்கு எதிரான நடவடிக்கை உட்பட, அமைச்சரவையில் சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்தாலும், தனியாருக்கு ஆதரவாகப் பொதுத்துறை நிறுவனங்களை மூடத் துணிந்தது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடுகளில் தொடர்பு - ஊழல் குற்றச்சாட்டுகள், கட்சிக்குள் மூத்தவர்களைப் புறந்தள்ளி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார் அன்புமணி. எனினும், கட்சியில் ராமதாஸுக்கு இருந்த செல்வாக்கு எல்லோர் வாய்களையும் மூடியது.

2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. அனைத்து இடங்களிலும் தோற்றது. பதிவான வாக்குகளில் 6% வாக்குகளைப் பெற முடியாததால், மாநிலக் கட்சி அந்தஸ்தையும் இழந்தது (ஆனாலும் ஆறாண்டுகளுக்கு சின்னத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற விதியின்படிதான் 2016 தேர்தலில் மாம்பழம் சின்னத்தை பாமக பெற்றுள்ளது). குறிப்பிட்ட உயரத்துக்குப் போன பிறகு, தொடர்ந்து சரிந்தது பாமக.

ஆரம்பத்தில் எளிய மக்களின் உரிமைகளைப் பேசும், சமூகநீதியை முன்னிறுத்தும் கட்சியாக இருந்தது, பின்னர் சாதிய அரசியல் சக்தியாக மாறியது. ஒவ்வொரு முறை அரசியல்ரீதியாகச் சறுக்கல்களைச் சந்திக்கும்போதும் சாதியை அது கையில் எடுக்கவும் அரசியல் வெற்றிகளுக்குப் பின் வளர்ச்சியைப் பேசுவது எனவும் அதன் போக்கு இருந்தது. முக்கியமாக, திமுக - அதிமுக இரு கட்சிகள் மீதும் மாறி மாறிப் பயணித்து, பேரத்தை உயர்த்திக்கொள்ளும் உத்தியையும் அது கையாண்டது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது.

இந்த அனுபவங்களிடையே அன்புமணி தேர்ந்தெடுத்த பாதை ‘புதிய பாதை, புதிய பயணம்.’ இன்றைக்கு சீமான் பேசும் பல விஷயங்களை நான்காண்டுகளுக்கு முன்னரே பேசினார் அன்புமணி. தமிழகத்தைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்றவர், தமிழ்ச் சாதிகள் எனும் வரையறையையும் பெரிய அளவில் முன்வைத்தார். கூடவே இனி திமுக, அதிமுக கூட்டணிப் பக்கம் செல்ல மாட்டோம் என்றும் கூறினார். அது எடுபடவில்லை. இடையில் தலித் - தலித் அல்லாதோர் எனும் இரு தரப்புகளை உருவாக்கும் அரசியலுக்கும் அது முயன்றது.

பாமக தன் வரலாறு நெடுக சாதிய அடையாள அரசியலிலிருந்து வெளியேறவும் அனைத்துச் சமூகங்களுக்கான இயக்கமாகத் தன்னை வெளிப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் இங்கே அவசியம் பதிவுசெய்யத்தான் வேண்டும். இதனிடையே, மோடியின் வெற்றியையும் அவருடைய வளர்ச்சி முழக்கத்தின் ஈர்ப்பையும் கவனித்த அன்புமணி, கட்சியின் பாதையை அதை நோக்கித் திருப்பினார். சாதிய அடையாளங்களிலிருந்து தாம் வெளியேறிவிட்டதாகவும் அறிவித்தார். ஆனால், உள்ளூர் அரசியலில் பாமகவால் சாதி அரசியலிலிருந்து வெளியேறவே முடிய வில்லை என்பதை உள்ளூர் மக்கள் சொன்னார்கள். தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஆணவக் கொலைகள் எல்லாவற்றின் பின்னணியிலும் ‘இளவரசன் மரணம்’ நினைத்துப் பார்க்கப்பட்டது. பாமகவை சந்தேகக் கண்களிலிருந்து எவராலும் வெளியே கொண்டுவர முடியவில்லை.

அடுத்து?

இப்படியான சூழலில்தான் ‘மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி’எனும் முழக்கத்தோடு இந்தத் தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே றெக்கை கட்டிப் பறந்தார் அன்புமணி. ஆக்கபூர்வ தேர்தல் அறிக்கையோடு நிறைய விஷயங்களை முன்னிறுத்திப் பேசினார். எல்லாத் தொகுதிகளிலும் தனித்தே பாமகவை நிறுத்தினார். வெளியில் அவர் சொன்னதைப் போல ஆட்சியைக் கைப்பற்றும் கனவு அவ்வளவு எளிதல்ல என்றாலும், மொத்தத் தொகுதிகளில் 10% தொகுதிகளையேனும் கைப்பற்ற முடியும் என்று நினைத்தார்கள் பாமகவினர்.

பாமக எல்லாத் தொகுதிகளிலும் தோற்றதோடு, அன்புமணியும் தோற்றிருப்பது பெரிய அடி. வாக்கு வீதத்திலும் பெரிய வளர்ச்சியை அது எட்டவில்லை. சரியாகச் சொல்வதானால், அன்புமணி கவனிக்கவைத்தார்; ஆனால், எவர் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கவில்லை. அதோடு, அது பெரிதென நம்பியிருக்கும் வன்னியர் சமூகத்தின் நம்பிக்கையையும் இழக்க ஆரம்பித்திருப்பதைத் தேர்தல் முடிவுகள் சுட்டுகின்றன. பாமக ஆளுங்கட்சியாக ஆக வேண்டும் என்றால், அது ஒரு தரப்பின் கட்சியாக அல்லாமல் எல்லோருக்குமான கட்சியாவதே ஒரே வழி. மக்களிடம் நம்பிக்கை உருவாக்குவது என்பது வார்த்தைகளால் நடப்பது அல்ல; செயல்பாட்டின் விளைவு. அன்புமணி உண்மையாகவே செயல் வீரராக மாறினால் மட்டுமே பாமகவால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்!

தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x