Published : 07 May 2022 02:01 PM
Last Updated : 07 May 2022 02:01 PM

திமுக அரசு @ 1 ஆண்டு | சூழலியல் - ‘3 இயக்கங்கள் அட்டகாசம்... ஆனால், அந்த ஹைட்ரோ கார்பன்?’

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் தொடர்பான அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்? - இது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் கோ.சுந்தர்ராஜன்.

நிறைகள்: "சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இதற்கு முன்பிருந்த எந்த ஆட்சியும் செய்திராத பல்வேறு தொலைநோக்குத் சுற்றுச்சூழல் திட்டங்களை திமுக அரசு அறிவித்து செயல்படத் தொடங்கியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே சுற்றுச்சூழல் துறையின் பெயரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என மாற்றம் செய்ததும், “காலநிலை மாற்றத்தை இந்த மானுடம் சந்திக்கும் பெரும் சவாலாக நான் பார்க்கிறேன்” என முதல்வரே பேசியதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுச்ச்சூழல் ஆர்வலர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் தொடர்ச்சியாக பல்வேறு திட்ட அறிவிப்புகளும் அரசாணைகளும் வெளியாகின.

அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு காலநிலை இயக்கம், தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் என்கிற மூன்று இயக்கங்களைக் குறிப்பிடலாம். இந்த இயக்கங்களை செயல்படுத்த கூடுதல் நிதியைப் பெறுவதற்காக தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் ஒன்றையும் அரசு தொடங்கியுள்ளது. இப்படி சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளின் செயல்பாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தால் தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள பெரும் சிக்கல்களை சமாளிக்கும் நோக்கிலே அமைந்துள்ளன.

குறைகள்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு சுற்றுச்சூழல் தொடர்பாக வெளியிட்ட அறிவுப்புகளில் பெரும்பாலான அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளது அல்லது அப்போது எடுத்த நிலைப்பட்டிலேயே தொடர்கிறது. ஆனால், காவிரி டெல்டாவின் நிலைத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூடுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் கனிம வளங்கள் சுரண்டப்படுவதை குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து கனிம வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் பெரும் ஏமாற்றமாகவே தொடர்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

> குப்பை மேலாண்மைக்கு குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலை போன்ற அபாயகரமான திட்டங்களை நம்புவதையும் அரசு தவிர்க்க வேண்டும்.

> அதிக மாசு உண்டாக்கும் அனல்மின் நிலையங்களைக் கைவிட்டு, குறைந்த செலவில் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

> தமிழ்நாடு தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலியல் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவும் அரசு முனைய வேண்டும்."

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x