Last Updated : 12 Jun, 2014 09:00 AM

 

Published : 12 Jun 2014 09:00 AM
Last Updated : 12 Jun 2014 09:00 AM

மறக்கப்பட்ட மாபெரும் பதிப்பாளர்!

தமிழ் பிரசுர உலகில் தனித்து நின்ற ஒரு லட்சியப் பதிப்பாளனின் வாழ்க்கைப் பயணம்...

தமிழர்பால் காலம் இரங்கிய பொன்நேரம். அது ஓர் அதிமானுடனைத் தோன்றச் செய்ய உளங்கனிந்தது. வை. கோவிந்தன் பிறந்தார். பஞ்ச பூதங்களால் ஆனது உலகம் என்பதுபோல வை. கோவிந்தனின் உலகம் புத்தகங்களால் ஆனது.

புத்தகங்களின் மீது அவர் கொண்டிருந்த அமரக் காதலின் பித்து, அவரை இறுதிவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அதனால், அச்சு ஊடகத்தில் மிக எளிமையாக நிகழ்வதுபோல அதிசயங்கள் சம்ப

வித்தன. குழந்தை வளர்ப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, “தலையில் வைத்தால் பேன் கடிக்குமோ, தரையில்விட்டால் எறும்பு கடிக்குமோ என்றஞ்சி நெஞ்சில் வைத்து வளர்த்தோம்” என்று சொல்வதுண்டு. வை. கோவிந்தனும் இப்படித்தான் தன் நெஞ்சிலேற்றி நூல் வளர்த்தார். அதில் அளப்பரிய சிரத்தைகொண்டிருந்தார்.

பல திசைகளில் விரிந்த புதுமை இதழ்

கோவிந்தனின் தொழில் கவனத்தைப் பற்றி, ரா.கி. ரங்கராஜனின் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் சில வாசகங்கள்:

“…அதிபர் கோவிந்தன் ஃபாரம் அச்சாகும்போது வாசல் புறத் திண்ணையில் அமர்ந்து படிப்பார். உடைசல் ‘டைப்’ தென்பட்டால் மெஷினை நிறுத்தி, அந்தக் குறிப்பிட்ட எழுத்தை உருவி எடுத்து வேறு நல்ல டைப்பைப் பொருத்தச் சொல்லிவிட்டு, உடைசல் டைப்பை வாசலுக்கு எடுத்துப் போய்த் தெருவில் போட்டுவிட்டுத் திரும்புவார். (அச்சகத்தில் விட்டு வைத்தால் மறுபடி அதே உடைசல் டைப் வரக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு).

அவர் நடத்திய ‘சக்தி’ (1939) மாத இதழ் பதினாறு ஆண்டுகள் வெளிவந்தது. சகல துறைகளையும் ஆட்கொண்டு, புதுப் புது கிளைகளுடன் திசைகளில் விரிந்த புதுமை இதழ். தி.ஜ.ர., சுப. நாராயணன், ரகுநாதன், கு. அழகிரிசாமி, ரா. கி. ரங்கராஜன், தமிழ்வாணன், அழ. வள்ளியப்பா, வலம்புரி சோம நாதன், ம.ரா.போ.குருசாமி போன்ற பலர் சக்தி ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். சக்தி இதழைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘சரஸ்வதி’ பத்திரிகை ஆசிரியரும் வை.கோ-வின் நண்பருமான எழுத்தாளர் விஜயபாஸ்கரன், “…அன்றைய தமிழ்ப் பத்திரிகைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு வழவழப்பான, தரமான காகிதத்தில் பளிச்சென்று அச்சடிக்கப்பட்டு வெளி வந்த ‘சக்தி’யில் தலைசிறந்த கவிஞர்கள் பாரதிதாசன், தேசிக விநாயகம்பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை ஆகியோரின் கவிதைகளும், டி.கே.சி., வெ. சாமிநாதசர்மா, மு. அருணாசலம், ராய.சொ., எஸ். வையாபுரிபிள்ளை போன்ற தமிழறிஞர்களின் கட்டுரைகளும், புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் பலரின் சிறுகதைகளும் இதழ்தோறும் வெளிவந்தன…” என்று எழுதுகிறார்.

மக்களுக்கு இதுதான் வேண்டும் என்று அன்று விடாப்பிடியாக இருந்தவர் வை.கோ. இந்த நேரத்தில், நான்கு சுவர்களுக்கு உள்ளே இருந்து கொண்டு மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்று இறுமாப்புடன் முடிவுசெய்து தன் இழிந்த ரசனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ‘ஆசிரியர்கள்’ நிறைந்த இந்தக் காலத்தின் மலிவு ஆயாசமூட்டுகிறது.

வை. கோவிந்தன் தன் ‘சக்தி காரியாலயம்’ வாயிலாக ‘சக்தி’ மாத இதழையும், குழந்தைகளுக்கென்று ‘அணில்’ என்ற வார இதழையும், ‘மங்கை’ என்ற பெயரில் பெண்களுக்கான மாத இதழையும், சிறுகதைகளுக்கு ‘கதைக் கடல்’ எனும் மாத வெளியீட்டையும், காந்தியின் கட்டுரைகளை மட்டுமே தாங்கி வெளிவந்த மாதம் ஒரு நூலையும், ‘குழந்தைகள் செய்தி’ என்ற இதழையும் நடத்தினார். கொடையென்றல்ல, அவர்தம் இயல்பின் கொண்டாட்ட வெளிப்பாடுகள் இவை. சக்தி காரியால யத்தின் மூலமாக தமிழில் முதன்முதலாக பாரதியின் கவிதைத் தொகுதியை ஒன்றரை ரூபாய்க்கு மலிவுப் பதிப்பாக வெளியிட்டதைத் தொடர்ந்து திருக்குறள், கம்பராமாயணம் ஆகியவற்றையும் மலிவுப் பதிப்பாக வெளியிட்டு சாதனை படைத்தார். அது பதிப்புத் துறையில் ஏற்பட்ட ஒரு புரட்சி. ராஜாஜியின் 350 பக்கங்கள் கொண்ட ‘வியாசர் விருந்தை’ இவர் முயற்சி யால்தான் தினமணி ஒரு ரூபாய்க்கு வெளியிட்டது. வெளி வந்த அன்றே இந்த நூல் 80 ஆயிரம் பிரதிகள் விற்றது.

டால்ஸ்டாய் எழுதிய ‘இனி நாம் செய்ய வேண்டியது யாது?’ என்ற நூலைப் பிரசுரித்து தன் வெளியீட்டைத் தொடங்கிய சக்தி காரியாலயம், தயாரிப்புத் தரத்திலும் உள்ளடக்கத்திலும் மிகு உயர்வுடன் ஏறத்தாழ 200 நூல்களை வெளியிட்டது. டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, பாரதியின் மனைவி செல்லம்மா பாரதியை எழுத வைத்துப் பிரசுரித்த ‘பாரதியார் சரித்திரம்’

வெ. சாமிநாதசர்மா மொழி பெயர்த்த ‘பிளேட்டோவின் அரசியல்’ ஆகிய நூல்களும் ஜே. சி. குமரப்பா, மார்க்ஸ், லெனின், மாக்சிம் கார்க்கி, புதுமைப்பித்தன், ஏ.கே. செட்டியார், கு. அழகிரிசாமி ஆகியோரின் நூல்களும் அவற்றில் சில.

சமரசங்களுக்கு இடமில்லை

தன் பத்திரிகைக்கான பெரிய விளம்பர வருவாய் இழப்பாகக்கூடிய நிலையிலும் அவர்தம் தார்மிகம் சலனமுற்றதில்லை; சமரசங்களைச் சகிப்பதுமில்லை. தன்னைச் சூழ்ந்த அனேகரின் உயர்வுக்குக் காரணமானவர் வை. கோவிந்தன். மிகப் புகழ்பெற்றவராய், எண்ணற் றோரின் அன்புக்குரியவராய், தலைமுறைகளின் நன்றிக் கடனுக்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்த வை. கோவிந்தன் வெற்றிகளீட்டியதுபோன்று ஏனோ விதியால் தோல்விகளாலும் தாக்குண்டார். தரித்திரப் புழுதியில் நலனழியச் சரிந்தார் தன் மனைவி மக்களுடன். பிறகு அவர் எழவில்லை. அவர் அரசோச்சிய காலத்தைப் பற்றி சரஸ்வதி விஜயபாஸ்கரன் நினைவுகூர்கிறார்:

“சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று சங்கீத வித்வத் சபை (மியூஸிக் அகாடமி) இருக்கும் இடத்தில்தான் அன்று சக்தி காரியாலயம் இருந்தது. போர்த்துக்கீசியர் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம். முன்புற வராந்தாவில் வலது கைப் பக்கத்தில் ஒரு சிவப்பு நிறத் திண்ணை, சோபா மாதிரியிருக்கும். வை.கோ-வின் யதாஸ்தானம் அதுதான். அந்த வராந்தா ஒரு சங்கப் பலகை. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று எப்போதும் சபை நிறைந்திருக்கும். மாடியில் அவரது குடும்பமும் இருந்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் ரகசியமாகச் சந்தித்துக்கொண்ட இடமும் அவரது மாடிதான்.”

வை. கோவிந்தனின் மகன் அழகப்பன் நேர்காணலில் சொன்ன ஒரு சம்பவம் மேற்குறித்த காட்சியின் இன்னொரு பக்கமாகிறது:

“… கடைசியா அப்பா - ராயப்பேட்டை பக்கம் சத்யசாய் லாட்ஜின்னு கவுடியா மடத்துக்குப் பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்கு. அந்த பில்டிங்குலதான் - யார் உதவியும் இல்லாம ஒரு ரூம் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தாங்க… மியூஸிக் அகாடமி இருக்கிற அதே ரோடுலதான். நாங்கெல்லாம் ஊருல இருந்தோம். அப்பாவால குடும்பத்த சென்னையில வைக்க முடியல. அவங்க தனியா இருந்து ரொம்பத் துன்பப்பட்டாங்க… இனி எழுதித்தான் சம்பாதிக்கணும்கிற நெலம வந்தபோது ஆள் உயிரோட இல்ல. எந்தக் கஷ்டமும் அவங்களப் பெரிய அளவுல பாதிச்சது கிடையாது. எப்போதும் படிச்சிக்கிட்டேயிருப்பாங்க. அவங்க எழுத முயற்சி செஞ்சப்போ அவங்களுக்குச் சாப்பாட்டுக்கே ரொம்ப சிரமமாயிருந்துச்சி…”

தமிழின் தீரா சாபத்துக்கான முக்கிய சாட்சிகளில் இதுவும் ஒன்று. வாரி வழங்கிய பெருந்தகையோர் வழியொதுங்கி நிராதரவாய்ப் பரிதவித்து நிற்பது…

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் அமரர் ராதாகிருஷ்ணமூர்த்தி ஒரு முறை நேர்ப்பேச்சில் சொன்னார்:

“எனக்கும் வை.கோ-வுக்கும் மிகவும் நெருக்கமான பழக்கம் உண்டு. எப்போதும் அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். கடைசி காலத்தில் சென்னையில் தன்னந்தனியா ரொம்பக் கஷ்டப்பட்டார். அரிதாக என்றாவது என்னைத் தேடி வருவார். மிகமிகத் தயங்கிக் கூச்சப்பட்டு ஏதாவது பணம் கேட்பார். நான் கொடுப்பேன். எனக்கு நிச்சயமாகத் தெரியும். வழியில் ஏதாவது நல்ல புத்தகங்களைப் பார்த்தால் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. இருக்கும் பணத்தைக் கொடுத்து புத்தகம் வாங்கிவிடுவார். இந்தக் காலங்களில் நான் பல முறை அவர் நிலைகுறித்து மனங் கலங்கி அழுதிருக்கிறேன்…”

- யூமா வாசுகி, எழுத்தாளர், தொடர்புக்கு: marimuthu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x