Last Updated : 11 May, 2016 09:47 AM

 

Published : 11 May 2016 09:47 AM
Last Updated : 11 May 2016 09:47 AM

அரசியல் பழகு: போடுங்கம்மா ஓட்டு!

இந்த முறை நாகப்பட்டினம் போயிருந்தபோது கொடியம்பாளையம் போயிருந்தேன். கொள்ளிடம் ஆற்றின் நடுவேயுள்ள தீவுக் கிராமம் இது. என்ன பிரச்சினை என்றாலும், அதிகாரிகளைப் பார்க்க ஒரு மணி நேரம் படகில் பயணித்து, கரையிலிருந்து பஸ்ஸில் பயணித்துதான் மக்கள் நாகப்பட்டினத்தை அடைய வேண்டும். இந்தத் தேர்தலிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் படகில் செல்லப்போகும் ஊர் இது.

உலகின் உயரமான வாக்குச்சாவடியின் அமைவிடம் ஹிக்கிம். இமாச்சலப் பிரதேசத்தில் 15 ஆயிரம் அடி உயரத்திலிருக்கும், பனி கொட்டும் லாங்சே, கோமிக் இரு கிராமங்களையும் சேர்ந்த 80 குடும்பங்களுக்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடி இது. சத்தீஸ்கரில் அடர் வனத்தின் நடுவே ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் ஏராளமான கிராமங்கள் உண்டு. சேரதந்த் அவற்றில் ஒன்று. தேவராஜ், அவருடைய மனைவி பூளாவாட்டி, மகன் மஹிபால் இந்த மூவருக்காக மட்டும் ரொம்பக் காலம் இங்கே வாக்குச்சாவடி அமைத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது பூளாவாட்டி இறந்துவிட்டார். இரு ஓட்டுகளுக்காக மலைப் பாதையில் பயணிக்கிறது தேர்தல் குழு. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கதைகளைப் பேசுகிறோம். அப்படியென்றால், லட்சக்கணக்கான கிராமங்களைக் கொண்ட ஒரு நாட்டில், முதல் பொதுத் தேர்தலை நடத்துவது எவ்வளவு பெரிய காரியமாக இருந்திருக்கும்!

முதல் தேர்தலையொட்டி, 22.11.1951 அன்று தன் வானொலி உரையில் நேரு குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் இந்தியத் தேர்தலின் பிரம்மாண்டத்தை நமக்குச் சொல்லும்: “மொத்தமாக 3,293 தொகுதிகள். மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை என மூன்று அவைகளுக்கும் சேர்த்து 4,412 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏறத்தாழ 2.24 லட்சம் வாக்குச்சாவடிகள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உத்தேசமாக ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, நான்கு காவலர்கள், ஐந்து உதவியாளர்கள் தேவை. ஆகக் குறைந்தது 16,500 உதவியாளர்கள், 56,000 அலுவலர்கள், 2.8 லட்சம் தன்னார்வலர்கள், 2.24 லட்சம் காவலர்கள்…”

உண்மையான சவால் இதுவல்ல. ஓட்டு என்றாலே என்னவென்று விளக்க வேண்டி இருந்த வாக்காளர்கள். அன்றைக்கு நாட்டின் 17.6 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தறிவற்றவர்கள். பல மேற்கத்திய நாடுகளே அப்போது சொத்துள்ளவர்களுக்கும் படித்தவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமையை அளித்தன. குறிப்பாக பெண்கள், கருப்பினத்தவரை அவை ஒதுக்கின. சுதந்திர இந்தியா தம் குடிமக்கள் எல்லோருக்கும் வாக்குரிமையைக் கொடுக்கவிருந்தது. அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கீட்டுடன். வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமாகப் பலர் இம்முடிவைப் பைத்தியக்காரத்தனம் என ஏசினர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ‘ஆர்கனைஸர்’ எழுதியது: “அனைவருக்கும் வாக்குரிமை எனும் முடிவின் தோல்வியைப் பார்க்க நேரு உயிரோடு இருப்பார்.”

சுகுமார் சென் சாதித்தார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தந்தை. அடர் காடுகளிலும், பனி மலைகளிலும், பாலைவனங்களிலும், பள்ளத்தாக்குகளிலும், சமவெளிகளிலும் என எங்கும் நிறைந்திருந்த இந்நாட்டின் கோடிக்கணக்கான வாக்காளர்கள் முன்னிரவிலும், அதிகாலையிலும் வாக்குச்சாவடிகளை அடைந்து, காத்திருந்து தங்கள் வாக்குகளை அளித்தனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்த நாடு சுக்குநூறாக உடையும் எனும் ஆரூடத்தை உடைத்தெறிந்து தேர்தல் ஜனநாயகத்தைத் தமதாக்கிக்கொண்டனர்.

இந்திய ஜனநாயகத்தின் மீது முன்வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களில் முக்கியமானது நம்முடைய தேர்தல் முறை. “100 பேர் வாக்களிக்கும் இடத்தில் 51 பேர் வாக்களித்த கட்சி 100 மதிப்பைப் பெற்றுவிடுகிறது; 49 பேர் வாக்களித்த கட்சி 0 மதிப்புக்கு இறங்கிவிடுகிறது. இதை மாற்ற விகிதாச்சாரத் தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும். அந்தந்தக் கட்சி பெறும் வாக்குகள் வீதத்துக்கேற்ப அவையில் இடம் அளிக்க வேண்டும். பணக்காரக் கட்சிகள் மட்டுமே தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் சூழலை உடைக்க, எல்லா வேட்பாளர்களின் தேர்தல் செலவையும் அரசே ஏற்க வேண்டும். அதைத் தாண்டி ஒருவரும் ஒரு பைசாகூடச் செலவழிக்க அனுமதிக்கக் கூடாது. நேர்மையான, வெளிப்படையான தேர்தலை உறுதிப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்…” இப்படிப் பல விஷயங்கள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன. ஏராளமான சீர்திருத்தங்கள் தேவைப்படும் ஒரு முறையே நம் தேர்தல் முறை. எனினும், குறைகளின் பெயராலேயே நிராகரிக்கக் கூடிய முறை அல்ல இது. உலகின் முன்னேறிய சமூகங்கள் பலவும் சுவீகரித்துக்கொண்டிக்கும் இம்முறை நமக்கு எளிமையாகக் கிடைத்ததாலேயே நாம் மலிவானதாகக் கருதுகிறோம்.

திருச்சியில் இருந்தபோது பச்சைமலை மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்த மலையிலுள்ள டாப் செங்காட்டுப்பட்டி, புத்தூர், நச்சினைப்பட்டி மூன்று பகுதிகளையும் சேர்ந்தவர்கள் - தவிர்க்கவே முடியாத உடல்நலப் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் ஓரிருவரைத் தவிர - முழுக்க வாக்களிப்பதை ஒரு கடமையாகக் கடைப்பிடிப்பவர்கள். நான் அவர்களைச் சந்திக்க விரும்பினேன். அப்போதெல்லாம் காலையில் ஒரு பஸ், மாலையில் ஒரு பஸ் மட்டுமே அங்கு செல்லும். அதன் பின் ஓரளவுக்கு மேல் செல்ல மலையேற வேண்டும். சக பத்திரிகையாளர்கள் மயில்வாகனன், அசோக்கையும் துணை சேர்த்துக்கொண்டு மூவருமாகப் போனோம். அங்குள்ள மக்களிடம் பேட்டி கண்டோம். “எங்க மலைக்கு இப்ப வர்றதுக்கே இவ்வளவு சிரமம் இருக்கே, ஆரம்பக் காலத்துல எப்படி இருந்திருக்கும்? அரசாங்கத் தரப்புலேர்ந்து ஒரு ஈ, காக்கா எட்டிப் பார்க்காது. பெரியவங்க கூடிப் பேசுனாங்க. ‘மலையில ரெண்டாயிரம் ஓட்டு இருக்கு. நாம ஒருத்தர் விடாம சிந்தாம போட்டா அரசியல்வாதிங்க நம்மளைத் தேடி மலைக்கு வருவாங்க. நாம கேட்குறதைச் செஞ்சு கொடுப்பாங்க’ன்னு பேசி முடிவெடுத்தாங்க. அப்படியே நடந்துச்சு. இன்னைக்கு இங்கே உள்ள ரேஷன் கடை, பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பஸ்ஸுக எல்லாம் எங்களுக்கு எங்க ஓட்டு கொண்டுவந்து சேர்த்தது.”

என் அனுபவத்தில் தேர்தல் அரசியலையும் ஓட்டு போடுவதையும் இகழ்ந்து பேசும் அவலத்தை, படித்தவர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் நடுத்தர/உயர் வர்க்கத்தினரே பெருமளவில் செய்வதைப் பார்க்கிறேன். தன்னுடைய அறிவாலும் பணத்தாலுமே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று நம்புபவர்களிடமிருந்து வெளிப்படும் திமிர் இது. அவர்கள் இதுவரை பெற்றிருக்கும் அறிவு, செல்வத்தில் இந்தச் சமூகத்தின், நாட்டின் பங்கு என்ன எனும் வரலாற்றையும் சமூகம் தவிர்த்த தனித்த வாழ்க்கை என்று ஒன்று கிடையாது எனும் நிதர்சனத்தையும் அறியாத அசட்டுத் தனத்தின் வெளிப்பாடு. இந்நாட்டின் சாமானிய மக்கள் ஒருபோதும் அதைச் செய்வதில்லை. அவர்களுக்குத் தெரியும், வாக்குச்சீட்டு என்பது எண்ணிக்கையிலான வெறும் ஒரு ஓட்டு மட்டும் அல்ல; அது அதிகாரம் என்பது!

(பழகுவோம்…)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x