Published : 05 May 2016 09:08 AM
Last Updated : 05 May 2016 09:08 AM

நுழைவுத் தேர்வு சரியா?

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்திவிடலாம் எனும் வாதம் தவறு

மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தவும் மாணவர் சேர்க்கையில் உள்ள முறைகேடுகளைக் களையவும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசு சில காலமாகச் சொல்லிவருகிறது. மாணவர்கள் எழுத வேண்டியுள்ள ஏராளமான நுழைவுத் தேர்வுகளுக்குப் பதிலாக ஒரே நுழைவுத் தேர்வு வேண்டும் என்றும் அது சொல்கிறது. உச்ச நீதிமன்றமும் இதை அனுமதிப்பதால், தற்போது மத்திய அரசின் தேசிய அளவிலான தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு தமிழகத்திலும் நடந்துள்ளது.

மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. வேறு பாடத்திட்டங்களின் கீழ் படித்தவர்களை இது பாதிக்கும். அதுமட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளும், கல்வி முறைகளும் நமது நாட்டில் உள்ளன.

பட்டியல் மீறல்

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள கடமைகளை அரசியல் சாசனம் தனித் தனிப் பட்டியலாகப் பிரித்துள்ளது. அதில் மாநில அரசின் பட்டியலில் சுகாதாரம் உள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பொதுப்பட்டியலில் மருத்துவக் கல்வி உள்ளது. அதை மத்திய அரசு பட்டியலுக்கு முழுமையாக மாற்ற மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் முயல்கின்றன. சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருக்கும் நிலையில், மருத்துவக் கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, மாநில மக்களின் நல்வாழ்வைப் பாதிக்கும்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வைத் திணிக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் மத்திய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுகிறது.

வாதங்கள் உண்மையா?

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்திவிடலாம் எனும் மத்திய அரசின் வாதம் தவறு. மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்தித்தான் தரத்தை மேம்படுத்த முடியுமே தவிர, ஒரு நுழைவுத் தேர்வின் மூலமாக மேம்படுத்த முடியாது. இன்னொருபுறம், ஏராளமான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கிற மத்திய அரசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்குப் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை இன்றும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

மாணவர் சேர்க்கையில் உள்ள முறைகேட்டைத் தடுக்கவே இந்த நுழைவுத் தேர்வு என்பது மத்திய அரசின் இன்னொரு வாதம். அது உண்மையானால், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் கட்டாய நன்கொடை வசூலிப்பதைத் தடுக்கவும், அந்த நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மத்திய அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது எதையும் செய்யவில்லை. தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களையும் பெறவில்லை. இது மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

‘ஒரே தேசம்.. ஒரே நுழைவுத் தேர்வு’ என்ற கொள்கைகளுக்குப் பின்னால், இந்துத்துவா கருத்தியலும், உலகமயத்துக்கு ஆதரவான கல்விக் கொள்கையும் ஒளிந்துள்ளன. இந்தியாவில் கடை திறக்க விரும்பும் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும் அதில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் வசதிக்காகவும் இந்தத் தேர்வு திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்கு ஒதுக்கப்படும் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் ஆகிய இடங்களுக்கு இதுவரை மத்திய அரசின் சார்பில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதில்லை என்பதும் இங்கு நாம் கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த கவனம் செலுத்தாத போக்கை மத்திய அரசு தொடர்கிறது. அப்படி இருக்கும்போது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ இடங்களையும் இணைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதை மட்டும் நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

உண்மையாகவே மாணவர்களின் நலன்மீது மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், கட்டாய நன்கொடையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கும், தனியார் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கும் சேர்த்து ஒற்றைச் சாளர முறையில்’ மாணவர் சேர்க்கையை மத்திய அரசே நடத்தவும் முன்வர வேண்டும்.

சமூக நீதிக்கு எதிரானது

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரக் குறைந்தபட்சத் தகுதி 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2-வில் தேர்ச்சி என்பதுதான். இந்தத் தகுதி இருந்தால்தான் விண்ணப்பிக்கவே முடியும். ஆனால், மத்திய அரசின் நுழைவுத் தேர்வில் மீண்டும் ஒரு குறைந்தபட்சத் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அது தேவையில்லை.

ஒருகுறிப்பிட்ட சதவீத மதிப்பெண்ணை நுழைவுத் தேர்வில் பெற்றால்தான் மருத்துவப் படிப்பில் சேரத் தகுதிபெற முடியும் என்ற நிலையை உருவாக்கக் கூடாது. மத்திய அரசின் இந்த முறையால், பட்டியல்சாதியினர் மற்றும் பழங்குடி மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களைப் பெறவில்லை என்றால் அந்த இடங்கள் காலியாகப் போகும் வாய்ப்புகள் உள்ளன. இது இடஒதுக்கீட்டுக்கும் சமூக நீதிக்கும் எதிராக அமையும்.

இந்தியாவின் புகழ்பெற்ற மத்திய அரசு மருத்துவக் கல்வி நிறுவனமான எய்ம்ஸ்-ல் 1995 முதல் 2012 வரை 6 தமிழக மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர் என்ற விவரம் அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவக் கல்வியில் மட்டுமல்ல, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் சேர்ந்து படிக்க தமிழக மாணவர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், சமீப ஆண்டுகளில் தமிழக மாணவர்கள் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பெற்ற இடங்கள் 1% க்கும் குறைவாகவே இருக்கின்றன. இத்தகைய நிலை தொடர்வது தமிழக மாணவர்களின் நலனுக்கும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கும் நல்லதல்ல.

நிரந்தரத் தீர்வு

தமிழகத்தின் கல்வித் தரம் குறைந்திருப்பது, நமது மாணவர்கள் மத்திய அரசு வசம் உள்ள இந்த லட்சக்கணக்கான இடங்களில் சேரத் தடையாக உள்ளது. இது தமிழகத்துக்குப் பேரிழப்பு. எனவே, தமிழக அரசு கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். மாணவர்களுக்கு தமிழக அரசு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியையும் வழங்க வேண்டும்.

தற்போதிருக்கும் உயர் கல்விக்கான இடங்களை மேலும் பலமடங்கு அதிகரிக்க வேண்டும். எந்தப் படிப்பைப் படித்தாலும் வேலை கிடைக்கும். கவுரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான வருமானம் கிடைக்கும். சமூகப் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும் என்று மாணவர்கள் நினைக்கும் சமூக நிலையை உருவாக்க வேண்டும். நுழைவுத் தேர்வுகள் என்ற அரக்கன்களிடமிருந்து நமது மாணவர்களை நிரந்தரமாக மீட்பதற்கு அதுவே வழி!

கட்டுரையாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்,

தொடர்புக்கு: daseindia@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x