Last Updated : 03 May, 2016 10:48 AM

 

Published : 03 May 2016 10:48 AM
Last Updated : 03 May 2016 10:48 AM

திருவனந்தபுரம் டு குவாஹாட்டி: வந்தேறிகள் அரசியல்

தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை

அசாம் ஒரு சிறிய மாநிலம். ஆனால் நீளமான மாநிலம். மேற்கிலிருக்கும் துப்ரியிலிருந்து திப்ரூகர் 700 கிலோ மீட்டருக்கும் மேல். திப்ரூகருக்குக் கிழக்கிலும் அசாம் இருக்கிறது. மாநிலத்தைக் கிழக்கிலிருந்து மேற்காக வெட்டிச் செல்லும் நதி பிரம்மபுத்திரா. சில இடங்களில் அது 10 கி.மீ. அகலம். அதோடு ஒப்பிட்டால் நமது காவிரி ஒரு சின்னக் கால்வாய்.

உலகத்திலேயே பெரிய ஆற்றுத் தீவு பிரம்மபுத் திராவால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதில் அசாம்காரர்களுக்கு பெருமை. இந்தத் தீவான மஜோலியில்தான் பாஜகவினால் வருங்கால முதலமைச்சர் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சோனோவால் போட்டியிட்டு முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக, அசாம் மூன்று பகுதிகளாக அறியப்படுகிறது. வடகிழக்கில் அருணாசலப் பிரதேச எல்லையிலிருந்து தொடங்கும் மேல்-அசாம். மேற்கில் வங்கதேசத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் கீழ்-அசாம், தெற்கில் இருக்கும் பராக் பள்ளத்தாக்கு. மூன்று பகுதிகளிலும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். பல மொழிகள் பேசப்படுகின்றன.

வந்தேறிகள்

இன்றைய அசாமில் 3.2 கோடி மக்கள் வசிக் கிறார்கள். இவர்களில் 1.1 கோடி முஸ்லிம்கள். 50 லட்சம் வங்காள இந்துக்கள். தோட்டத் தொழிலா ளர்கள் 50 லட்சம். அஹோம் என்று அழைக்கப் படும் அசாமிய இந்துக்கள் 20 லட்சம். போடோக் கள் 15 லட்சம். கிறிஸ்தவர்கள். 15 லட்சம். மிஷிங் மற்றும் பல ஆதிவாசிகள் 52 லட்சம்.

அசாம் தங்களுக்கே சொந்தம் எனக் கருதுபவர்களால் வந்தேறிகள் என்று அழைக்கப்படுபவர்கள் அங்கு 66%-துக்கும் மேல் இருக்கிறார்கள்.

இவர்கள் உண்மையிலேயே வந்தேறிகளா?

அஹோம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அசாமியர் சீனா, மியான்மர் மற்றும் தாய்லாந்திலிருந்து வந்து 13-ம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் குடியேறியவர்கள். இவர்களுக்கு முன்னாலேயே இங்கு இந்துக்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் பின்னால் இஸ்லாமுக்கு மாறியவர்கள்.

வங்காள இந்துக்களும், தோட்டத்தொழிலா ளர்களும் இருநூறு வருடங்களாக அசாமில் இருக்கிறார்கள். எனவே, அசாமில் யார் வந்தேறிகள் என்பதில் குழப்பம் இருக்கிறது. அஹோமியர் தங்களைத் தவிர மற்றவர் எல்லோரையும் வந்தேறிகள் என்று சில காலம் சொன்னார்கள். இப்போது இந்துக்களோடு சேர்ந்துகொண்டு இஸ்லாமியரை வந்தேறிகள் என்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் “தோட்டங்கள் எங்களுடையவை. இங்கு யாரும் நுழைய முடியாது” என்கிறார்கள். போடோக்கள் “அசாமியரையும் இஸ்லாமியரையும் வரவிட மாட்டோம்” என்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து வட இந்தியர்களைப் ‘புது வந்தேறிகள்’ என்கிறார்கள். தமிழர்களை அவ்வாறு அழைக்கத் தயங்குவார்கள். தனி அடையாளத்தைப் பல ஆண்டுகள் வலியுறுத்திக்கொண்டிருப்பவர்கள் என்பதால் தமிழர்கள் மீது அவர்களுக்கு மரியாதை உண்டு.

உழைப்பின் அடையாளம்

அசாமின் முதல்வராக இருந்த சரத் சந்திர சின்ஹாவுடன் பல ஆண்டுகளுக்கு முன்னால் காரில் சென்றுகொண்டிருந்தேன். உல்ஃபா பிரிவினை இயக்கம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலம் அது. இருபுறமும் அமைதியான கிராமப்புறம். அவரிடம் ‘ஏன் இஸ்லாமியர் மீது இவ்வளவு வெறுப்பு’ என்று கேட்டேன். அவர் மரங்கள் சூழ்ந்த ஒரு கூரை வீட்டுக்கு முன் நின்றுகொண்டு, தனது தாடியைத் தடவிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய முதியவரைக் காட்டினார்.

“இவர் பங்களாதேஷ்காரராக இருக்க வேண்டும். இப்போது இந்த இடத்தை விட்டு எங்கும் போக மாட்டார். பக்கத்து வீட்டில் இருக்கும் அசாம்கார ரைவிட இவரிடம் பணம் அதிகம் இருக்கும். அசாம் காரரிடம் பணம் குறைவு. பொறாமை அதிகம்”

“பொறாமையா?”

‘‘ஆமாம், சோம்பேறித்தனத்தை மறைக்க முயற்சிக்கும் பொறாமை. இவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் பயிரிடும் முறைகள் எங்களுடையவற்றை விடச் சிறந்தவை. அசாமின் 85% விவசாயப் பொருட்கள் இவர்களிடமிருந்து வருகின்றன.’’

கிழவர் சொன்னது சரிதான் என்பது பின்னால் படித்தபோது தெரிந்தது. இஸ்லாமியர்கள் நதியின் தண்ணீர் வடியும்போது, வண்டல் மண்ணினால் உருவாக்கப்பட்ட, ‘சார்’ என்று அழைக்கப்பட்ட நிலங்களில் பயிர் செய்தார்கள். இவை வளமை மிக்கவை. ஆனால், அடுத்த வெள்ளத்தில் தண்ணீருக்கு அடியில் போகும் அபாயம் கொண்டவை. எனவே, வாழும் இடத்தையும் பயிரிடும் இடத்தையும் மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம். இங்கு விவசாயம் செய்வதற்குத் திறமை வேண்டும். பொறுமை வேண்டும். இழப்பை ஏற்றுக்கொள்ளும் மனத்திடம் வேண்டும். இவை அனைத்தும் குடிபெயர்ந்த இஸ்லாமியரிடம் இருந்ததால்தான் அவர்களால் அசாமில் காலூன்ற முடிந்தது.

மரண வியாபாரிகள்

ஆனாலும், அவர்களை மரணம் துரத்திக் கொண்டே இருந்தது. உதாரணமாக, 1983-ல் இந்திரா காந்தி நடத்திய தேர்தலை எதிர்த்துப் போராடியவர்கள் நெல்லி என்ற இடத்தில் சிறுபான்மையினரைக் கண்ட இடத்தில் கொன்றனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000- லிருந்து 10,000 வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் கொலைகள் நடந்தன. 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை ஒருவர்கூட தண்டனை பெறவில்லை.

அசாமின் மரண வியாபாரி என்று உல்ஃபா இயக்கத்தைச் சொல்லலாம். இன்று முற்றிலும் வலுவிழந்திருக்கிற இந்த இயக்கத்தினர் வைத் ததுதான் ஒருகாலத்தில் சட்டம். அவர்களிடமி ருந்து அசாம் மீண்டு வந்தது மற்றொரு கதை.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x