

கும்பகோணத்தில் நான் பிறந்திருந்தாலும் கோயில்களின் சூழலிலேயே வளர்ந்திருந்தாலும் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை அறியாதிருந்தேன். முழுமையாய் அறிந்திராதோர் சொல்லும் தகவல்களே சதம் என்றிருந்தேன். சென்னைக்குக் குடிபெயர்ந்த பின், இவற்றையெல்லாம் முன்னே தெரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் என்னைத் துளைத்தது. அப்போது தேனுகா தந்த குடவாயில் பாலசுப்ரமணியன் கட்டுரைகளே, எனக்கு அள்ளஅள்ளக் குறையாத சுரங்கமாய் விவரங்களைத் தந்தன. ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கண்திறப்பையும் அவை எனக்குத் தந்தன.
அவரை நேரில் பார்க்கும் துடிப்பு இருந்துகொண்டே இருந்தது. டி.என்.ராமச்சந்திரனைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்கிக்கொண்டிருந்த காலத்திலேயே, பாலசுப்ரமணியனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தப் படப்பிடிப்பின்போது நான் எழுப்பிய சின்னச்சின்னக் கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்களில் அவரின் மேதமை வெளிப்பட்டபடியே இருந்தது. வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சிற்பம், கட்டிடக்கலை, ஓவியம், இசை, நாட்டியம், நாணயவியல், பக்தி இலக்கியம், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் எனக் குறுக்கும் நெடுக்குமாய் அவர் பயணித்திருந்த விஸ்ரூப சொரூபத்தை அந்தப் பதில்களில் கண்டேன்.
ஒரு சிற்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததா, சோழர் காலத்தைச் சேர்ந்ததா, நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததா, மாராட்டியர் காலத்தைச் சேர்ந்ததா என்று துல்லியமாகச் சொல்லிவிடும் அதிகாரபூர்வமான, நம்பகமான மனிதர் குடவாயில் பாலசுப்ரமணியன். ஒரு கோயில் ஓவியத்தை எடுத்துக்கொண்டால், அதில் கோபமும் சிரிப்பும் எப்படி ஒரே சட்டகத்தில் வந்தது என்பதை மிக நுட்பமாக அர்த்த கனத்தோடு சொல்லக்கூடியவர் அவர்.
வரலாற்றில் காலக் குழப்பம் என்பது மிகப் பெரும் இடர். ஆனால், எவ்வளவு காலமானாலும் அதனுள் ஆழ்ந்து, அதனுடைய சகலவித பன்முகத் தன்மைகளையும் ஆராய்ந்து மிகச் சரியாகச் சொல்லக்கூடிய முக்கியமான வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன். தஞ்சை பெரிய கோயிலைச் சார்ந்து எந்தக் கேள்வியையும் நீங்கள் அவரிடம் கேட்கலாம். ராஜராஜ சோழனுக்கும் பெருந்தச்சனுக்கும் பிறகு பெருவுடையார் கோயிலை மிகப் பெரிய அளவில் ரசித்தவர் குடவாயில் பாலசுப்ரமணியனாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அங்கிருக்கிற ஒவ்வொரு கல்லும் அதில் இருக்கிற ஒவ்வொரு சொல்லும் அவருக்குத் தெரியும். அந்தக் கோயில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல கோயில்களின் வரலாறு அவர் விரல் நுனியில், அல்லது இதழ் நுனியில். கிட்டத்தட்ட 5-ம் நூற்றாண்டு தொடங்கி 19-ம் நூற்றாண்டு வரையிலான தமிழர்களின் சிற்பக்கலை, கட்டிடக்கலை ஆகியவற்றின் வரலாற்றுக்கு அவர் செய்திருக்கும் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பு அசாதாரணமானது.
கலை மேன்மை, கட்டிடக்கலை, மன்னர்கள் குடும்பத்து உணர்வுப் போராட்டங்கள், அப்போதைய அரசியல், ஆன்மிகம் இப்படி எது சார்ந்து கேட்டாலும் அவரால் சொல்ல முடியும். சைவ சித்தாந்தம் சார்ந்தும், வேர்ச்சொல் வரலாறு சார்ந்தும், தொல்லியல், கல்வெட்டு, சுவடிகள், பட்டயங்கள், நாணயவியல் சார்ந்தும், கிரந்தம், பாலி, வடமொழி சார்ந்தும் தென்மொழி சார்ந்தும் அவர் அளிக்கும் பதில்கள், வெறும் தகவல்களோ தரவுகளோ அல்ல... தெரியாத பல புதிர்களின் விடை. தமிழர்களின் வளம் துலங்கிய கலை வாழ்வின் அறியப்படாத சம்பத்து.
பல்லவர் கோ நகரமான நந்திபுரம் என்பது தஞ்சை அருகேயுள்ள வீரசிங்கம் பேட்டை என்று கண்டுபிடித்தது, ராஜராஜ சோழனின் ஈழத்து வெற்றிக்காக வெளியிடப்பட்ட அரிய தங்கக் காசை அரசுக்கு வழங்கியது, நாட்டிய மரபில் தலைக்கோல் திகழ்ந்த விதத்தை, சகோட யாழின் வடிவத்தை தாராசுர திருபுவனச் சிற்பங்களைக் காட்டி நிறுவியது, ‘தாவி முதல்’ என்ற தேவாரப் பாடலுக்கு அவர் ஆதாரங்களோடு கண்டு சொன்ன தெளிவு, தாரசுர பெரிய புராணச் சிற்பங்களைக் காட்டி, சங்கப் புலவர்கள் பற்றிய செய்தியை வரையறுத்தது என்று இன்னும் இன்னும் நீள்கிறது அவரது சாதனைப் பட்டியல்.
யாரை விடவும் இவரது பணி எப்படித் தனிச்சிறப்பு பெறுகிறது என்றால், மூலத்தை ஒப்புநோக்குவது, பல நாட்கள் பயணித்து நேரில் சென்று களஆய்வு செய்வது, பல்துறை விஷயங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து நிறுவுவது போன்ற பல காரணிகளால் நிகழ்வதாகும். உதாரணமாக, ராஜேந்திர சோழன் சென்ற எல்லா இடங்களுக்கும் இவரே சென்றிருக்கிறார். களப்பணி ஆற்றிப் பல்துறை சார்ந்து ஆய்வு மேற்கொண்டு, அதுவரை கண்டுபிடிக்கப்படாத அர்த்த பரிமாண அடுக்குகளை வகைவகையாகப் பிரித்துக் காட்டுகிறார். எந்த அபூர்வத்தையும் கண்டுபிடித்ததோடு நின்றுவிடாமல், அவை குறித்துத் தொடர்ந்து பேசுவது, கட்டுரைகள் எழுதுவது, மக்களைத் திரட்டிக் கூட்டங்கள் நடத்துவது, பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அபூர்வ நினைவாற்றலோடு மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது, மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்தி, கலை மேன்மைகளை உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களுக்குக் கொண்டுசெல்வது என்று தொடர்ந்து செயல்பட்டுவருகிறார் குடவாயில்.
குடவாயில் கோட்டம் பெருமங்கலத்தில், 1948-ல் பிறந்த குடவாயில் பாலசுப்ரமணியன், நெருங்கியவர்களால் மதி என்றும் அழைக்கப்படுகிறார். இவரது தாயார் அபயாம்பாள் கர்நாடக இசைப் பாடகி. தந்தையார் முனுசாமி. இவரின் ஆன்மிக குரு தயானந்த சரஸ்வதி. மற்ற இரு ஆசான்களில் ஒருவர் நாகசாமி, இன்னொருவர் சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன். இவரது மனைவி கண்ணம்மாள் இவருக்கு உற்ற நிழலாக இருந்து, இவரது சாதனைகளுக்கு அணுக்கம் செய்கிறார். இவர்களுக்கு ஸ்ரீவித்யா, அஞ்சனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
தன் பள்ளிக்காலம் தொடங்கிச் சேகரித்த, மெய்வருத்தம் பாராமல் உழைத்துச் செலவழித்துக் கண்டுபிடித்த எல்லாவற்றையும் சந்தோஷமாக, சர்வசாதாரணமாக அடுத்த தலைமுறைக்கு, ஒரு இளம் மாணவனுக்குக் கையளித்துவிடுகிறார் அவர். ஒருவகையில், தன் வாழ்வின் அர்த்தமே அதுதான் என்கிறார் குடவாயில்.
- ரவிசுப்பிரமணியன், கவிஞர், ஆவணப்பட இயக்குநர். தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.com