

மக்கள் அதிகம் விரும்பி வாசிக்கும் ஜனரஞ்சகமான எழுத்து ஏன் இரண்டாம்பட்சமாகவே அணுகப்படுகிறது?
திரைப்படங்களையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜனரஞ்சகமான படங்கள்தான் அனைத்துத் தரப்பு மக்களிடமும் வரவேற்பு பெறும். பெரும்பாலானோருக்குப் பிடிக்கும் படங்களை மசாலாப் படங்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. அதுபோலத்தான் குடும்ப நாவல்களும். சொற்பமானவர்கள் வாசிப்பதாலேயே ஒன்று உயர்ந்தது என்று சொன்னால், அதிகமான மக்களை எளிதில் சென்றுசேரும் படைப்பு தகுதி குறைவானதா? தீவிர இலக்கியம், குடும்ப நாவல்கள் இவை இரண்டுமே வெவ்வேறானவை. ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறு.
முதன்முதலில் எழுதிய நாவல் எது? எது உங்களை எழுதத் தூண்டியது?
திட்டமிட்டு எழுதத் தொடங்கவில்லை. ஆறு வயதிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அம்மா மருத்துவர் என்பதால், அவரைப் பார்க்க வந்த சிறிய பத்திரிகையொன்றின் ஆசிரியர் ஒருவர் என் வாசிப்புப் பழக்கத்தைத் தெரிந்துகொண்டு, ஒரு கதை எழுதித்தரும்படி கேட்டார். எனக்குக் கதை எழுதத் தெரியாது என்று சொல்வதற்குள், “அதெல்லாம் அவ எழுதிடுவா” என்று முந்திக்கொண்டார் அம்மா. அப்படி 14 வயதில் சிறுகதை எழுதத் தொடங்கி, சிறு சிறு பத்திரிகைகளில் எழுதினேன். இலக்கிய ஆர்வம் கொண்ட என் பெரியப்பாதான், “ஏன் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிட்டு இருக்கே. வார இதழ்களில் எழுது” என்றார். ‘மங்கையர் மல’ருக்கு முதல் கதையை அனுப்ப, சன்மானத் தொகை வந்த பிறகுதான் கதை பிரசுரமானதே தெரிந்தது. பிறகு ‘கலைமகள்’, ‘அமுதசுரபி’ என்று எழுதினேன். சிறுகதைகள் போதும், நாவல் எழுதலாமே என்று ‘ராணி’ வார இதழின் அப்போதைய ஆசிரியர் அ.மா.சாமி சொல்ல, 1997-ல் முதல் நாவல் ‘கண்ணிலே நீர் எதற்கு?’ வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு, தொடர்ந்து நாவலிலேயே என்னை நீடிக்கச் செய்துவிட்டது.
மாத நாவல்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?
இப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பெஸ்ட் செல்லர்கள் மாத நாவல்களாகவே இருக்கின்றன. எத்தனையோ மாத நாவல்கள் இரண்டாம், மூன்றாம் பதிப்பு வந்தாலும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. முதிய வாசகர்களோடு புதுப் புது இளம் வாசகர்களும் இருக்கிறார்கள். 50 வயது வாசகர் ஒருவர் ஒரு நாவலைப் பற்றிச் சொன்னால், ‘அது எங்கே கிடைக்கும்?’ என்று இளம் தலைமுறையினர் கேட்பதைப் பார்க்கிறேன்.
பெண்களின் வாசிப்பு உலகத்தைக் குடும்ப நாவல்களும் காதல் சித்திரங்களும் பின்னுக்கு இழுப்பதாகச் சொல்லப்படுகிறதே, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வாசிப்பு என்பது மனதுக்கு ஆசுவாசத்தைத் தரவல்லது. நல்லதைக் கொடுக்க வேண்டியது எழுத்தாளரின் கடமை. காதல் கதையிலும் உலக நடப்பையும் சமகால அரசியலையும் பற்றிச் சொல்லலாம். அது வாசகரின் பார்வையை விசாலமாக்குமே தவிர, பின்னடைவு என்று சொல்ல முடியாது. நான் பயணம் சென்ற இடங்கள் குறித்து நாவலில் எழுதுகிறபோது, வாசகர்கள் அதை ஆர்வத்துடன் வாசிப்பதை உணர்ந்திருக்கிறேன். லைட் ரீடிங்கிலும் தேர்ந்தெடுத்த வாசிப்புக்குத்தான் வாசகர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். மலினமானது எளிதாக அம்பலப்பட்டுவிடும். நீடித்து நிலைக்காது.
குடும்ப நாவல்களில் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதைப் பாணி இருக்கிறதே. ஏன் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை?
மாமனார், மாமியார், நாத்தனார் என்கிற குறுகிய வட்டத்துக்குள்ளிருந்து வெளியே வர வேண்டும். வாழ்க்கையில் நாம் பார்ப்பதையும் நமக்குத் தெரிந்தவர்களுக்கு நேர்ந்ததையும்தான் எழுத முடியும். நான் சந்திக்கிற புதிய மனிதர்களிடம் நிறைய பேசுவேன். அவர்களின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்வேன். கதாபாத்திரங்களின் தெளிவான சித்திரமே நல்ல படைப்பை உருவாக்கிவிடும். இன்று இளம் எழுத்தாளர்கள் பலர் அரசியல் தெளிவோடும் சமூகப் பார்வையோடும் வெவ்வேறு தளங்களில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எழுத்தில் நேர்மறைத்தன்மை அவசியம்.
இணையம், செயலிகள் போன்றவை வாசிப்பை அதிகப்படுத்தியிருக்கின்றனவா?
நிச்சயமாக. என் இரண்டு நாவல்கள் ஒரு செயலியில் வெளியாகின. லட்சக்கணக்கானோர் அதை வாசித்திருக்கிறார்கள் என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. முன்பெல்லாம் பத்திரிகை அலுவலகங்களுக்கு வரும் வாசகர் கடிதம் குறித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் குழு சொன்னால்தான் உண்டு. இப்போதெல்லாம் உலகின் எந்த மூலையில் இருக்கிற வாசகரும் உடனுக்குடன் கருத்துத் தெரிவிக்க முடிகிறது. அவர்களோடு எளிதாக உரையாட முடிகிறது. வாசகர்களின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ள இந்த உரையாடல் வாய்ப்பாக அமைகிறது.
- பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in