

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் நடித்த கணியான் கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராசுவின் வாழ்வில் கடந்த ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாளில் ஒரு முக்கிய நிகழ்வு நிகழ்ந்தது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரின் கரங்களை அவர் தனது கையில் ஏந்தி முத்தமிட்ட நெகிழ்வான காட்சி, சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகிப் பரவியது. என்ன நடந்தது? வறுமையில் வாடிய அந்தக் கலைஞருக்கு அரசு சார்பில் அழகான ஒரு வீட்டை, மாவட்ட ஆட்சியர் கட்டிக்கொடுத்துள்ளார். இது எப்படிச் சாத்தியமானது?
நெல்லை தங்கராசுவுக்கு 2020-ன் ‘கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி அம்மாள் - நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது’ வழங்குவதற்கு, 2021-ல் தமுஎகச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்) முடிவுசெய்தது. அந்த விருதுச் செய்தியை தங்கராசுவிடம் சொல்வதற்காக நான் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டைக்குச் சென்றேன். வண்ணாரப்பேட்டை கீழத்தெருவில் இருந்த ஒரு குடிசை வீட்டின் முன் போய் நின்றேன். குடிசை வீட்டில் சிம்னி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வீட்டு முற்றத்தில், தங்கராசுவும், அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர். விருதுச் செய்தியைச் சொன்னவுடன் அவர் மகிழ்ச்சியோடு கைகளைப் பற்றிக்கொண்டார்.
குடிசையின் இருண்ட மூலையில் ஒரு பழைய கட்டில். வலதுபுறம் நாலைந்து மண் சட்டிகளுடன் அடுப்பங்கரை. ‘‘சொந்த வீடுதாம். கட்டைக்குத்து வீடு... போன மழையில இடிஞ்சு விழுந்துட்டு...’’ என்று குடிசைக்குப் பின்புறம் இருந்த இடத்தைக் காண்பித்தார். உருக்குலைந்து, சிதிலமாய்க் கிடந்த வீட்டை கைபேசி டார்ச் வெளிச்சத்தில் பார்த்தேன்.
நாற்பதாண்டு காலமாக, கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடிய தெருக்கூத்துக் கலைஞர், இடிந்த வீட்டின் குட்டிச்சுவரில் அமர்ந்து தனது சோகக் கதைகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
‘‘வீட்டை ரிப்பேர் பார்த்தாச்சுன்னா, கொஞ்சம் நிம்மதியாய் இருக்கலாம். எப்ப வழி பிறக்குதோ தெரியல. என்னோட ஒரே பொண்ணை எம்.ஏ., வரை படிக்க வச்சேன். டீச்சர் ட்ரைனிங்கூட முடிச்சுருக்கா. நல்ல வேல அமையல‘‘ என்று சொன்னார்.
விடைபெறும்போது, மீண்டும் எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். நான் வீடு திரும்பியதும் மனம் பொறுக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன்: ‘‘இந்தக் கூத்துக் கலைஞனின் வீடு சிதைந்துபோயுள்ளது. அவர் வாழ்வில் ஒளியேற்ற முடியுமா?"
மறுவிநாடியே பதில்: ‘‘கண்டிப்பாக. அவரது வீட்டு முகவரியையும், தொடர்பு எண்ணையும் உடனே அனுப்புங்க.’’
அனுப்பினேன்.
அடுத்த 12 மணி நேரத்தில், பயிற்சி உதவி ஆட்சியர், வட்டாட்சியர், ஆர்.ஐ. கிராம அதிகாரி, தலையாரி உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களும் அவரது குடிசை வீட்டுக்கு முன்பு நின்றார்கள்.
வீடு குறித்த அறிக்கைகள், திட்டங்கள், எல்லாம் மளமளவெனத் தயாராயின. மறுநாள் காலை தங்கராசு குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அவரிடம் ‘‘நீங்க நடிச்ச படத்தைப் பார்த்தேன். அருமையா நடிச்சுருக்கீங்களே... உங்களுக்கு என்ன செய்துதரணும்... சொல்லுங்க’’ என்று கேட்டார்.
‘‘குடிசை மாற்று வாரியம் கட்டும் ஹவுசிங் போர்டு வீடு தந்தால் அங்கெ போவீங்களா’’ என்றபோது, உடனே மறுத்த தங்கராசு, ‘‘அங்கெல்லாம் வேண்டாம்யா... என்னோட பூர்விக இடத்தையே சரிசெஞ்சு தாங்க போதும்’’ என்றார். ‘பிரதமர் வீட்டு வசதித் திட்ட’த்தின் அடிப்படையில் வீடு வழங்குவதற்கு உடனே சிபாரிசு செய்தார் ஆட்சியர்.
வெள்ளரிக்காய் வியாபாரம் மூலம் சொற்ப வருமானம் ஈட்டிக்கொண்டிருப்பதால், அவரது மகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்காலிக வேலையும் போட்டுக்கொடுத்தார். கலை, பண்பாட்டுத் துறை மூலம், நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் கடிதம் கொடுத்தார். எல்லாமே, 24 மணி நேரத்துக்குள் நடந்த விஷயங்கள்.
புதிய வீடு கட்ட வேண்டும் எனில், குடிசை வீட்டைக் காலி செய்ய வேண்டுமே? வருமானம் இல்லாத தங்கராசுவிற்கு, வாடகைக்கு வீடு கொடுக்க அந்தப் பகுதியில் எல்லோரும் தயங்கினார்கள். என்னுடைய வங்கி நண்பர் ஒருவரின் வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொடுத்தேன்.
மத்திய அரசின் நிதி என்பது வெறும் ரூபாய் இரண்டே கால் லட்சம்தான். அதில் பெரிதாகக் கட்டிவிட இயலாது. தமுஎகச தோழர்களிடமும் பிற நண்பர்கள், நிறுவனங்களிடமும் நிதி வசூல்செய்து வீடு கட்டும் வேலைகளைத் தொடங்கினோம். வீடு கட்டி முடிக்கும்போது, வீட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டபோது, தங்கராசு பெருமிதமாக உடனே சொன்ன பெயர் ‘பரியேறும் பெருமாள்’தான். வீட்டின் பால்காய்ச்சும் வைபவம் நடக்கும்போதுதான், கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராசு மாவட்ட ஆட்சியரின் கைகளையும், இயக்குநர் மாரி செல்வராஜின் கைகளையும் அன்பு மேலிடப் பற்றிக்கொண்டு முத்தமிட்டு மகிழ்ந்தார். முகம் மலர, வீட்டுக்கு வந்தவர்களையெல்லாம் அழைத்துச்சென்று வீட்டைச் சுற்றிச் சுற்றிக் காண்பித்தார் இந்த தெருக்கூத்துக் கலைஞர்.
கண்ணியமான வாழ்விடம் இல்லாமல், வருமானமும் இல்லாமல் தங்கராசுவைப் போல இருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களையும் இனங்கண்டு, அவர்களுக்கும் இதுபோல் வீடு கட்டிக் கொடுத்து, வாழ்வாதாரத்துக்கும் வழிவகை செய்வதற்கு அரசுத் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும். அரசுத் திட்டங்களைத் தாண்டியும் இந்தக் கலைஞர்கள்மீது அக்கறையுள்ள இதயங்களும் அமைப்புகளும் இதில் கைகோக்க வேண்டும். இது அந்தக் கலைஞர்களுக்கு நாம் செய்யும் உதவி அல்ல, அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
- இரா.நாறும்பூநாதன், ‘திருநெல்வேலி - நீர் நிலம் மனிதர்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர். தொடர்புக்கு: narumpu@gmail.com