Published : 22 Apr 2022 10:08 PM
Last Updated : 22 Apr 2022 10:08 PM

திருப்பத்தூர் சம்பவம் | 'பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்குத்தான் உளவியல் ஆலோசனை தேவை' - ஏன்?

திருப்பத்தூரில் ஆசிரியரை ஆபாசமாக பேசியபடி பள்ளி மாணவர் ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வலம் வந்ததை நம்மில் பலரும் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்போம். இதன் தொடர்ச்சியாக, 'அந்த மாணவரை பள்ளியிலிருந்து நீக்க வேண்டும்', 'அடித்து வளர்த்தால் இம்மாதிரியான மாணவர்கள் சமூகத்தில் உருவாக மாட்டார்கள்', 'இந்த தலைமுறை மாணவர்களே ஒழுக்கமற்று உள்ளனர்' என்பன போன்ற கருத்துகள் உலா வரத் தொடங்கின.

இந்தச் சம்பவம் மட்டுமல்ல... மாணவ, மாணவியர் மது அருந்தும் வீடியோ, போதைப் பொருட்களை பயன்படுத்தும் வீடியோ, அவர்களது தனிப்பட்ட வீடியோக்கள் கூட சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரப்பப்பட்டு, ஒட்டுமொத்த மாணவர்களையும் தவறாக சித்தரிக்கும் போக்கு நிலவுகிறது. இதற்கு சரியான உதாரணம் கூற வேண்டும் என்றால், சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர், வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோவைச் சொல்லலாம். அதில், பள்ளி ஒன்றில் நீளமாக முடி வளர்த்த மாணவர்களை மற்ற அனைத்து மாணவர்கள் முன்பும் அமரவைத்து, அம்மாணவர்களின் தலை முடி திருத்தப்பட்ட காட்சி இடம்பெற்றது. இவ்வாறுதான் பள்ளிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்டினர். ஆனால், நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அந்த மாணவர்களின் சுயத்தின் மீதான தாக்குதலை பற்றி இங்கே பலருக்கும் கவலையில்லை.

கடந்த சில வருடங்களாகவே ஆசிரியர் - மாணவர்களுக்கு இடையேயான உறவு விரிசல் அதிகரித்து வருவதை கவனிக்க முடிகிறது. இதன் பின்புலத்தில் முக்கியமாக இருப்பது, கரோனா காலம். சரி, தற்போது ஆரோக்கியமான பள்ளிச் சூழலை எவ்வாறு உருவாக்க வேண்டும்? பள்ளிக் கல்வி துறை உடனடியாக செய்ய வேண்டியது என்ன? - இந்தக் கேள்விகளுக்கு பல ஆலோசனைகளை கல்விச் செயற்பாட்டாளர்களும், குழந்தை நல ஆர்வலர்களும் நம்மிடம் முன்வைத்துள்ளனர்.

பள்ளிக் கல்வி கொள்கை அதிகாரிகளுக்குத்தான் கவுன்சிலிங் தேவை - பிரின்ஸ் கஜேந்திர பாபு (கல்வியாளர்) - "மாணவர்கள் வன்முறைப் பக்கம் நிற்கிறார்கள் என்றால், அந்த மனநிலைக்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். நோயின் தோற்றுவாயைக் கண்டறியாமல் நோயை எப்படி நீங்கள் குணப்படுத்துவீர்கள்? நோயைப் பகுப்பாய்வு செய்துதானே குணப்படுத்துவோம். அதுமாதிரியே மாணவர்கள் விவகாரத்தில் பகுப்பாய்வு எதாவது நடத்தி உள்ளீர்களா? பள்ளி கல்வித் துறை முதலில் சுய பரிசோதனை செய்துள்ளதா?

கரோனா காரணமாக 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக் கூடங்கள் திடீரென மூடப்படுகின்றன. கரோனாவின் முதல் ஆறு மாதத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது என்ற சூழலை உருவாக்குகிறீர்கள். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டிதான் தங்கள் வாழ்வை நடத்தும் குடும்பங்களின் வாழ்வாதாரம் எவ்வளவு கீழே சென்றிருக்கும்?அனைத்து சிறு, குறு தொழில் புரிவோருக்கும் இது பொருந்தும். வருமான இழப்பு, வேலை இழப்பை குழந்தைகள் எதிர்கொண்டு இருப்பார்கள் அல்லவா?

இந்தச் சூழலில் இரண்டு வருடங்களாக வீட்டில் அடைப்பட்டு கொண்டிருந்த குழந்தைகளின் மனநிலை எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். இந்தச் சூழலில் மாணவர்கள் பள்ளிக்குள் நுழைகின்றனர். அவர்களை பாடவைப்பது, ஆடவைப்பது, நல்ல உணவளிப்பது, விளையாட்டில் ஈடுபடுத்தி சிறிது சிறிதாக அவர்களை படிப்பின் பக்கம் வரவைக்க நாம் முயற்சி செய்தோமா? இதனைச் செய்யாமல் செப்டம்பர் மாதம் பள்ளிக்கூடத்தை திறக்கச் செய்து, மார்ச் மாதம் திருப்புதல் தேர்வு வைக்கிறீர்கள். இந்த ஆறு மாதங்களில் 12 மாதங்களில் நடத்த வேண்டிய பாடத்தை நடத்தி இருப்பார்கள். இதை எப்படி மாணவர்களால் எதிர்கொள்ள முடியும்? அவர்கள் என்ன இயந்திரமா?

அப்படிப் பார்த்தால், பள்ளிக் கல்வி கொள்கையில் உள்ள அதிகாரிகளுக்குதான் உளவியல் ஆலோசனை பயிற்சி அளிக்க வேண்டும்... மாணவர்களுக்கு அல்ல. மாணவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற கவுன்சிலிங் இந்த அதிகாரிகளுக்குதான் தேவைப்படுகிறது. மாணவர் ஆபாசமாகத் திட்டுவதை ஆசிரியர் டிரெண்ட் செய்வார். ஆனால், அந்த மாணவர் சாப்பிட்டாரா என்பது பற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை.

25 லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், அதில் 10 பேர் தவறு செய்தால் ஒட்டு மொத்த தலைமுறையும் மாறிவிட்டது என்று கூறுவது நியாயமா? ஆசிரியர்களுக்கு எந்த பயிற்சியும் அளிப்பதில்லை. இந்த நிலையில் அவர்கள் எப்படி மாணவர்களது கற்றல் தன்மையை அறிவார்கள்? குழந்தைகளை சமநிலைக்கு கொண்டுவரவே ஒரு மாதம் தேவைப்பட்டிருக்கும். இந்தச் சூழலில்தான் உடனடியாக ஆசிரியர்கள் எல்லா பாடத்தையும் முடிக்க வேண்டும். பள்ளிக் கல்வி கொள்கை அதிகாரிகள் இந்தத் தவறுகளை எல்லாம் உணர்ந்து உத்தரவுகளைப் போட்டால், ஏன் இம்மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் வரபோகிறது? இயந்திரங்களைப் பராமரிப்பதுபோல் மாணவர்களை பராமரிக்கக் கூடாது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

மாணவர்களுடன் ஆசிரியர்கள் நேரத்தை செலவிட வேண்டும் - வசந்திதேவி (கல்வி செயற்பாட்டாளர்): "மாணவர்களின் பதின் பருவ காலத்தில்தான் இம்மாதிரியான தவறுகள் நடக்கும். இந்த வயதில்தான் அவர்கள் அன்புக்காக, அரவணைப்புக்காக, உறவுக்காக, புரிதலுக்காக ஏங்குவார்கள். இந்தப் புரிதல் நமது சமூகத்தில் சுத்தமாகக் கிடையாது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. அவர்களால் மாணவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. அப்படி என்றால், இதற்கு மாற்று பள்ளிகளில்தான் மாணவர்கள் தேடமுடியும். ஆனால், இங்கு ஆசிரியர் - மாணவர்கள் உறவும் முற்றிலுமாக உடைந்துவிட்டது. உறவே கிடையாது. பாடம் நடத்துவது, டெஸ்ட் வைப்பது, மார்க் போடுவது அவ்வளவுதான் ஆசிரியர்கள் வேலை. மாணவர்களை மனிதர்களாக நடத்துகிறார்களா? சில ஆசிரியர்கள் விதிவிலக்காக இருக்கலாம். அவ்வாறான ஆசிரியர்களை எதிர்த்து மாணவர்கள் யாரும் வன்முறையில் இறங்குவதில்லை. ஆசிரியர்கள், மாணவர்களுடன் தங்களது நேரத்தை செலவிட வேண்டும். அவர்களுடன் அமர்ந்து கல்வி தவிர்த்து பேசவேண்டும். இதற்காக உளவியல் நிபுணர்களை கொண்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது சமூகத்தில் அந்த அளவு உளவியல் நிபுணர்களும் இல்லை.

முன்பெல்லாம் மாணவர்கள் வசிக்கும் இடங்களுக்கெல்லாம் ஆசிர்யர்கள் போவார்கள். பள்ளிக்கு அருகிலேயே அவர்களது வீடு இருக்கும். ஆனால், இன்று எங்கிருந்தோதான் ஆசிரியர்கள் வருகிறார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்களைவிட கூடுதல் பிரச்சினை இருக்கிறது. அதில் முக்கியமானது ஏழ்மை. கரோனா காலத்தில் நிறைய பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். குடும்பத்துக்குள் பெரும் வன்முறை நடக்கிறது.

இந்தச் சூழலில் பள்ளிக்கு வரும் மாணவர்களுடன் ஆசிரியர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்புள்ளதா என்று கேட்டால், நான்கு மணிக்கே ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள். மாணவர்கள் பிரச்சினைகளை கேட்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. மனித உறவுகளே மடிந்துவிட்ட இந்த நிலையில், வன்முறை வரத்தான் செய்யும். இதிலிருந்து தப்பிக்க முடியாது. இதைத் தடுக்க ஆசிரியர்கள் சிறுது நேரமாவது மாணவர்களுடன் உரையாட வேண்டும். ஆசிரியர்களால் மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால், மனம்விட்டு பேசுவதற்கான வாய்ப்பு கிடைப்பதே பாதி வன்முறைகளைத் தவிர்த்துவிடும். மாணவர்கள் மட்டும் அல்ல, மாணவிகளுக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் உண்டு. அவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதனால் அவர்களுக்கு பிரச்சினைகள் இல்லை என்பதில்லை.

எனவே, முதலில் மாணவர்களைக் கையாள்வதற்கு ஆசிரியர்களுக்குத்தான் பயிற்சி வழங்கப்பட வேண்டும். கோடை விடுமுறைகளில் இத்தகைய பயிற்சி வழங்க வேண்டும். இதனை அரசுதான் செய்ய வேண்டும்” என்றார்.

மாணவர்களின் வீடியோக்களை பரப்புவது சட்டப்படி குற்றம் - தேவ நேயன் (குழந்தை நல செயற்பாட்டாளர்): "இம்மாதிரியான வீடியோக்கள் பரப்பப்படும்போது மாணவ சமூகமே இப்படிதான் இருக்கிறது என்று எண்ணுவது தவறு. குழந்தைகள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், இதுபோன்ற வீடியோவை பகிர மாட்டார்கள். சட்டப்படி இது தவறானது. இனி இம்மாதிரியான வீடியோக்கள் வந்தால் உங்கள் குழந்தையாக இருந்தால் பகிராமல் இருப்பீர்கள் அல்லவா, அப்படியே இதனையும் பகிராமல் இருங்கள். இளம் சிறார் நீதி சட்டத்தின்படி காவல்துறையினர் சீறார்களின் வீடியோக்களை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள் என்றால், அவை எல்லாம் அவர்கள் கேட்ட வார்த்தைகள்தான். குழந்தைகள் செய்யும் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் சூழல்கள்தான் செய்ய வைக்கின்றன. ஆகவே, நாம் சூழலை மாற்றவேண்டும். எல்லாவற்றைவிட முக்கியமானது, இங்குள்ள வளர் இளம் நிலை பருவத்தினருக்கு மனித மதிப்புகள் கற்றுக் கொடுப்பதில்லை. பள்ளிகள், வீடுகள், ஊடகங்கள் எதுவும் மாணவர்களுக்கு மனித உரிமைகளையும், மதிப்புகளையும் கற்றுத் தருவதில்லை. சமூகம் நன்னெறியுடன் இருக்கிறதா? கரோனாவுக்கு பிறகு நிலைமை மோசமாகி இருக்கிறது. இவை அனைத்தையும் விட்டுவிட்டு அடியாத மாடு பணியாது என்று டயலாக் விடுகிறார்கள். நன்றாக அடித்து வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நன்றாக படித்ததற்காக ஆய்வு எதாவது இருக்கிறதா?

கடந்த இரு வருடங்களில் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதுடன் குழந்தைகள் செய்யும் வன்முறையும் அதிகரித்துள்ளது. குழந்தைகளும் வன்முறையாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். இது ஆபந்தான நிலை. இதனை சரிசெய்யத்தான் பார்க்க வேண்டுமே தவிர, இதனை பரப்பரப்பாக்கக் கூடாது.

ஆசிரியர்களை குற்றம் சொல்வதற்காக இதனைச் சொல்லவில்லை. கல்வியைச் சொல்லி கொடுக்கும் முறை மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் குழந்தைகள் தங்களுக்கு தேவையான பத்து விஷயங்களைத் தெரிந்து வைத்துள்ளார்கள் என்றால், தேவையில்லாத 100 விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளார்கள். இந்த நிலையில், குழந்தைகளை நாம் கவனமாகக் கையாள்வது மிக முக்கியம். பல்வேறு பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளிடம் ஒரே மாதிரியாக நாம் அணுக முடியாது. இதனை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

கிராமங்களில் உள்ள குழந்தைப் பாதுகாப்பு குழுகளை அரசு வலுப்படுத்த வேண்டும். குழந்தைகளை சஸ்பெண்ட் செய்தால், அவர்கள் குற்றவாளிகளாகத்தான் மாறுவார்கள். எனவே, இதனை பள்ளிக் கல்வி துறை மற்றும் அரசு கவனத்தில் கொண்டு பல்துறை சார்ந்த அறிஞர் குழுகளை உருவாக்க வேண்டும்” என்றார்.

சுடரொளி (அரசுப் பள்ளி ஆசிரியர், குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்): "ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக எதிர் உளவியல் உருவாகி இருக்கிறது. அரசு தொடங்கி ஆசிரியர் வரை இங்கு பொறுப்பு உள்ளது. இதில் யார் தங்கள் கடமையிலிருந்து தவறினாலும் இறுதியில் பாதிக்கப்படும் உறவு ஆசிரியர் - மாணவர் உறவுதான். உறவை எதிர்வினையாக மாற்றியது நிச்சயம் ஆசிரியர்கள் கிடையாது. கற்றல் - கற்பித்தலில் இருதரப்பும் உள்வாங்கி செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். ஆனால், ஆசிரியர் - மாணவர்களும் ஆரோக்கியமாக இயங்காதபடி கல்விக்கான புறச்சூழல்கள் உள்ளன. இரண்டு வருடங்களுக்கு பின் பள்ளிக்கூடம் திறக்கும்போது உளவியல் ரீதியான சிகிச்சைகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசிடம் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இது நடைபெறாத சூழலில் மாணவர்களும் - ஆசிரியர்களும் எதிரிகளாகியுள்ளனர்.

கற்பித்தலை மாணவர்களிடம் அழுத்தமாக திணிக்காமல், அதனை வேறு முறையில் எளிமையாக கொண்டு செல்ல வேண்டும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு நாம் மீண்டும் வழக்கமான கல்வி முறைக்கு குழந்தைகளைக் கொண்டு வந்துள்ளோம். இதனால், நிறைய பிரச்சினைகள் உண்டாகும். அதுவும் பதின் பருவத்திலுள்ள மாணவர்களை கையாள்வது அசாத்தியமான விஷயம். இவை எல்லாம் உள்வாங்கி கொண்டவர்களாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். மாணவர்கள் குடிக்கிறார்கள், கேட்ட வார்த்தை பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்தச் சமூகம் போதைப்பொருட்கள் மாணவர்களுக்கு எளிமையாகக் கிடைக்கும் நிலையில் வைத்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதற்கு எல்லாம் யார் பொறுப்பு? இதை எல்லாம் கவனிக்காமல் குழந்தைகளை குற்றவாளியாக்குகிறார்கள். நாம் குழந்தைகள் மேல் பழிபோட்டு தப்பிக்க முடியாது. அது பள்ளிக் கல்வித் துறையாக இருக்கட்டும், ஆசிரியர்களாக இருக்கட்டும். அனைவருக்கும் இதில் கடமையுள்ளது” என்றார் சுடரொளி.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x