Last Updated : 13 May, 2016 09:29 AM

 

Published : 13 May 2016 09:29 AM
Last Updated : 13 May 2016 09:29 AM

திருவனந்தபுரம் டு குவாஹாட்டி: நான்கு தேர்தல்களில் நாட்டின் எதிர்காலம்

தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை



கேரள மக்கள் நகைச்சுவை மன்னர்கள்! அரசியல்வாதிகள் சொல்வதை எப்போதுமே அவர்கள் வேதவாக்காக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுவே அவர்கள் வரலாறு. உதாரணம், முதல்வர் உம்மன் சாண்டியின் மதுவிலக்கு. பெண்களிடையே அதற்கு பலத்த ஆதரவு இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஆண்களிடம் அதற்கு வரவேற்பு இருப்பதாகத் தெரியவில்லை. இடுக்கி மாவட்டத்தில் ஒரு கூட்டம். சாண்டி மதுவிலக்கின் பெருமையை விளக்கி 800 பார்களை மூடிவிட்டதாகச் சொல்லி முடித்தார். உடனே கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘‘ரொம்ப நல்லது சாரே, மூடுங்க. எல்லா பாரையும் மூடுங்க. ஆனா, எங்க ஊர் பாரை மட்டும் மூடாதீங்க. இருந்துட்டுப் போகட்டும் சாரே!’’ என்றது அது.

யார் வெல்வார்கள்?

இடதுசாரிகளுக்கு 85-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி என்றது மார்ச் மாதக் கணிப்பு. ஏப்ரலில் இது 78 ஆனது. மே 2-ம் தேதி கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 69 முதல் 73 வரை தொகுதிகளைப் பிடிக்கும் என்றும் இடதுசாரிகள் 63 லிருந்து 69 வரையிலான தொகுதிகளைப் பிடிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. காங்கிரஸ் கூட்டணி 45% வாக்குகள். இடதுசாரிக் கூட்டணி 43% வாக்குகள். மற்ற கட்சிகள் 12% வாக்குகள் பெறுவார்கள் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.

இந்த 12%-ல் பல கட்சிகள் இருக்கும் என்பதால் பாஜகவின் முன்னேற்றம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

மொத்தத்தில், மூன்று மாநிலங்களின் தேர்தல்களில் என்ன மாதிரியான முடிவுகள் வரச் சாத்தியம் உள்ளது?

மேற்கு வங்காளத்தில் மம்தாவுக்கு முன்பு கிடைத்ததைவிடக் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறலாம். அசாமில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது. கேரளத்தில் இழுபறி. இடதுசாரிகள் மயிரிழையில் வெற்றி பெறலாம்.

பாஜகவின் பாதை

இந்தத் தேர்தல்கள் நிர்ணயிக்கப்போவது பாஜகவின் தலைவிதியைத்தான். நாடு முழுவதும் தனது தடத்தைப் பதிக்க அது தொடர்ந்து முயல்கிறது. அதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அமைப்புகளோடு இணைந்து பல்வேறு உத்திகளைக் கையாள்கிறது. எல்லா மக்களையும் ஒன்றுசேர்த்து அரவணைத்தால்தான் முன்னேற முடியும் என்று கருதுபவர்கள் பாஜகவுக்குள்ளேயே இருக்கிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் இந்துக்களுக்கு என்றுமே எதிரிகள். அவர்கள் குரல் உயர்ந்தால் நமக்கு வீழ்ச்சிதான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகள் இரண்டாவது பிரிவினருக்கே வலு சேர்க்கின்றன. முல்லாக்களின் குரல் இந்த நாடுகளில் ஓங்கும்போதெல்லாம் இங்கும் இந்து மதவாதிகளின் குரல் உயரும் எனலாம். மற்ற நாடுகளில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதத்தைப் பொறுத்து, நமது கொள்கைகளை அமைத்துக்கொள்ளக் கூடாது என்பது சுதந்திரம் நமக்குக் கற்றுத்தந்த பாடம். அந்தப் பாடத்தை மறக்க வேண்டும். புதுப் பாடத்தை எழுத வேண்டும் என்று பேசுபவர்கள் பாஜகவில் வலுப்பெறும் அபாயம் என்றும் இருந்து கொண்டிருக்கும். அது இருந்துகொண்டிருக்கும் வரை நாடு ஒருமித்து முன்னேறும் என்று எதிர்பார்க்க முடியாது.

என்ன செய்ய வேண்டும்?

இந்திய வரைபடத்தைப் பாருங்கள். மேற்கே கேரளாவில் பாஜக வெற்றி பெறும் சாத்தியம் இல்லை. கர்நாடகாவில் எடியூரப்பாவை வைத்துக்கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொல்ல முடியாது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு குறைந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பில் கேஜ்ரிவாலின் கை ஓங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். டெல்லியில் அவரது ஆட்சி நடக்கிறது. பிஹாரில் பாஜக சமீபத்தில்தான் தோல்வியடைந்தது. கிழக்கே வந்தால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்காளத்தில் பாஜக வலிமை பெறும் என்று சொல்லவே முடியாது. உத்தரப் பிரதேசத்திலும் கூட்டணிக் கணக்கைப் பொறுத்தே பாஜகவின் தலையெழுத்து எழுதப்படும். மற்ற சிறு மாநிலங்களில் காங்கிரஸும் பாஜகவும் கிட்டத்தட்ட சமபலத்தில் இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

எனவே, இந்தியாவின் அடித்தளம் ஆட்டம் காணாமல் இருக்க வேண்டுமானால் மதச் சார்பின்மை அவசியம் என்று நினைக்கும் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஊழல், ஒரே குடும்பத்தைத் தூக்கிப் பிடித்தல், சோம்பேறித்தனம், திறமையின்மை போன்ற ‘உயரிய’ பண்புகளால்தான் காங்கிரஸ் இந்த நிலையில் இருக்கிறது. ஆனாலும், பிஹாரின் நிதிஷ்குமார் சொல்வதுபோல காங்கிரஸ் கட்சி மட்டும்தான் இந்த ஒருங்கிணைப்பை முன்னின்று நடத்த முடியும். நடத்தாவிட்டால் அதன் அழிவு நிச்சயம்.

அமுல் பேபி

அச்சுதானந்தன் 2011 தேர்தலில் ராகுல் காந்தியை அமுல் பேபி என்றார். காங்கிரஸ் கட்சியினர் மேலும் கீழும் குதித்தனர். ஆனால், ராகுல் தான் மேற்கு வங்கத்தில் காங்கிரஸும் இடதுசாரிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று ஆதரவு தெரிவிக்க முதல் வரிசையில் நின்றார்.

எனவே, நடக்கவிருக்கும் நான்கு மாநிலத் தேர்தல்களில் இந்தியாவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், மேற்குவங்கத் தேர்தலையே நான் மிக முக்கியமாகக் கருதுவேன். அங்கு காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்தே பாஜகவை எவ்வாறு எதிர்கொள்வது என்பது நிச்சயிக்கப்படும்.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x