Published : 11 Apr 2022 06:53 AM
Last Updated : 11 Apr 2022 06:53 AM

உக்ரைன் - ரஷ்யப் போர்: விவசாயத் துறையின் பாதிப்புகள்

செ.சரத்

சங்க காலம் தொட்டே போருக்கும் விவசாயத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விவசாயத்தின் அடிநாதமாக விளங்கும் ஆநிரைகளைக் கவர்தல் (கால்நடை கவர்தல்) என்பது போரின் தொடக்கம் என்கிறார் தொல்காப்பியர். மேலும், ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூ சூடிக்கொள்வார்கள் என்றும், ஆநிரைகளை மீட்போர் கரந்தைப் பூ அணிந்து போரிடுவார்கள் என்றும் கூறுகிறார். கலிங்கத்துப் போரில் அசோகர் ஒன்றரை லட்சம் போர் வீரர்களை அடிமையாகக் கொண்டுவந்து, தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதற்காக அவர்களைக் குடியேற்றம் செய்ய வைத்ததாக வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர் குறிப்பிடுகின்றார். புறநானூற்றில் பாண்டியன் நன்மாறனைப் பற்றி காரிக்கண்ணனார் பாடும்போது, ‘நீ மற்றொருவரின் நாட்டைக் கைப்பற்றும்போது, உன் நாட்டின் இளையவர்கள் அவர் நாட்டுக் கழனிகளைக் கவர வேண்டும்’ என்கிறார்.

புறநானூற்றில் வெள்ளைக்குடி நாகனார் ஒருபடி மேலே போய் அரசர் கிள்ளிவளவனிடம் ‘போர் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் என்றால், விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளைப் பெருக்கி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டுமே போரில் வெற்றி பெற முடியும். மேலும் அரசே, தங்களின் வெற்றி என்பது உழவர்களின் உழவுப் படையால் (அதாவது, பகைவர்களைத் தாங்கள் எதிர்த்துப் போரிட்டுப் பெறும் வெற்றி, விவசாயிகளின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும்) விளைந்த ஒன்றாகும். எனவே, அவர்களைக் காக்கும் தலையாய பொறுப்பு தங்களுக்கு உண்டு’ என்று அறிவுறுத்துகிறார்.

பின்னாளில், அதுவே ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த போரானது, ஐரோப்பாவை விவசாயிகளை நோக்கிக் கொள்கை வகுக்கும் வகையில் வழிவகை செய்தது. ஆம், ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகம் போர் நடக்கும் சமயத்தில், ஐரோப்பாவைத் தனது எதிரியான சோவியத் ஒன்றியத்தைவிட, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக விவசாயிகளுக்கு உலக அளவில் இல்லாத விலை உயர்வை வாரி வழங்கியது. இதன் விளைவாக வெண்ணெய், பால், இறைச்சி, ஒயின் உற்பத்தி மிகுதியாகி, விற்க முடியாமல் போனது. இறுதியாக, வேறுவழியின்றி ஐரோப்பா வலியச் சென்று, எதிரி என்றும் பாராமல் சோவியத் ஒன்றியத்திடம் வந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தவற்றை உணர்ந்த ஐரோப்பா ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது, விவசாயப் பயிர்களுக்கு மானியம் தருவதைவிட, விவசாயிகளுக்கு நேரடியாகத் தரலாம் என்றும், இறுதியில் அதுவே உற்பத்தியாகும் உபரியைக் குறைத்து, விநியோகத்தையும் தேவையையும் கட்டுக்கோப்பாக்கி விவசாயிகளுக்கு நல்லதொரு விடியலைத் தரும் என்றும் உணர்ந்தது.

இப்படி, போருக்கும் விவசாயத்துக்கும் நெடுங்காலமாக நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இதன் மூலம் புலப்படுகிறது. அதே தொடர்பைத் தற்போது நடைபெற்றுவரும் உக்ரைன்-ரஷ்யப் போரோடு தொடர்புபடுத்தலாம். அதற்கு முன் போர் என்பது ‘வெளிநாட்டுக் கொள்ளை’ என்று கூறிய கார்ல் மார்க்ஸின் கூற்றையும் நாம் இங்கு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், தற்போது இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் என்பது, நேரடிக் கொள்ளை இல்லை என்றாலும் கொள்கைரீதியாக யார் யாருடன் சேர வேண்டும் என்பதில் தொடங்கி, வளங்களை அழிக்கும் கொள்ளையாக உருமாறிவருகிறது.

இரு நாடுகளும் தங்களிடையே பல வளங்களை உள்ளடக்கியுள்ளன. பிரதானமாக, வேளாண்மையை எடுத்துக்கொண்டால், இரு நாடுகளுமே பயிர்ச் சாகுபடியிலும் உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. உக்ரைனை எடுத்துக்கொண்டால் நல்ல கரிம வளம் கொண்ட மண்ணில் சூரியகாந்தி, மக்காச்சோளம், கோதுமை, பார்லி போன்றவை அதிக அளவு சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் உக்ரைன் முதலிடம் வகிக்கிறது. அதனால்தானோ என்னவோ சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் பெண்மணி ஒருவர், அங்கு போரிட்டுவரும் ரஷ்ய ராணுவ வீரரிடம், ‘உங்களின் பாக்கெட்டுகளில் இந்த சூரியகாந்தி விதைகளை வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் இறக்க நேரிட்டால், இந்த விதைகள் செடிகளாக உக்ரைன் மண்ணில் வளரும்’ என்று பேசிய ஒரு காணொளி இணையத்தில் வைரலாக வலம்வந்தது. மேலும், ஐரோப்பாவின் ‘பிரெட் பாஸ்கட்’ என்றும் உக்ரைன் அழைக்கப்படுகிறது.

ரஷ்யா உலக அளவில் 20% கோதுமைத் தேவையைப் பூர்த்திசெய்துவருகிறது. மேலும், நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் உரங்கள் பெருமளவில் ரஷ்யாவிலிருந்துதான் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.

போர் காரணமாக உரங்களுக்கும் சில உணவு தானியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. எகிப்து, துருக்கி, நைஜீரியா, சில ஆப்பிரிக்க நாடுகளின் கோதுமைத் தேவையை இவ்விரு நாடுகளே பூர்த்திசெய்துவருகின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால், 90% சூரியகாந்தி எண்ணெய்த் தேவையை இவ்விரு நாடுகளே நிறைவுசெய்கின்றன. தற்போது சந்தையில் அதன் விலையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

உக்ரைனில் தற்போது குளிர் காலத்துக்கு ஏற்ப சாகுபடி செய்யப்பட்டுள்ள 20% முதல் 30% அளவிலான பயிர்கள் போரின் காரணமாக அறுவடை செய்யப்படாமல் அப்படியே நிலத்தில் உள்ளன. இது அங்குள்ள விவசாயிகளைப் பெருமளவில் பாதித்துள்ளதுடன், அவர்களை நம்பியிருக்கும் பிற நாட்டினரையும் பாதித்துள்ளது.

எனவே, போரும் ஏரும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து ஏற்படுத்தும் தாக்கம் என்பது, சர்வதேசத்தையும் சர்வ வல்லமையுடன் பாதிக்கும் தன்மை வாய்ந்ததாகும்.

- செ.சரத், வேளாண் ஆராய்ச்சியாளர், ‘ஏர்நாடி’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: saraths1995@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x