

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இ.எஸ்.எஸ். இராமனின் அனுபவக் குறிப்புகளே இந்நூல். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இராமன் படித்துக்கொண்டிருக்கும்போது, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்துவந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரையை ஆசிரியராகக் கொண்டு வெளியாகிவந்த ‘மாணவம்’ இதழில், அவர் உதவி ஆசிரியராகவும் அட்டைப்பட ஓவியராகவும் பணியாற்றியிருக்கிறார். பிற பத்திரிகைகளிலும் எழுதிவந்திருக்கிறார். பத்திரிகையாளராகவும் கல்லூரி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவராகவும் எம்ஜிஆர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகளுடன் மாணவப் பருவத்திலேயே இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த நூலில் விரிவாகப் பதிவாகியுள்ளன. கிருபானந்த வாரியார், கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்டோரை இராமன் எடுத்த பேட்டிகளும் மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வானொலி நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டிருந்த நேரத்தில், முன்னாள் முதல்வர் காமராஜரின் மரணம் குறித்த செய்தி வர, அதை வானொலியில் அறிவிக்க நேரிட்டது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவர் கொல்லப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன் சந்தித்து உரையாடியது உள்ளிட்ட எதிர்பாரா நிகழ்வுகளும் நூலின் மதிப்பைக் கூட்டுகின்றன. அலோபதி மருத்துவராக இருந்தாலும் மூலிகைகளை மருந்துகளாகப் பயன்படுத்துவது குறித்து நிறைய எழுதியிருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன், நாகஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் உள்ளிட்டோரின் நூற்றாண்டு விழாக்களை ஒருங்கிணைத்திருக்கிறார் இராமன். ஜி.கே.மூப்பனார் தொடங்கிய ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 1996 சட்டமன்றத் தேர்தலில் பள்ளிப்பட்டு தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார். 2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வென்றிருக்கிறார். நெசவாளர்களுக்கான வரிவிலக்கு, மினி பஸ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளுக்காக இவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகள் நூலில் பதிவாகியுள்ளன. ஒரு பன்முக ஆளுமையின் வாழ்க்கைப் பதிவான இந்த நூல், தமிழ்நாட்டின் கலை, அரசியல் வரலாற்றின் சுவாரசியமான சில பக்கங்களை நம் கண்முன் விரிக்கிறது.
எல்லாம் மெய்: எனது வாழ்க்கைப் பயணம்
டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன்
வெளியீடு: சஞ்சீவியார் பதிப்பகம்,
சென்னை -15
விலை: ரூ.450
தொடர்புக்கு:
044 - 2489 0151