Published : 10 Apr 2022 06:00 AM
Last Updated : 10 Apr 2022 06:00 AM

பகல் வேஷம்: கலைக்க முடியாத ஒப்பனைகள்

அதிகாலைச் சூரியன் அடிவானத்துக்கு சிவப்புச் சாந்தினைப் பூசத் தொடங்கும் முன்னரே, அதோ அந்த நீலமும் சிவப்பும் பச்சையுமாய் படுதாக்கள் வேய்ந்த கொட்டகைகளுக்கு வெளியே கண்ணாடிச் சில்லுகளைக் கையில் ஏந்திக்கொண்டு வர்ணங்கள் குழைக்க ஆயத்தமாகிறது. முதியவர்களும் இளைஞர்களுமாய் ஒரு கூட்டம். சூரிய கிரணங்கள் முகத்தில் படர ஆரம்பித்ததும் பழைய முகம் மறைந்து அல்லது மறந்து புராண காலத்து முகங்கள் தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன. வண்ணங்களின் குழைவிலும் அரிதாரப் பூச்சிலும் உடை அலங்காரத்திலும் ராமனும் லஷ்மணனும் சீதையும் அனுமானும் சிவனும் பீமனும் சூர்ப்பனகையும் உயிர் பெறுகிறார்கள்.

‘நாங்கள் எல்லாம் பகல் வேஷக்காராள்’ என்று இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இரவு வேளைகளில் நடைபெறும் தெருக்கூத்து மேடைகளில் புராண நாடகங்களில் வேஷம் கட்டி ஆடுபவர்கள் தனி. ‘அவர்கள் அல்ல நாங்கள்’ என்று தங்களின் தனித்தன்மையை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள் இந்த பகல் வேஷக் கலைஞர்கள். தனித்தனிக் கதாபாத்திரங்களையும் கடவுளர்களையும் தங்களின் கற்பனைகளுக்குள் கொண்டுவந்து, வேடம்பூண்டு பகற்பொழுதில் மக்களிடையே தெருக்களில் நடமாட விடுவதில்தான் இக்கலைஞர்களின் சிறப்பு இருக்கிறது.

பட்டணத்துத் தெருக்களில் அலுவலகம் செல்வோரும், பலவிதமான வியாபாரிகளும் வாகனாதிகளும் இரைச்சலிட்டுச் செல்லும் சூழலில் மக்கள் கூட்டத்தின் ஊடாக ‘ஜல் ஜல்’ என்று சலங்கை ஒலிக்க, பச்சை நிறத்தில் அனுமான் தோன்றுகிறார். கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள். ராமரும் சீதையும் வேறு வேறு திசைகளில் நடக்கிறார்கள். இந்த முறை கானகத்திலிருந்து கான்கிரீட் நகர் நோக்கிச் செல்லுமாறு காலம் அவர்களைச் சபித்துவிட்டது.

தலைக்கு மேல் தகிக்கும் சூரியன், முகம் எரிய, வழியும் நீலவண்ண அரிதாரம், கண்ணாடிச் சில்லுகளுடன் பளபளக்கும் கிரீடத்துடன் கையேந்துகிறார் ராமர் வீடுகள்தோறும். ‘இன்று போய் நாளை வா’ என்று ராவணனுக்கு உயிர்ப் பிச்சை தந்த காலம் உருண்டு, நகர சாதாரண மனிதர்கள் ‘இன்று போய் நாளை வா’ என்று பிச்சை மறுக்கிறார்கள். ‘தெரிந்த வேலையைச் செய்து பிழைக்கக் கூடாதா, இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு?’ என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு முன்னால் நிராயுதபாணியாக நிற்கிறார் பீமர். ‘கையிலுள்ள கதாயுதத்தால் துரியோதன எதிரிகளைத் துவம்சம் செய்வதைத் தவிர வேறென்ன தெரியும் எனக்கு?’ என்ற பீமனின் முணுமுணுப்பு யார் காதிலும் விழாது.

ஆர்மோனியமும் தபேலாவும் வாசித்தபடி வரும் ராமர் தன் கதையைத் தானே பாடுகிறார். ‘ஸ்ரீராம ராம ரகுராம்! ஜெய ஜெய ராம! சீத்தாராம்!’ லட்சுமணன் சீதையைக் காப்பதில்லை. சீதை ஒரு தெருவிலும் லட்சுமணன் இன்னொரு தெருவிலும் நடமாடுகிறார்கள். சூர்ப்பனகையும் சீதையும் ஒற்றுமையாக ஒரு தேநீர்க் கடையில் தேநீர் பருகுகிறார்கள். சமுத்திரம் தாண்டிய அனுமான் முனிசிபாலிடிகாரர்கள் வெட்டிய பள்ளத்தைத் தாண்டுவதற்குத் தயங்கி நிற்கிறார். காலத்தின் வெறுமை அனுமானின் கண்களில் தெரிகிறது.

பெண்கள் பகல் வேஷம் போடுவதில்லை. ஆண்கள்தான் போடுகிறார்கள். ‘ஏன் அப்படி?’ என்று கேட்டால் ‘அது அப்படித்தான்’ என்று அநாயாசமாகப் பதில் வருகிறது.

நெடுஞ்சாலையை ஒட்டி, மேம்பாலத்துக்குக் கீழே உள்ள திறந்த வெளியில் கூடாரம் அமைத்து 25 குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. ‘25 வருஷமா இங்கேதான் இருக்கோம் சாமி. ஊரே மாறிப்போச்சு. பாத்தீங்களா... எங்க கூடாரம் அப்படியே இருக்கு’ என்கிறார் சிவலிங்கப்பா. அவர் சொல்வது உண்மைதான். ஊர் மாறித்தான் போய்விட்டது. ‘ஆறுவழி சாலையாம்... எட்டுவழி சாலையாம்! எங்களுக்கு ஒரு வழியும் பொறக்கலியே’ என்று தலையில் கைவைத்து அரற்றுகிறார் ஒரு பகல் வேஷக் கலைஞர்.

இந்தக் கொட்டகைகளில்தான் கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். பசியின் வர்ணங்களைப் பூசிக்கொண்டு குழந்தைகள் வளர்கிறார்கள். ‘குழந்தைகளைப் படிக்க வைக்கக் கூடாதா?’ என்ற கேள்விக்கு ‘ஓ படிக்கிறோமே! சில பேர் படிச்சுட்டு போலீஸாவும் ஆயிருக்காங்க! அந்த வேஷம் எங்களுக்கு வேண்டாம்... எங்களுக்குப் பகல் வேஷம்தான் புடிச்சிருக்கு! வேலைக்குப் போக இஷ்டமில்லே?’

‘ஏன் அப்படி?’

‘இது கலை சாமி. இதுதான் எங்க கடவுள். இதை வுட முடியாது. வுட மாட்டம்னு எங்க பாட்டனுக்குச் சத்தியம் பண்ணிக்கொடுத்திருக்கோம்!’

‘உங்களுக்கு ஆந்திராதானே சொந்த ஊர்?’

‘தமிழ்நாடும் சொந்த ஊர்தான். ஆந்திராலயும் டெண்ட் கொட்டாயி வூடுதான்!’

‘மழை வந்தா என்ன பண்ணுவீங்க?’

‘அதோ அந்தக் கோயிலுக்குள் ஒதுங்கிக்குவோம்!’

சாயங்காலம் கூடாரம் திரும்பியதும் ஒப்பனை கலைக்கும் வேலை நடக்கிறது. இது அத்தனை சுலபமில்லை. முகத்தில் ஒட்டிய வெறும் ஒப்பனைச் சாயம் அல்ல அது. காலம்காலமாக, தலைமுறை தலைமுறையாக உயிரோடு ஒட்டிய மற்றொரு உடம்பு. அதை அவ்வளவு லேசில் கலைத்துவிட முடியுமா என்ன?

புதிதாக யார் வந்தாலும் அந்நியோந்நியமாகச் சூழ்ந்துகொள்கிறார்கள். ஒரு விடியல் எப்போதாவது, யார் வடிவிலாவது வராதா என்ற ஏக்கமே காரணம்.

‘என் பேரு பீமா.. நான் பீமர் வேஷம்தான் போடுவேன்! என் பேரு கிருஷ்ணா... நான் கிருஷ்ணர் வேஷம்தான் போடுவேன்! நான் ஈஸ்வரப்பா... என் பேரு சிவலிங்கப்பா!’

குரல்களில் உற்சாகத்துக்குப் பஞ்சமில்லை.

‘ராமர் எங்கேப்பா?’

‘மொத்தம் 10 ராமர் இருக்காங்க. எல்லாரும் லைனுக்குப் போயிருக்காங்க... வர்ற நேரம்தான்.’

இருட்டியதும் லங்கா தகனம். அதாவது, வேலிக்காத்தான் விறகடுப்பு. கூடாரத்துக்கு முன்னால் எரிகிறது. சமையல் வாசனை மூக்கைத் துளைக்கிறது.

அப்புறமென்ன? நிலாச் சாப்பாடுதான். ஆர்மோனியமும் தபலாவும் போட்டிபோட பாடியபடி ஆட்டம்தான்!

‘கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்’ என்று மறந்துபோய்கூட இவர்களிடம் சொல்லிவிடாதீர்கள். மனிதர்கள் மத்தியில் கடவுளர்களை உயிர்ப்போடு காப்பாற்றிவருவது இவர்களே அல்லவா?.

- தஞ்சாவூர்க் கவிராயர், ‘அகத்தைத் தேடி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x