Published : 06 Apr 2016 09:14 AM
Last Updated : 06 Apr 2016 09:14 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- மதச்சார்பற்ற அணி எனும் அவதாரம்!

மதச்சார்பற்ற அணி என்ற கருத்தாக்கம் தமிழகத் தேர்தல் களத்தில் தீவிரம் தொடங்கியது 90-களின் இறுதியில்தான். அதற்குத் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் பாஜகவுடன் கரம் கோத்தது முக்கியக் காரணம். அதற்கான எதிர்வினையாகவே இடதுசாரிகள் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டத் தொடங்கினர்.

முதலில் 1999 மக்களவை தேர்தலில் அதிமுகவோடு அணியமைத்தவர்கள், பிறகு 2001 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அணியிலேயே நீடித்தனர். அந்த அணியில் இடதுசாரிகள் இருவருக்கும் தலா 8 தொகுதிகள் தரப்பட்டன. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுவது அதுதான் முதன்முறை. திமுக, பாஜக அணிக்கு எதிரான வலுவான அணி, ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு போன்ற அம்சங்கள் வெற்றிக்கு உதவின. அதனால் அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தது. அந்த அணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்தன.

தொங்கு சட்டமன்றம்

மூன்றே ஆண்டுகளில் மக்களவைக்குத் தேர்தல் வந்தது. தமிழகத்தில் அதிமுகவோடு பாஜக அணி சேர்ந்தது. அதனால் திமுக அணிக்கு இடதுசாரிகள் சென்றனர். மதச்சார்பற்ற அணி என்ற நோக்கத்துக்காகக் காங்கிரஸோடும் கரம் கோத்தனர். அந்த அணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 3, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 என்ற அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இடதுசாரிகள் இடம்பெற்ற இந்த அணிக்குத் தமிழகத்தில் 100 சதவீத வெற்றி கிடைத்தது. மத்தியிலும் இடதுசாரிகளின் ஆதரவோடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தது.

திமுக, காங்கிரஸுடனான உறவை 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தனர் இடதுசாரிகள். இந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு 13, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த அணிக்குத் தேர்தல் களத்தில் கணிசமான வெற்றி கிடைத்தது. ஆனால் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. என்றாலும், இடதுசாரிகள் உள்ளிட்டோர் வெளியிலிருந்து ஆதரவளிக்க, திமுக ஆட்சியமைத்தது.

காங்கிரஸ், திமுகவோடு இடதுசாரிகள் பேணிய உறவுக்கு இந்தியா, அமெரிக்க இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் முடிவுரை எழுதியது. மன்மோகன்சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றனர் இடதுசாரிகள். அதன்பிறகு வந்த 2009 மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்ற அணியில் இடம்பெறாமல், அதிமுகவுடன் அணி அமைத்தனர். அந்த அணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 4, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 என்ற அளவில் தொகுதிகள் தரப்பட்டன.

ஸ்பெக்ட்ரம் முறைகேடும் ஈழத்தமிழர் பிரச்னையும் தீவிரமாகப் பேசப்பட்ட அந்தத் தேர்தலில் இந்திய அளவில் ஐ.மு.கூட்டணி அதிக இடங்களை வென்றது. தமிழகத்திலும் கணிசமான வெற்றி கிடைத்தது. அதிமுக அணியில் இடம்பெற்ற இடதுசாரிகள் இருவருக்கும் தலா ஒரு தொகுதி கிடைத்தது. மத்தியில் மீண்டும் மன்மோகன் சிங் அரசே அமைந்தது.

கடந்த சில தேர்தல்களாகப் பாஜகவுக்கு எதிரான அணி அமைப்பதில் முனைப்பு காட்டிய இடதுசாரிகள், 2009 முதல் காங்கிரஸுக்கு எதிரான அணி அமைக்கவும் ஆர்வம் செலுத்தினர். அது 2011 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x