Last Updated : 27 Apr, 2016 09:15 AM

 

Published : 27 Apr 2016 09:15 AM
Last Updated : 27 Apr 2016 09:15 AM

தலைநூல்: தேசிய மொழியாகத் தமிழ்!

அரசியல் சாசன சபையில் தேசிய மொழி பற்றி காயிதேமில்லத் (14-09-1949)

நேற்று பிரதமர் நேரு மூன்று அம்சங்களை வலியுறுத்திப் பேசினார். முதலில் தேசிய மொழி பற்றிய மகாத்மா காந்தியின் கருத்துகளை மேற்கோள் காட்டினார். இரண்டாவதாக, நாம் பின்நோக்கிச் செல்லக்கூடாது என்றார். மூன்றாவதாக, உலகம் சுருங்கிவருகிறது என்றார்.

நாட்டின் தேசிய தொழியாகத் தேர்ந்தெடுக்கக்கூடிய மொழி ஒரு இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும். நாட்டு மக்களில் அதிகம் பேரால் அது பேசக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நமது தேசிய வாழ்வில் தற்காலப் போக்குகளையும் நவீன கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் அவற்றை நன்குப் பிரதிபலிக்கும் வகையிலும் அந்த மொழி இருக்கவேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது, இந்த அம்சங்கள் பற்றி கருத்து முரண்பாடு இல்லை என்று நான் கருதுகிறேன்.

அப்படியானால் அப்படிப்பட்ட மொழி எது? எல்லா அம்சங்களிலும் திருப்தியான மொழி எது? இதுதான் இன்றைய விவாதம். இதுகுறித்து மகாத்மா காந்தியை நான் மேற்கோள் காட்டுவதை விட வேறு எதுவும் சிறப்பாகச் சொல்ல முடியாது. 1947 ஆகஸ்ட் 10-ல் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் “டில்லியில் என்னை தினசரி இந்துக்களும் இஸ்லாமியர்களும் சந்திக்கின்றனர். இந்துக்கள் அதிகம் வருகின்றனர். அவர்களின் மொழியில் சமஸ்கிருதம் உள்ளது. அரபி, பார்ஸி வார்த்தைகள் அதிகம் இல்லை. இவர் களில் பெரும்பாலோனோருக்கு தேவ நாகரி லிபி தெரியாது. அவர்கள் எனக்கு ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். ஒரு அந்நிய மொழியில் எழுதுவது ஏன் என்று நான் அவர்களைக் கோபித்துக் கொள்ளும்போது அவர்கள் உருது லிபியில் எழுதுகிறார்கள். நமது நாட்டின் தேசிய மொழியாக இந்திதான் இருக்க வேண்டும், அது தேவநாகரி மொழியில் தான் எழுதவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டால், நான் மேலே சொன்ன இந்துக்களின் நிலை என்ன? கதி என்ன?” இது மகாத்மா காந்தி எழுப்பிய கேள்வி. 1947 ஆகஸ்ட் மாதத்தில் எழுப்பிய கேள்வி.

டில்லியையும் அதைச்சுற்றியுள்ள பகுதி களையும் சேர்ந்தவர்களைப் பற்றித்தான் அவர் குறிப்பிடுகிறார். அவரது வார்த்தை களை நான் அப்படியே படிக்கிறேன்.

“இந்தியாவிலுள்ள கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாசிக்கத் தெரியாது. அவர்கள் பேசும் மொழி இந்துஸ்தானி. அதை முஸ்லிம்கள் உருது லிபியில் எழுதுகிறார்கள். இந்துக் கள் தேவநாகரி லிபியில் எழுதுகிறார்கள். எனவே நமது கடமை இரண்டு லிபிகளையும் கற்றுக்கொள்வதுதான்.

மகாத்மாவின் கருத்து இதுதான். பெரும்பான்மை மக்கள் மொழியான இந்துஸ்தானிதான் தேசியமொழி. அதை இரண்டு லிபிகளிலும் எழுதவேண்டும். அதையே இந்தச் சபை ஏற்க வேண்டும்.

சில நண்பர்கள் இந்திய மொழியாகவும் மிகவும் பழமையான மொழியாகவும் நமது தேசிய மொழி இருக்கவேண்டும் என்கிறார்கள். அப்படியானால் நான் இந்த சபைக்கு ஒரு உண்மையை தைரியத்துடன் சொல்வேன். “இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும் ஆரம்பகாலத்திலிருந்து பேசப்பட்டுவரும் மொழியாகவும் இருப்பது தமிழ்தான். இந்த மண்ணில் பேசப்பட்ட முதல் மொழி திராவிட மொழி என்பதை எந்த வரலாற்றாசிரியரும் மறுக்கமாட்டார். எந்த புதைபொருள் ஆராய்ச்சியாளரும் எதிர்க்கமுடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும் நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது புராதன மொழி. எனது தாய்மொழி. புராதனமானதைத்தான் சொல்லவேண்டும் என்றால், இந்த நாட்டின் தேசியமொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேவநாகரி லிபியிலும் உருது லிபியிலும் எழுதப்படும் இந்துஸ்தானி என்ற மொழியே தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்றும் சர்வதேச எண்களாக இருக்கும்

‘இந்திய' எண்கள்தான் அரசாங்க புழக்கத்தில் இருக்க வேண்டும் நான் கோரியுள்ளேன்.

மத்திய ஆட்சிமொழியாக ஆங்கிலமே 15 ஆண்டுகளுக்கு இருந்துவருவது எனும் விதியை நாடாளுமன்றத்தின் இருசபைகளும் தங்களது பெரும்பான்மை மூலம் வேறுவிதமாக கருத்து தெரிவிக்காதவரையில் ஆங்கிலமே இந்த நாட்டின் தேசிய மொழியாக நீடிக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.

தொகுப்பு: நீதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x