Last Updated : 25 Apr, 2016 09:01 AM

 

Published : 25 Apr 2016 09:01 AM
Last Updated : 25 Apr 2016 09:01 AM

உடைந்து விழும் பாலம்?

திருவனந்தபுரம் டு குவாஹாட்டி - தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை



*

“கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் காங்கிரஸ் எதிர்ப்பே எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நான் காலையில் என்னுடைய தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்குப் பிரச்சாரம் செய்கிறேன். வெயில் குறைந்தவுடன் பக்கத்துத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்குச் சேகரிக்கப் புறப்பட்டுவிடுவேன் - இது என்னுடைய 70 வயது உறவினர் சொன்னது” என்றார் மானினி சட்டர்ஜி. அவர் கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகையின் ஆசிரியர். அவரது மாமியார் மிகப் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை கல்பனா தத். மாமனார் பி.சி.ஜோஷி. கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சென்ற நூற்றாண்டின் 40-களில் பணியாற்றியவர்.

மானினியிடம் மேற்கு வங்காளத் தேர்தலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் முக்கியமானது என்று கருதியது காங்கிரஸுக்கும் இடது கம்யூனிஸ்ட்டு களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த இணக்கம்தான். “இது மேலிருந்து வந்ததல்ல.. அடிமட்டத்திலிருந்து மேலிருப்பவர்களுக்கு உணர்த்தப் பட்டது.”

இந்த இணக்கம் கட்சியின் அடிப்படைவாதிகளுக்கு, பிரகாஷ் காரத் போன்றவர்களுக்குப் பிடித்திருக்காது. ஆனால், வேறு வழியில்லை என்று எனக்குத் தோன்றியது. மானினியிடம் கேட்கவில்லை.

“40-கள் நினைவுக்கு வரவில்லையா?” என்று நான் கேட்டேன்.

அவர் சிரித்தார். அவரது மாமனார், பி.சி.ஜோஷி, நேருவை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னதற்காகக் கட்சியிலிருந்து 1949-ம் ஆண்டில் நீக்கப்பட்டவர்.

டெல்லியில் இருக்கும் தலைவர்களுக்குப் புரியாதது மக்களிடையே உழைக்கும் மாநிலத் தலைவர் களுக்குப் புரிந்திருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம். நான் சமீபத்தில் படித்த சூர்யகாந்த் மிஸ்ரா என்ற மார்க்சிஸ்ட் தலைவரின் நேர்காணல். இவர் மேற்கு வங்காள சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர். கட்சியின் மாநிலச் செயலாளர்.

ஓநாய்களும் புலிகளும்

“எங்களது எட்டு வார்த்தை முழக்கம் இது - ‘திரிணமூலை அகற்றுங்கள், வங்கத்தைக் காப்பாற்றுங்கள். பாஜகவை அகற்றுங்கள். இந்தியாவைக் காப்பாற்றுங்கள்.’ நாங்கள் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றுவோம். வரப்போவது எட்டாவது இடதுசாரி அரசு அல்ல. வரப்போவது இடதுசாரி ஜனநாயக, மதச்சார்பற்ற அரசு. இந்தக் கூட்டணி பிஹாரில் அமைந்ததுபோல சில அரசியல் கட்சிகள் சந்தித்ததால் ஏற்பட்டது அல்ல. அடித்தளத்தில் ஏற்பட்டது.’

மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்திரி சொல்கிறார்: ‘2011-ல் திரிணமூலுடன் சேர்ந்து 34 வருடங்கள் ஆண்ட இடதுசாரி முன்னணி ஆட்சியைக் கீழே இறக்கினோம். ஆனால், அவர்கள் ஓநாய்கள் என்றால் மம்தா மனிதர்களை, ஜனநாயகத்தைக் குதறித் தின்னும் புலி.’

இந்த வீரவசனங்கள் எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், மம்தாவை ஐந்தே ஆண்டுகளில் மக்கள் தூக்கி எறிவார்களா?

மிகவும் கடினம், ஆனால் முடியாதது அல்ல என்கிறார் மானினி சட்டர்ஜி.

வேலை என்பது கனவுதான்

‘மம்தா பதவிக்கு வந்தது ‘மாற்றம்’ என்ற முழக்கத்தின் அடிப்படையில். ஆனால், மாறியது கொள்ளைக்காரர்களும் திருடர்களும். திருட்டுகளும் கொள்ளைகளும் மாறாமல் நடந்துகொண்டிருக்கின்றன’ என்கிறார் எனது மற்றொரு நண்பரான டிங்கு ஆசாரியா. ‘2011-ல் பல சிறிய குழுக்கள் மம்தா பக்கம் இருந்தன. அறிவுஜீவிகள் அவருக்காகப் பேசினார்கள். இன்று அவர் தனிமரமாக நிற்கிறார். சிங்கூர், நந்திகிராம் போராட்டங்கள் கனவாக மறைந்துவிட்டன. இங்கு வேலை என்பதும் கனவுதான். முன்பு மக்கள் இங்கு வேலை தேடி வந்தார்கள். ஆனால், இன்று வங்காளிகள் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. ‘மா, மாடி, மனுஷ்’ (அம்மா, மண், மனிதர்கள்) என்று சொல்லிப் பதவிக்கு வந்தார். ஆனால், இப்போது அவரது கட்சி தீவிரம் காட்டுவது நான்காவது ‘ம’வுக்குத் தான். அந்த ‘ம’என்ன தெரியுமா? மணி!’ என்கிறார் அவர்.

உண்மை தெரிந்துவிட்டது மம்தா

மம்தா பணவெறி பிடித்தவர் என்று அவரது எதிரிகள்கூடச் சொல்ல மாட்டார்கள். ஆனால், அவரது கட்சி முழுவதும் எதிலும் காசு பார்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது இரு நிகழ்வுகளால் உறுதியாகிவிட்டது. முதலாவது, சாரதா சீட்டு நிறுவன ஊழல். மக்களிடமிருந்து வசூலித்த ரூ. 30,000 கோடிமாயமாக மறைந்துவிட்டது. ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திரிணமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒருவர் அமைச்சர். பழிவாங்குதல் என்று மம்தா அலறினாலும் மக்களுக்கு எது உண்மை என்பது நிச்சயம் தெரிந்துவிட்டது என்கிறார் நண்பர்.

இரண்டாவது நிகழ்வு, கல்கத்தா நகரின் மத்தியில் கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்து 28 பேர் பலியானது. மேம்பாலத்தின் துணை ஒப்பந்ததாரர்கள் அனைவரும் திரிண மூல் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேம்பாலம் விழுந்ததுபற்றி கிராம மக்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கட்சி சொல்லிக் கொண்டாலும் இதை ஒரு குறியீடு என்று நாம் கருதலாம்.

மிகவும் பாடுபட்டு தனக்கும் மக்களுக்கும் இடையே மம்தா கட்டிய பாலம் இடிந்து விழும் அபாயம் இருக்கிறதா?

தொடரும்

- பி. ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x