

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் எழுதும் 23 இளம் எழுத்தாளர்களுக்கு யுவபுரஸ்கார் விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த 30, 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் நிகழ்வாக வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. ‘நட்சத்திரவாசிகள்’ நாவலுக்காகத் தமிழுக்கான யுவபுரஸ்கார் விருது கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக எஸ்.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். 2000-க்குப் பிந்தைய தமிழ் இலக்கியத்தைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். குறிப்பாக, 2000-க்குப் பிந்தைய தலைமுறையை ‘பாஸ்வேர்டு தலைமுறை’ என்று அவர் குறிப்பிட்டார். உலகமயமாதலுக்கு முன்பு கிராமம், நகரம் என்று இலக்கியத்தில் இருந்த வேறுபாடு தற்போது இல்லை என்றும் குறிப்பிட்டார். கார்த்திக் பாலசுப்ரமணியன் தனது ஏற்புரையில் பேசும்போது, “என் கல்லூரிக் காலம் வரை அண்டை மாநிலத்தவரோடு ஒரு ‘ஹலோ’ சொல்லக்கூட வாய்க்காத நானே, இன்று என் பணியின் நிமித்தம் தினம் ஐந்து, ஆறு தேசத்தவர்களோடு பேசுகிறேன். இப்படித் தொழில்நுட்பச் சாத்தியங்கள் நம் அத்தனை பேரையும் ஒன்றிணைக்கும் அதே வேளையில் ஒரு வீட்டில், ஒரே கூரையின் கீழ் வாழும் இரண்டு பேரைக்கூட தனித் தனி தீவாய்ப் பிரித்துவைக்கும் அபத்தமும் இணைந்தே இங்கே நிகழ்கிறது” என்றார். அமைதியை நோக்கிச் செயல்படும் அனைவருக்கும் தன் விருதை அவர் சமர்ப்பித்தார்.
ஆண்டுதோறும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் இந்த விருதளிப்பு விழா, இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இப்படிப்பட்ட நிகழ்வை சாகித்ய அகாடமி முறையாகத் திட்டமிடாததால் எழுத்தாளர்கள், ஊடகங்கள், வாசகர்களுக்கு இந்த நிகழ்வு குறித்த தகவல்கள் போதுமான அளவு சென்றுசேரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்திய அளவில் முக்கியமான இலக்கிய நிகழ்வொன்றுக்கு சுமார் முப்பது பேர்தான் பார்வையாளர்களாக வந்திருந்தார்கள் என்பது வருத்தத்துக்குரியது. சனி அல்லது ஞாயிறு நடத்தியிருந்தால் கூட்டம் அதிகமாக வந்திருக்கும். சாகித்ய அகாடமி வழக்கமான அரசு நிறுவனம்போல் நடந்துகொள்வதுதான் இதற்குக் காரணம் என்றும் விமர்சிக்கிறார்கள். பத்திரிகையாளர் சந்திப்புகூட நடத்தப்படவில்லை என்றால் என்னவென்று சொல்வது. மேலும், இலக்கியம் என்பதே எல்லோரையும் இணைப்பது; இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருப்பவர்கள் தமிழ்நாட்டுப் பண்பாட்டை அறிந்துகொள்ளும் விதத்தில், ஒரு சுற்றுலாவுக்கு சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருக்கலாமே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. குறைந்தபட்சம் மாமல்லபுரத்திற்காவது விருதாளர்களை அழைத்துச்சென்றிருக்கலாமே என்கிறார்கள்.