Last Updated : 07 Apr, 2016 10:02 AM

 

Published : 07 Apr 2016 10:02 AM
Last Updated : 07 Apr 2016 10:02 AM

உருவானார் அன்புமணி

தமிழகத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய அரசியல் நிலவரப்படி, குறைந்தபட்சம் ஐந்து முனைப் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2016 சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் எழுவதற்கு முன்னரே, முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அதற்கான முதல்கட்டப் பணிகளைத் தொடங்கியவர் பாமக இளைஞர் அணித் தலைவரான அன்புமணி. ‘நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு யாரும் தேவையில்லை’ என்று ‘காலர் மைக்’குடன் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கும் அன்புமணியின் அரசியல் வாழ்க்கை சுவாரஸ்யங்கள் நிறைந்தது.

முதல் மாணவர்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் இரண்டாவது வாரிசாக, 1968 அக்டோபர் 9-ல் பிறந்தார் அன்புமணி. சேலம் மாவட்டம் ஏற்காடு மாண்ட்போர்ட் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தவர், திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்தார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) மருத்துவப் படிப்பு முடித்த பின்னர், திண்டிவனம் நல்லாளம் கிராமத்தில் ஒன்றரை ஆண்டு காலம் மருத்துவராகப் பணியாற்றினார். லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதாரப் படிப்பையும் முடித்தார். இறகுப் பந்து, டென்னிஸ் என பல்வேறு விளையாட்டுகள் மீது அவருக்கு ஆர்வம் உண்டு. இந்த ஆர்வம், மருத்துவக் கல்லூரியில் படித்தபோது அவரைக் கல்லூரியின் விளையாட்டுத் துறைச் செயலாளராக ஆக்கியது. இப்போது தமிழ்நாடு இறகுப் பந்தாட்ட சங்கத்தின் தலைவர் அன்புமணிதான்.

அமைச்சர், கட்சிப் பதவி

‘பசுமைத் தாயகம்’ அமைப்புதான் அன்புமணியின் அரசியல் வாழ்க்கைக்கான நுழைவாயில். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பசுமைத் தாயகத்தை ராமதாஸ் தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பு அன்புமணிக்குக் கிடைத்தது. அந்த அமைப்பின் தலைவராக 7 ஆண்டுக் காலம் பணியாற்றினார். தொடர்ந்து அவருடைய நிர்வாகம், பாமகவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றாலும், 2004-ல் திமுகவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார். பின்னர் 2006-ல் தான் கட்சியின் இளைஞர் அணித் தலைவரானார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகும் வரை பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த அன்புமணி, அமைச்சரானதும் அப்பதவியில் தனது மனைவி சவுமியாவை அமரவைத்தார். அன்புமணி தம்பதிக்கு சம்யுக்தா அன்புமணி ப்ரித்தீவன், சங்கமித்ரா சவுமியா அன்புமணி, சஞ்சுத்ரா சவுமியா அன்புமணி என மூன்று மகள்கள் உள்ளனர்.

சாதனைகள்

2004 - 2009 வரை மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி, பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச் சட்டம்; திரைப்படங்களில் புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தது; புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை அச்சிடச் செய்தது; குட்காவுக்குத் தடை, போலியோ ஒழிப்புக்கான திட்டங்கள், எச்.ஐ.வி. - எய்ட்ஸ் நோயின் தாக்கம் 50% குறைகிற அளவுக்கான நடவடிக்கைகள் என்று கவனிக்கத்தக்க பணிகளைச் செய்தார். இக்காலகட்டத்திலேயே ‘தேசிய ஊரகச் சுகாதார இயக்கம்’, ‘108 ஆம்புலன்ஸ் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன.

சென்னை தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையம், தேசிய பள்ளிக் குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டம் போன்றவற்றைக் கொண்டுவந்ததில் அன்புமணிக்கு முக்கியப் பங்கு உண்டு. இப்பணிகள், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் அவருக்கு முதல் இடத்தைப் பெற்றுத் தந்தன.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்தபோது, 2000-ல் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாடு, 2002-ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு, 2003-ல் ஜப்பானின் கியோட்டா நகரில் நடைபெற்ற உலக நீர் மாநாடு, 2012-ல் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு என்று பல முக்கிய மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். 2013-ல் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று, இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார்.

நம்பிக்கை விதை

ராமதாஸின் எதிர்ப்பையும் மீறி 2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவதற்கு அன்புமணிதான் முக்கியக் காரணமாக இருந்தார். தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தருமபுரியில் அவருக்குக் கிடைத்த வரவேற்பு, ராமதாஸுக்கு நம்பிக்கையை அளித்தது. இதையடுத்து, பாமகவின் அரசியல் வியூகங்கள் மாறின. இதைத் தொடர்ந்து அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பாமக.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் நாங்கள்தான் மாற்று என்று பாமக கிளம்பியிருக்கும் சூழ்நிலையில், அக்கட்சியின் ஆதார நம்பிக்கை அன்புமணிதான். இதன் விளைவுதான் ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்னும் முழக்கம். மேடைப் பேச்சுக்கள், கருத்தரங்குகள் தொடங்கி ஃபேஸ்புக் பக்கம் வரை பல தளங்களில் தொடர்ந்து இயங்குகிறார். அன்புமணியின் அரசியல் மூலம் அடுத்த தலைமுறை அரசியலைத் தொடங்கியிருக்கிறது பாமக.

‘முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு’ போன்ற நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகள் கவனிக்கவைக்கின்றன. “சாதியக் கட்சி என்கிற விமர்சனத்தை நாங்கள் கடப்போம்; அனைவருக்குமான பொது இயக்கமாக பாமக செயல்படும்” என்று சொல்கிறார் அன்புமணி. பல விஷயங்களில் அன்புமணியிடமும், பாமகவிடமும் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. வார்த்தைகளிலுள்ள மாற்றம் செயல்பாடுகளிலும் தொடரும்போது அன்புமணி தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார்!

தொடர்புக்கு: kannan.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x