Published : 23 Mar 2022 06:33 AM
Last Updated : 23 Mar 2022 06:33 AM

பள்ளிக் கல்வியில் ஒரு வெளிச்சக் கீற்று

சு.உமாமகேஸ்வரி

புதிய அரசு அமைந்த சில மாதங்களிலேயே பள்ளிக் கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. கடந்த ஞாயிறு (20.3.2022) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,200 எண்ணிக்கையிலான தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்புக்கான ஆயத்தக் கூட்டம் பிரம்மாண்டமாக விழாக்கோலம் பூண்டிருந்தது. மாநிலமெங்கும் 23 லட்சம் பெற்றோர்கள் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். பள்ளிகள் தொடர்பாகப் பெற்றோர்களுடன் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய நிகழ்வு இது.

2009-ம் ஆண்டின் இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தின் மிக முக்கியக் கூறுகளில் ஒன்று, பள்ளி மேலாண்மைக் குழு (SMC-School Management Committee). அரசுப் பள்ளிகள் அனைத்திலும் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டிய அமைப்பு இது. பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் என்று 20 உறுப்பினர்களை உள்ளடக்கியதுதான் SMC. பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர்தான் இவ்வமைப்பின் தலைவராக இருக்க வேண்டும். பெண்களுக்குத்தான் தலைவருக்கான முன்னுரிமை தரப்படுகிறது.

மாற்றுத் திறனாளிக் குழந்தையின் பெற்றோர், பள்ளியில் படிக்கும் குழந்தையின் தூய்மைப் பணியாளர் பெற்றோர், பட்டியலின-பழங்குடியினக் குழந்தைகளின் பெற்றோர் இவர்களுள் ஒருவரே துணைத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டம் வழிகாட்டுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியரே குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உறுப்பினராகவும் இருப்பார். அவரைத் தவிர, பள்ளியின் ஆசிரியர் ஒருவர் உறுப்பினராகச் செயல்பட வேண்டும். பள்ளியில் படிக்கும் நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் 12 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்களில் 7 பேர் பெண்களாக இருப்பது கட்டாயம் என்கிறது சட்டம்.

மேலும், பள்ளிப் பகுதியைச் சேர்ந்த, உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் இருவர் SMC-ன் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களில் ஒரு பெண் இருக்க வேண்டும். கல்விமீது ஆர்வம் கொண்ட உறுப்பினர் ஒருவர், ஓய்வுபெற்ற ஆசிரியரோ அரசுசாரா அமைப்பினரோ குழுவில் இடம்பெறுவார்கள். இவர்கள் அனைவருடனும் சேர்த்து, சுய உதவிக் குழுவில் இருக்கும் பெற்றோர் ஒருவர் என மொத்தம் 20 உறுப்பினர்களுடன் SMC கட்டமைக்கப்பட வேண்டும். இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதியதாக இக்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பள்ளிப் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பதற்குமான முன்னெடுப்புகளில் இக்குழு கவனம் செலுத்துவதோடு, குழந்தைகளின் பாதுகாப்பு, பள்ளிகளுக்குத் தேவைப்படும் வகுப்பறை, குடிநீர் கழிப்பறை கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் பாதுகாப்பு, ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளி நூலகத் தேவை, குழந்தைகளுக்கான பிற தேவைகள், பாலியல்ரீதியாக உருவாகும் பிரச்சினைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது, உயர் கல்வி மாணவர்களுக்கு வழிகாட்டுவது, உதவிசெய்வது என்று பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் தரமான கல்விக்கும் பாதுகாப்பான கல்விக்கும் ஆசிரியர்களுடன் இணைந்து பொறுப்பேற்பதுதான் இக்குழு உறுப்பினர்களின் பணிகள்.

உறுப்பினரல்லாத பெற்றோர்கள் இக்குழுக் கூட்டத்தில் அவர்களது கருத்துகளையும் வெளிப்படுத்தலாம். தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஜனநாயக முறையில் கலந்துரையாடி முடிவுகளை எடுத்துப் பள்ளியை மேம்படுத்த முன்வருவதும், பள்ளிகளின் வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்துவதும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளின் நீட்சியாக இருக்கும் எனலாம்.

இவை மட்டுமின்றி, வருடத்தில் 4 முறை நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் (ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2) பள்ளி வளர்ச்சித் தீர்மானங்களை அரசுக்கு அளித்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களின் வழியாகப் பள்ளிக்கான தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளலாம்.

இப்படியாக, அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த, வளப்படுத்த உதவும் மிகச் சிறந்த ஆயுதமே பள்ளி மேலாண்மைக் குழுக்கள். 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்களிடம், பெற்றோரிடம் இது குறித்த விவரங்கள் முழுமையாகச் சென்று சேராமல் இருந்தன. தங்கள் சிக்கல்களைச் சமாளிக்க இயலாமல் நலிவடைந்த அரசுப் பள்ளிகளும் உண்டு. அவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வாக இந்த நிகழ்வைப் பார்க்கலாம்.

மக்களுக்கான ஒரு அரசானது சமூகத்தின் ஆதாரமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விவரங்களை மாநிலம் முழுவதும் ஒரே நாளில் விழிப்புணர்வாக எடுத்துச்சென்றதை நேர்மறையாகப் பார்க்கலாம். இந்த நிகழ்வு, அனைத்துப் பெற்றோரிடமும் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் முதல் வாரம் மீண்டும் பெற்றோர்கள் வந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். அப்படி உறுப்பினராகும் பெற்றோர்கள் உள்ளிட்ட சமூகம் நமது அரசுப் பள்ளிகளின் நீண்ட காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் நியமிப்பதை மாநிலம் முழுக்க SMC கோரிக்கையாக வைத்து ஆசிரியர்களை அமர்த்தினால் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும்.

அதே போல முதல்வர் வெளியிட்டுள்ள வாசிப்பு இயக்கம் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் இக்குழு உறுப்பினர்கள் நடைமுறைப்படுத்தினால், சமூக மாற்றங்கள் நிகழும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மழலையர் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், கற்பித்தல் உபகரணங்கள், புதிதாக அரசுப் பள்ளிகளை வந்தடைந்திருக்கும் பல லட்சம் குழந்தைகளுக்கான ஆசிரியர் நியமனம், கழிப்பறை வசதிகள், துப்புரவுப் பணியாளர்கள் நியமனம், சுற்றுச்சுவர் அமைப்பு, இரவுக் காவலரை நியமித்துப் பள்ளி வளாகத்தைப் பாதுகாத்தல், பள்ளித் தளவாடப் பொருட்கள், பள்ளிகளில் குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகர் நியமனம் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கவனம் செலுத்தினால், நம் பள்ளி என்றுமே நம் பெருமைதான். அரசுப் பள்ளிகளைப் பொலிவு பெறச் செய்யப்போவது இந்த SMC என்ற வெளிச்சக்கீற்றுதான் என்பதில் ஐயமில்லை.

- சு.உமாமகேஸ்வரி, ஆசிரியர், கல்வியாளர்.

தொடர்புக்கு: uma2015scert@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x