Last Updated : 19 Apr, 2016 09:20 AM

 

Published : 19 Apr 2016 09:20 AM
Last Updated : 19 Apr 2016 09:20 AM

மநகூ மாற்றத்துக்கானது அல்ல!- சோம்நாத் பாரதி சிறப்புப் பேட்டி

ஆம் ஆத்மி கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் என்பதோடு, அக்கட்சியின் தென்னிந்தியத் தேர்தல் பொறுப்பாளருமாக இருப்பவர் சோம்நாத் பாரதி. தமிழக, கேரள தேர்தல் களம் தகிக்கும் நிலையில், சத்தமே இல்லாமல் இருக்கிறது ஆஆக. என்ன திட்டத்தில் இருக்கிறார்களாம்? பேசினேன்.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களிடையே இருந்த மோதல் இப்போது எப்படி இருக்கிறது?

பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய குழு ஒரு வருடமாக சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. தற்போது வசீகரன் அமைப்பாளராகவும் தாமோதரன் இணை அமைப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார்கள்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆஆக போட்டியிடுகிறதா?

இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தேசிய அளவில் நாம் தயாராக இருந்தாலும் மாநிலத்தில் எங்கள் கட்சியினர் இன்னும் தயாராகவில்லை. கடைசி நாள் வரை காத்திருந்துகூட முடிவெடுப்போம். போட்டியிட்டால் அனைத்துத் தொகுதி. இல்லை எனில் போட்டியே கூடாது என்பது என் கருத்து. தமிழகத்தில் ஒரு மாற்றுக் கட்சியாக எழவே நாங்கள் விரும்புகிறோம்.

தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பற்றி தங்கள் கருத்து என்ன?

தமிழகத்தில் இதுவரை போட்டியிட்ட கட்சிகள் அனைத்தும் முதலாளித்துவவாதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளன. முதலாளித்துவவாதிகளின் ஆதரவு பெற்று ஆட்சிக்கு வருபவர்களால் பொதுமக்களுக்குச் சேவை செய்ய முடியாது. தமிழகத்தின் பெரும்பாலான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் இன்றைக்கு அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கும் ஒரு உதாரணம் போதும் என்று நினைக்கிறேன்.

மக்கள் நலக் கூட்டணியினர் மாற்று பேசுகிறார்கள். அவர்களும்கூட முதலாளித்துவவாதிகளின் ஆதரவு பெற்றவர்கள் என்கிறீர்களா?

திமுக, அதிமுகபோல இவர்கள் இல்லை என்றாலும், இவர்களும் முதலாளித்துவவாதிகள் ஆதரவு பெற்ற கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி சேர்ந்துதான் இதுவரை போட்டியிட்டவர்கள் என்பதை நாம் மறக்க முடியாது. எனவே, மநகூ மாற்றத்துக்கானது அல்ல. அவர்களிடம் புது ரத்தம், புதிய சிந்தனை இல்லை. இவர்களும் பழைய சிந்தனை மற்றும் செயல்பாடுகள் கொண்டவர்களே. பெயரிலும் முழக்கத்திலும் மட்டும் மாற்று பேசினால் போதுமா?

நீங்கள் கடுமையாக விமர்சிக்கும் மநகூவில் ஆஆகவும் இணையவுள்ளதாக வைகோ பேசிவந்தாரே?

இதுவரை நாம் நாட்டின் எந்தக் கூட்டணியிலும் இணைவதாகக் கூறவில்லை. கேஜ்ரிவாலை ஒரே ஒரு முறை சந்திக்க வந்தார் வைகோ. அப்போதும்கூட கூட்டணி பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. தனது பிறந்த நாள் விழாவுக்கு வருகை தரும்படி கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கவே சந்தித்தார். வைகோ மீண்டும் சந்திக்க விரும்பியபோது பஞ்சாப் தேர்தலில் கேஜ்ரிவால் முனைப்புடன் இருந்தார். சந்திக்க முடியவில்லை. பிறகு, மார்ச் 31-ல் கேஜ்ரிவாலைப் பாராட்டி வைகோ ஒரு கடிதம் எழுதினார். தம் கூட்டணியில் இணையுமாறு அதில் கேட்டிருந்தார். இதற்கு நாங்கள் அளித்த பதிலில் அவரது பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, யாருடனும் எங்கள் கட்சி கூட்டணி சேர்ந்து போட்டியிடாது என்றும் உறுதியாகக் கூறிவிட்டோம்.

ஆனால், பிஹார் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு நீங்கள் ஆதரவளித்தீர்களே?

நாங்கள் தனி மனிதராக நிதிஷுக்கு ஆதரவளித்தோமே தவிர, அவரது கட்சிக்கு அல்ல. ஒரு ஊழலற்ற அரசியல்வாதியாக, ஒரு பிரச்சினையில் தீர்க்கமான முடிவு எடுப்பவராக நிதிஷ் இருக்கிறார். இதனால், இந்தியாவில் ஆஆக இதுவரை ஆதரித்த ஒரே தலைவர் அவர்.

டெல்லியில் ஆட்சி அமைத்த பின், ஒருமுறை தமிழக கட்சித் தலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகளின் பெயர்களுடன் ஊழல் பட்டியலை வெளியிட்டீர்கள். அதை இன்னும் வலியுறுத்துகிறீர்களா?

கண்டிப்பாக. டெல்லியில் லஞ்சம், ஊழல் ஒழிப்புத் துறையை எங்களிடம் இருந்து மோடி அரசு பறித்ததன் காரணம் என்ன? அவர்கள் சிபிஐயைப் பயன்படுத்தி தன் எதிரிகளை ஒழிப்பதுபோல் அன்றி, மக்களின் எதிரிகளை நாம் ஒழிப்போம் என்பதால் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் தற்போது போட்டியிடும் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் வைத்திருந்த சொத்து எவ்வளவு என மதிப்பிட்டால் மக்களின் உண்மையான எதிரிகள் யார் என்பது தெரிந்துவிடும். முறைகேடான சொத்துகளை அரசு கைப்பற்ற வேண்டும். இதுபோல் கடுமையான சட்டங்கள் இன்றி மாற்றம் ஏற்படாது. அது வெறும் வாய்மொழிப் பேச்சாகவே இருக்கும்.

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதிலும் போட்டியிட்டுக் கிடைத்த படுதோல்விக்குப் பின் நீங்கள் அகலக்கால் வைக்க மாட்டோம் எனக் கூறி இருந்தீர்கள். இப்போது பஞ்சாப், கோவா மாநிலங்களில் ஒரே சமயத்தில் போட்டியிடும் நீங்கள், தமிழகத்தில் மட்டும் தாமதப்படுத்துவது ஏன்?

234 தொகுதிகளைக் கொண்ட தமிழகம் என்பது மிகவும் முக்கியமானது. இங்கு முறையாகத் தயாராகாமல் நாம் போட்டியிட விரும்பவில்லை. தமிழகத்தில் நாம் ஒரு மாற்றுக் கட்சியாக எழ விரும்புகிறோம். பெயருக்காக இன்றி கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வரும்போதுதான் நாங்கள் போட்டியிடுவோம். எங்கள் தமிழகத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் நம்பிக்கை வரும்போதுதான் போட்டி சாத்தியம். இதை அவர்களும் காண்பித்தால்தான் அவர்களைப் போட்டியிட நாம் அனுமதிக்க முடியும். இப்போது போட்டியிடுகிறோமோ இல்லையோ, தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் நாங்கள் இருப்போம். அதுவும் வெகு தூரம் இல்லை!

தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x