Published : 20 Mar 2022 05:17 AM
Last Updated : 20 Mar 2022 05:17 AM

பெண் எழுத்து: கவிதையிலிருந்து புனைவுக்கு…

சங்க காலத்தில் நாற்பத்தோரு பெண் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள்; இவர்கள் அகமும் புறமுமாக 183 பாடல்களைப் பாடியிருக்கிறார்கள் என்று ஔவை நடராசன் (புலமைச் செல்வியர்) பட்டியலிடுகிறார். இந்த எண்ணிக்கையில் வேறுபாடு உண்டு. இருபதாம் நூற்றாண்டில் பால் அடிப்படையில் நவீன இலக்கியத்தைப் பிரித்து ஆய்வுசெய்ய முற்படும்போது எழக்கூடிய ஆண்-பெண் பெயர் பிரச்சினைகள் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது. அதுதான் இந்த எண்ணிக்கை முரண்பாட்டுக்குக் காரணம். சங்க ஆண் கவிகளுடன் ஒப்பிடும்போது பெண் கவிகளின் எண்ணிக்கையும் அவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தாலும் எவ்விதத்திலும் பாடல்களின் தரத்தில் குறைந்ததில்லை. நுட்பமான நுண்ணடுக்குகளுடனும் கூர்மையான விமர்சனங்களுடனும் அவர்களது கவிதைகள் விரிகின்றன. புறத்துக்கும் அகத்துக்கும் வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பக்தி இலக்கிய காலகட்டத்தில் ஆண்டாள், காரைக்காலம்மையார் ஆகியோர் இயற்றிய பாடல்களிலும் இந்த நுட்பங்களைக் காணலாம். இத்தன்மையை நவீனப் பெண் கவிதைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தொண்ணூறுகளுக்குப் பிறகு அலையலையாகப் பெண்கள் கவிதை எழுத வந்தனர். கவிதைதான் எங்களது ஆதி இலக்கிய வடிவம் என்ற முழக்கம் தற்காலப் பெண் கவிதைகளில் உச்சத்தொனியில் ஒலித்தது. சங்கப் பெண் கவிஞர்களின் குரலையும் இக்கவிதைகள் உள்வாங்கிக்கொண்டன. ஔவையாரும் வெள்ளிவீதியாரும் நவீன கவிதைகளுக்குள்ளும் தங்களது இருப்பை உறுதிப்படுத்தினர்; அகச் சிந்தனையால் தங்களை அவர்களுடன் ஒன்றிணைத்துக்கொண்டனர். தமிழ் இலக்கியத்தின்மீது தலித் இலக்கியம் நிகழ்த்திய பெரும் பாய்ச்சலை இப்பெண்களின் கவிதைகளும் நிகழ்த்தின. பெண் கவிஞர்களின் கவனம் இரண்டாயிரத்துக்குப் பிறகு சிறுகதை எனும் வடிவத்தை நோக்கியும் நகர்ந்தது. வ.வே.சு.ஐயருக்கும் முன்பே பண்டிதை வி.விசாலாக்ஷி அம்மாளும் (1911), அம்மணி அம்மாளும் (1913) சிறுகதை எழுதிவிட்டார்கள் என்ற வரலாறு தனி. 1900-1950 காலகட்டங்களில் மட்டும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். இது எண்ணிக்கைதான். இவர்கள் தீவிரமாக அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த நகர்வின்மைக்குப் பின்னால் பல சமூகக் காரணிகள் இருந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பெண்கள் சிறுகதைகளை எழுதியிருந்தாலும் எழுபதுகளுக்குப் பிறகே காத்திரமான பெண் சிறுகதை மரபு உருவாகி வளர்ந்திருப்பதாகக் கருதுகிறேன். அதாவது, அம்பைக்கு முன் அம்பைக்குப் பின் எனப் பெண் சிறுகதை வரலாற்றை அணுக வேண்டும்.

பெண்களின் கவிதைகளில் புலப்பட்ட தீவிரத்தன்மையும் படைப்பூக்க வெளியும் அவர்களின் புனைவுகளிலும் வெளிப்பட்டிருக்கிறதா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. மேலும், இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்படும் பெண் சிறுகதைகள் குறித்த கருத்துகள், ஒரு வாசகருக்கும் அந்தப் பிரதிக்கும் உள்ள பிரச்சினைகள் சார்ந்தவை மட்டுமே. இந்தக் கருத்துகள் ஒருபோதும் அந்தப் பிரதி உருவாக்குநரைக் கட்டுப்படுத்தாது. குறிப்பிட்ட ஓர் எழுத்தாளரின் கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏற்படும் மனநிலைதான் பலரது மொத்தக் கதைகளையும் வாசிக்கும்போது ஏற்படுகிறது. அவர்களது தனித்த பார்வையையும் சமூக அவதானிப்பையும் அடையாளம் கண்டு முன்னேறுவது வாசிப்பவருக்கு விடப்பட்ட பெரும் சவாலாகவே இருக்கிறது. ஒருசில கதைஞர்களைத் தவிர, பெரும்பாலானவர்களின் பல கதைகள், அவர்களது பெயர்களால் மட்டுமே வேறுபட்டு நிற்கின்றன. பெண் எழுத்துமீது ஒரு சுதந்திரமான உரையாடல் நிகழவில்லை; அப்படி நிகழ ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டங்களும் காத்திரமாக அமையவில்லை. குறிப்பாக, நூல் வெளியீட்டு விழாக்களில் நிகழ்த்தப்படும் உரைகள். பெண் சிறுகதையாளர்களின் மொழி, உள்ளடக்கம், புனைவில் நிகழும் உரையாடல் இம்மூன்றிலும் சில போதாமைகள் இருக்கின்றன. அவர்களின் கூட்டுச் சிந்தனை ஒரே மையத்தில் குவிந்து கிடக்கின்றன. அந்த மையம் எதிர்காலத்தில் தன் இருப்பையும் அதிகாரத்தையும் இழக்கும்போது இக்கதைகள் நினைவுக் குறிப்புகளாகத் தேங்கிப்போவதற்கான அபாயம் இருக்கிறது. கவிதைகளில் எழுதித் தீர்த்துவிட்ட தேய்வழக்குகளையே திரும்பவும் தம் புனைவுகளிலும் எழுதிப் பார்க்கும் தன்மை பலரது கதைகளின் பொதுக்கூறாக இருக்கிறது. சிலரைத் தவிர, ஏனையோர் கவிதையிலிருந்து கதைக்கு நகர்ந்தவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இவர்கள் தங்கள் கவிதை மொழியையே கதைகளுக்கும் பயன்படுத்தினர். இத்தன்மை புனைவுக்குள் ஒரு செயற்கையான இருண்மையை உருவாக்கி, வாசகர்களைத் திணறடிக்கிறது. உள்ளடக்கம்தான் வடிவத்தைத் தீர்மானிக்கிறது. இங்கு நிகழ்ந்திருப்பது வடிவத்துக்குள் உள்ளடக்கத் திணிப்பு. கதைக்கு மொழியா, இல்லை மொழிக்குக் கதையா என்பதிலும் ஒரு தெளிவு வேண்டும். பெண்களின் அகமொழி கவிதைக்குப் பொருத்தமாக இருந்தது; கதையில் பெரும்பாலும் துருத்திக்கொண்டு நிற்கிறது.

பெண்கள் எழுதிய ஒட்டுமொத்தச் சிறுகதைகளில், ஆண்கள் குறித்த எதிர்மறையான சித்திரங்களை உருவாக்கியிருக்கும் சிறுகதைகள் மட்டுமே ஏறக்குறைய பாதி இருக்கும். அதாவது, பெண் சிறுகதைக்கான கச்சாப்பொருள் ஆண்மையவாதம். அடுத்துப் பெண்ணுடல் சார்ந்த கதையாடல்களுக்குச் சிறுகதைகள் முன்னுரிமை அளித்திருக்கின்றன. இவ்விரண்டு அம்சங்களும் இல்லாத சிறுகதைத் தொகுப்பைக் காண்பதரிது. பலரும் ஒரு கட்டுரைக்குக் குறிப்பெடுத்து எழுதுவது போன்று திட்டமிட்டுச் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். இந்த முன்தயாரிப்பானது புனைவைத் தட்டையான பிரதியாக்கிவிடுகிறது. பெண்களின் கூட்டுச் சிந்தனையில் படிந்துபோயிருக்கும் ‘ஆண்’ எனும் கர்த்தாவைப் பிரக்ஞையிலிருந்து வெளியேற்றாதவரை புனைவு வட்டத்தையும் அதனூடாக வெளிப்படும் பார்வையையும் விரிவாக்குவது கடினமாகத்தான் இருக்கும். தொடக்கக் காலத்தில் எழுதிய பெண்கள், சன்னலின் வழியாக உலகத்தைப் பார்த்துக் கதைகளை எழுதினார்கள்; தற்காலத்தில் வெளியே நின்றுகொண்டு சன்னலின் உள்ளே எட்டிப்பார்த்துக் கதைகளை எழுதுகிறார்கள். சமூகம், குடும்பம், ஆண்களின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வந்து எழுதுவதே பெரும் சவாலாக இருக்கிறதே என்ற பதிலையும் பெண் எழுத்தாளர்கள் சிலரிடம் காண முடிகிறது. இதே குற்றச்சாட்டை எவ்வளவு காலம் சொல்லிக்கொண்டிருக்க முடியும்? பெண்களால் எல்லாவற்றையும் எழுத முடியும் என்னும் நிலையை எட்டுவதுதான் அவர்களின் உண்மையான சாதனை. அதனால், ஆண்மையச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றி எழுதக் கூடாது என்றில்லை. அந்தப் பிரச்சினைகள் உட்பட எல்லாவற்றையும் எழுதினால்தான் பெண்ணெழுத்தின் எல்லைகள் விரிவடையும்.

தற்காலத்தில் சமூக ஊடகங்களின் பெருக்கம் அனைவரும் எழுதுவதற்கான ஒரு வெளியைத் திறந்துவிட்டிருந்தாலும் வெளியீட்டுக்கு முன்பு நிகழ்த்தப்பெறும் உரையாடலை அது இல்லாமல் செய்துவிட்டது. அக்காலத்தில் சிற்றிதழ் சார்ந்து இயங்கிய குழுக்கள் புனைவைச் செம்மையாக்க உதவின. தற்காலத்தில் புனைவெழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் இருப்பதால், அந்த வாய்ப்பும் இல்லை. பெண்களின் கதைகளில் உள்ள மற்றொரு பிரச்சினை, தனிமொழி. புனைவிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளாமல் எழுதுவதால் புனைவு ஒற்றைத்தன்மையை நோக்கி நகர்ந்துவிடுகிறது. புனைவில் உருவாகி நிற்கும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான, காத்திரமான உரையாடலை இந்தத் தனிமொழி கட்டுப்படுத்துகிறது.

- ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: ramesh5480@gmail.com

(இந்தக் கட்டுரைக்கான எதிர்வினை அடுத்த வாரம் வெளியாகும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x