Last Updated : 22 Apr, 2016 10:01 AM

 

Published : 22 Apr 2016 10:01 AM
Last Updated : 22 Apr 2016 10:01 AM

உருவானார் ஜி.ராமகிருஷ்ணன்

மக்கள் நலக் கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநாடு மார்ச் 26-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. அந்தக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தவிர, மற்ற மூன்று தலைவர்களும் சட்டம் படித்தவர்கள். ஆகவே, தலைவர்களும் வக்கீல் கோட் அணிந்து மாநாட்டில் பங்கேற்கலாம் என்றார் வைகோ. திருச்சியில் மாநாட்டில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு மனைவி ரீட்டாவிடமிருந்து செல்பேசி அழைப்பு. “இதுவரை நீங்கள் வக்கீல் கோட் அணிந்து ஒரு படம்கூட நம் வீட்டில் இல்லை; ஒரு படம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று. ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு மனைவிக்கு அதை வாட்ஸ்அப்பில் அனுப்பியும் வைத்தார். ராமகிருஷ்ணன் ஒரு வழக்கறிஞராக கிடுகிடுவென ஏறிக்கொண்டிருந்தவர். திருமணத்துக்கு மறுநாளே வழக்கறிஞர் தொழிலைத் துறந்து கட்சியின் முழு நேர ஊழியராகிவிட்டார். பொது வாழ்க்கைக்காகத் தனிப்பட்ட வாழ்வில் நிறைய இழந்திருக்கும் சமகாலத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராமகிருஷ்ணன்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் மேமாளூர் கிராமம்தான் தோழர் ஜி.ராமகிருஷ்ணனின் சொந்த ஊர். நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அப்பா கோபால், அம்மா சிவகங்கை. சின்ன வயதிலேயே அம்மா இறந்துவிட்டார். படித்ததெல்லாம் சுற்று வட்டாரக் கிராமப் பள்ளிக்கூடங்களில். சென்னை அரசு கலைக் கல்லூரியில் (தற்போதைய காயிதேமில்லத் கல்லூரி) ராமகிருஷ்ணன் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலகட்டம். வெண்மணியில் 44 தலித் மக்கள் நிலவுடைமையாளர்கள் அனுப்பிய குண்டர்களால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட கோரச் சம்பவத்தை விவரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துண்டறிக்கை ஒன்று அவர் தங்கியிருக்கும் மாணவர் விடுதியில் கிடைக்கிறது. ராமகிருஷ்ணனை அரசியலை நோக்கித் திருப்பிய தருணம் அது.

சிந்தனின் தோழர்

அந்தக் காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர்கள் போராட்டங்கள் கொந்தளித்தன. சென்னையில் பல மாதங்கள் நீடித்த ‘சிம்சன்’ தொழிலாளர்கள் போராட்டம் பலரை உலுக்கிக்கொண்டிருந்தது. கிராமப்புறப் பின்னணியிலிருந்து சென்னைக்கு வந்த ராமகிருஷ்ணனிடம் இந்தப் போராட்டங்கள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின. 1969-ல் ஒரு நாள் மாணவர்கள் மத்தியில் அன்றைய மூத்த தலைவர் வி.பி.சிந்தன் பேசினார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ராமகிருஷ்ணனை மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிழுத்துக்கொண்டது.

அந்நாட்களில் இளைஞர்கள் மத்தியில் சிந்தன் பெரிய காந்தம். அவரது பேச்சால் முறுக்கேற்றப்பட்ட பெரிய இளைஞர் பட்டாளமே உண்டு. அவர்களில் ஒருவரானார் ராமகிருஷ்ணன். அரசியல் எதிரிகளால் கொலைவெறித் தாக்குதலுக்குக் குறிவைக்கப்பட்டார் சிந்தன். கத்திக்குத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளானவர் மருத்துவர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னரே உயிர் பிழைத்தார். “இது உங்க ளுக்கு மறுபிறப்பு. முன்புபோல தீவிரமாகப் பணியாற்றாதீர்கள்” என்று சொல்லி அனுப்பினார்கள் மருத்துவர்கள். இருந்தாலும் கட்சித் தோழர்களுக்கு சிந்தனின் மறுவருகை பெரும் கொண்டாட்டம். மருத்துவமனையிலிருந்து திரும்பியவருக்கு, சென்னை மே தினப் பூங்காவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். சிந்தன் அதிகம் பேசவில்லை. “இது மறுபிறப்பு என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதுவரை என் ரத்தத்தையெல்லாம் மக்களுக்குத்தான் கொடுத்தேன். எனது உடலில் மீதமுள்ள ரத்தமும் மக்களுக்காகத்தான்” என்றார். சிந்தனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ராமகிருஷ்ணன் தன் வாழ்க்கையின் தாரக மந்திரமாக வரித்துக்கொண்ட வார்த்தைகள் இவை.

தொழிலாளர்களின் ஊழியர்

சென்னை சட்டக் கல்லூரியில் 1971 1974-ல் சட்டப் படிப்பு முடித்தவர் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்யக் காத்திருந்த நேரம். அப்போது மாநிலம் முழுவதும் அரிசி, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு. மக்களின் துயரத்துக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்காத நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். தாம்பரத்தில் ஓரிடத்தில் அரிசி, மண்ணெண்ணெய் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. அங்கு போராடச் சென்ற கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் பதுக்கல் பொருட்களை எடுத்து நியாய விலையில் மக்களிடம் விநியோகித்தனர். மாணவர்கள் நடத்திய இப்போராட்டத்தில், அப்போதுதான் கல்லூரிக் கல்வியை முடித்திருந்த ராமகிருஷ்ணனும் பங்கேற்றார். காவல் துறை தடியடி நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் கைதுசெய்து 15 நாட்கள் சென்னை மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் முதல் எதிரி அன்றைய மாணவர் சங்க அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரும் இன்றைய நாடறிந்த மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவருமான என்.ராம். இரண்டாவது எதிரி ராமகிருஷ்ணன். சிறையில் இருவரிடையேயான உரையாடல்களும் வாசிப்பனுபவப் பகிர்தல்களும் தன்னை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டுசென்றதாகப் பின்னாட்களில் குறிப்பிட்டார் ராமகிருஷ்ணன்.

சென்னையில் ஓராண்டு வழக்கறிஞராக பணியாற்றிய பிறகு, 1975 செப்டம்பர் மாதம் ராமகிருஷ்ணன் சொந்த மாவட்டமான கடலூருக்குச் சென்று வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். 1975-ல் இந்திரா அரசு நெருக்கடிநிலையைப் பிறப்பித்ததன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் தலை மறைவாகச் செயல்பட்ட பலருக்கு அடைக்கலமும் உதவிகளும் அளித்தார் ராமகிருஷ்ணன்.

பொது வாழ்க்கைக்குத் தன் முழு வாழ்க்கையையும் கொடுக்க வேண்டும் என்றால், வாழ்க்கைத் துணையையும் அப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்னியவர் ‘ஜனநாயகத்தன்மை கொண்ட பெண் தேவை’ என்றுதான் பத்திரிகைகளில் விளம்பரமே கொடுத்தார். சாதிக்கு எதிராக வெற்று வசனங்களை மட்டும் பேசும் அரசியல்வாதி அல்ல அவர்; அகமணம் மறுத்து புறமணம் செய்தவர். தன்னுடைய எதிர்கால நோக்கத்தை முன்கூட்டியே மனைவியாக வரவிருந்த ரீட்டாவிடம் பேசிவிட்டதால், திருமணம் முடிந்த மறுநாளே வழக்கறிஞர் பணியை உதறிவிட்டு கட்சியின் முழுநேர ஊழியர் ஆகிவிட்டார். வழக்கறிஞராக இருந்தபோது ரூ. 275 வாடகை வீட்டில் இருந்தவர். கட்சி ஊழியரான பின், கட்சி கொடுக்கும் மாதச் செலவுப் பணமே ரூ.300 என்பதால் அதைக் காலி செய்துவிட்டு ரூ. 75 வாடகை வீட்டுக்குச் சென்றார். கட்சி எங்கெல்லாம் செல்லச் சொன்னதோ அங்கெல்லாம் சென்றார் ராமகிருஷ்ணன். நெய்வேலி தொழிற்சங்கப் பணிக்கு அனுப்பியது கட்சி. ராமகிருஷ்ணன் தன் மனைவி, மூன்று மாதப் பிள்ளையோடு நெய்வேலி சென்றார். நெய்வேலி நகரிய எல்லைக்குள் என்எல்சி ஊழியர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கப்படும். ராமகிருஷ்ணன் தாண்டவன்குப்பம் பகுதியில் இருந்த குடிசைகள் ஒன்றில் குடியேறினார். அதிகாலை நடைபெறும் தொழிலாளர்களின் வாயில் கூட்டங்களை நடத்த வேண்டுமே!

தொண்டர்களின் எழுத்தாளர்

1983-ல் கோவையில் நடைபெற்ற சிஐடியு மாநில மாநாட்டில் மாநிலச் செயலர்களில் ஒருவராகத் தேர்வுசெய்யப்பட்டார் ராமகிருஷ்ணன். 1989-ல் கட்சியின் மாநிலச் செயற்குழுவுக்குத் தேர்வானார். 1992-ல் கட்சி உத்தரவின்படி குடும்பத்தோடு சென்னைக்கு வந்தார். 2010 பிப்ரவரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரானார். தொடர்ந்து, 2012, 2015 மாநாடுகளிலும் மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015-ல் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவிலும் இடம்பெற்றார்.

ராமகிருஷ்ணன் ரீட்டா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரின் திருமணங்களையுமே சாதி மறுப்புத் திருமணங்களாகவே நடத்தினர்.

ராமகிருஷ்ணனுக்கு என்று தனித்த சில சிறப்புகள் உண்டு. இதுவரையில் கட்சித் தலைவர்களைப் பற்றித்தான் தொண்டர்கள் எழுதுவார்கள். ஆனால், கட்சியில் நீண்ட காலம் பங்கெடுத்த கடைநிலைத் தொண்டர்களைப் பற்றி ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ என்ற நூலாக எழுதியவர் ராமகிருஷ்ணன். தீவிரமான மார்க்ஸியர். அதேசமயம், இந்தியச் சூழலில் ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடம் கற்க வேண்டிய ஆளுமை காந்தி என்று நம்புபவர். தீவிரமான வாசகர். பலரிடம் இல்லாத நெகிழ்வுத்தன்மை ராமகிருஷ்ணனிடம் உண்டு. தமிழகத்தில் இடதுசாரிகள் திமுக, அதிமுகவுக்கு மாற்றாகத் தனித்துச் செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி கட்சியின் பார்வையைத் திருப்பியதிலும் சரி, மக்கள் நலக் கூட்டணியின் உருவாக்கத்திலும் சரி ராமகிருஷ்ணனுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. “இன்றைக்கு அல்ல, நாளையே முக்கியம்; நம் நலம் அல்ல; நாளைய நம் சந்ததிகளின் எதிர்காலமே முக்கியம்” என்று அடிக்கடி சொல்வார் ராமகிருஷ்ணன். நாளைகள் காத்திருக்கின்றன!

தொடர்புக்கு: devadasan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x