Last Updated : 27 Apr, 2016 09:01 AM

 

Published : 27 Apr 2016 09:01 AM
Last Updated : 27 Apr 2016 09:01 AM

இந்துத்துவக் கொள்கைகளும் குழப்பங்களும்!

தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது பாஜக. சின்னச் சின்ன கட்சிகளின் துணையோடு தனி அணியாக 2016 தேர்தல் களத்தில் நிற்கிறது. அதன் தேர்தல் அறிக்கையை ‘தொலைநோக்கு அறிக்கை 2016’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

பாஜக அறிக்கையை மூன்றாகப் பிரிக்கலாம். ஏற்கெனவே மற்ற கட்சிகள் வெளியிட்டுள்ள சில வாக்குறுதிகளை அப்படியே அல்லது சில மாற்றங்களுடன் வெளியிட்டிருப்பது. மத்திய அரசின் சில திட்டங்களை மாநிலத்துக்கு ஏற்றமாதிரி அளித்திருப்பது. அடிப்படைக் கொள்கையான இந்துத்துவா சார்ந்த சில பிரகடனங்கள்.

பிறரைப் போல...

விவசாயக் கடன் ரத்து, நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவற்றுக்கு நல்ல ஆதார விலை, விவசாய வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள், இயற்கை விவசாயத்துக்கு ஊக்குவிப்பு, நீர் மேலாண்மை, தமிழக நதிகள் இணைப்பு, ஆற்று மண், கிரானைட் போன்றவற்றின் விற்பனையை அரசே கையகப்படுத்திக்கொள்வது, வேலைவாய்ப்பை அதிகரித்தல், தொழில் துறைக்குச் சலுகைகள் போன்றவை அப்படியே அல்லது வேறு வடிவில் பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் வந்தவைதாம். பாஜகவும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற விரும்புகிறது. லோக் ஆயுக்தாவைக் கொண்டுவந்து ஊழலைக் கட்டுப்படுத்த விரும்புகிறது.

பாமக அறிக்கையைப் போல, பள்ளிக் கல்வியை சிபிஎஸ்இ தரத்துக்கு உயர்த்த பாஜக விரும்புகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கும். பாமக, அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதை முன்வைக்கிறது. ஆனால் பாஜக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைவருக்கும் இலவசக் கல்வி என்கிறது. அதே நேரம், சிறுபான்மையினருக்குத் தரப்படும் கல்வி உதவித்தொகை போலவே அனைவருக்கும் கல்வி உதவித்தொகை தருவதாகச் சொல்கிறது. இந்த உதவித்தொகை என்பது உண்மையில் கல்விக்கான கட்டணமே. கல்வி முழுதும் இலவசமாக்கப்பட்டால், இந்த உதவித்தொகையை யாருக்குமே தரவேண்டிய தேவையில்லை. இந்த இடத்தில் பாஜக கொஞ்சம் குழம்பியிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

பாஜக முன்வைக்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பு, சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களுக்குத் தேவைப்படும் தடையில்லாச் சான்றிதழை நீக்குவது. லஞ்சம் பெறுவதற்கான முதன்மை வாய்ப்பாக இருக்கும் இதனை நீக்குவதாகச் சொல்லியிருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று.

மலைவாழ் மக்கள் நலன், தாழ்த்தப்பட்டோர் நலன், மீனவர் நலன், மகளிர் நலன் என்று தனித்தனியாகச் சொல்லியிருக்கும் பாஜக அறிக்கையில் முஸ்லிம்கள் அல்லது சிறுபான்மையினர் நலன் என்று எதுவும் தனியாக இல்லை.

பாஜகவும் பூரண மதுவிலக்கை விரும்புகிறது. ஆனால் இந்த வருமான இழப்பை எப்படி எதிர்கொள்வார்கள் என்று ஏதும் சொல்லவில்லை. மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் சிறப்பாக அமல்படுத்துவோம் என்கிறது.

பிரதானம் - இந்துத்துவம்

பாஜக அறிக்கை முக்கியமாக முன்வைப்பது, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை. மதம் மாற்றுதல் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்கிறது அறிக்கை. கூடவே, மதம் மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் தரப்பட மாட்டாது என்று அடித்துக் கூறுகிறது. பாஜகவின் அடுத்த வாக்குறுதி, பசுவதைத் தடைச் சட்டம்.

இந்துக் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, கோவில்களுக்கே திரும்ப அளிப்பதாகச் சொல்கிறது. கூடவே குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த நிலங்களின் வாடகையைக் கட்டாயமாக வசூலிக்கவும் வாடகை தராதோர் மீது நடவடிக்கை எடுக்கத் தனி நீதிமன்றங்களை உருவாக்கவும் வாக்குறுதி அளிக்கிறது.

அடுத்து ஒருபடி மேலே போய், இந்துக் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து இந்து மதத்தில் பற்றுகொண்ட ஆன்றோர்களின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதாகச் சொல்கிறது.

முக்கியமான முன்னெடுப்பாக, அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 5,000 தரப்போவதாக அறிக்கை சொல்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா, கூடாதா என்பதற்கான வெளிப்படையான பதிலைச் சொல்லாமல், ‘தகுதியின் அடிப்படையில்’ அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மட்டும் அறிக்கை சொல்கிறது.

ஹஜ் யாத்திரைக்கான உதவித்தொகை போலவே, வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் இந்துக்கள் குடும்பத்தோடு புனிதப் பயணம் மேற்கொள்ள சிறப்புச் சலுகைகளைத் தரப்போவதாக பாஜக சொல்கிறது.

பாஜகவின் முதன்மை நோக்கம் இந்துத்துவம் மட்டுமே என்பதுதான் இந்த அறிக்கையிலிருந்து வெளிப்படுகிறது. இந்து மதத்தவருடைய வருத்தங்களைக் களைவதும், மதமாற்றத்தைத் தடுப்பதும், பசுவதையைத் தடுப்பதும்தான் முதன்மையான நோக்கம் என்பதுபோல இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. தமிழக மக்களின் தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை முழுவதுமாகப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாக இது தெரியவில்லை.

பத்ரி சேஷாத்ரி

பதிப்பாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: badri@nhm.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x