Last Updated : 01 Apr, 2016 08:44 AM

 

Published : 01 Apr 2016 08:44 AM
Last Updated : 01 Apr 2016 08:44 AM

அந்தக் காலம்: தேர்தல் ஞாபகங்கள்- முதலாவது தேர்தல்ல...

இப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துவிட்டன. இதற்கு முன்னர் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்கள் மறைவான இடத்தில் வாக்குச் சீட்டில் முத்திரை பதித்துவிட்டு, வெளியே வந்து அனைவர் முன்னிலையிலும் வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டுகளைப் போட்டுவிட்டுச் சென்றனர்.

ஆனால், 1952-ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் முதல் தடவையாக நடந்த பொதுத் தேர்தலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன. வாக்குச் சாவடிக்குச் சென்றதும் வாக்காளரிடம் வாக்குச் சீட்டு அளிக்கப்பட்டது. அது கிட்டத்தட்ட ஒரு ரூபாய் நோட்டு சைஸில் இருந்தது. அசப்பில் ரூபாய் நோட்டு மாதிரியே இருந்தது. ரூபாய் நோட்டு மாதிரியில் அதில் டிசைன்களும் தேர்தல் கமிஷனின் பெயரும் வரிசை எண்ணும் மட்டுமே இருந்தன. அதில் வேட்பாளர்களின் பெயர்கள் என எதுவும் கிடையாது.

வாக்குச் சாவடியில் மறைவான இடத்தில் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகள் இருந்தன. வாக்குச் சீட்டை ஒருவர் தமக்குப் பிடித்த வேட்பாளருக்கான பெட்டியில் போட வேண்டும். வாக்குப் பெட்டிகள் மீது அந்தந்த வேட்பாளர்களின் சின்னங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஒருவர் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்பது தெரியக் கூடாது என்பதற்காகவே வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஏற்பாட்டில் ஒரு பெரிய குறைபாடு இருந்தது. ஒருவர் வாக்குச் சீட்டை எந்தப் பெட்டியிலும் போடாமல் மறைத்து வைத்து, வெளியே கொண்டுவந்து விடலாம்.

முதலாவது தேர்தல் என்பதால், மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்துச் சென்றனர். ஆனால், சில இடங்களில் தேர்தல் ஏஜெண்ட்டுகள் வாக்காளர்களை அணுகி, வாக்குச் சீட்டை எந்தப் பெட்டியிலும் போடாமல் வெளியே கொண்டுவந்து கொடுத்தால் கைமேல் பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, வாக்குச் சீட்டுகளை விலைக்கு வாங்குவதில் ஈடுபட்டனர். ஒரு வாக்குச் சீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டதாக ஞாபகம். அக்காலகட்டத்தில் ஓட்டலில் ஒரு வேளை சாப்பாடு 50 பைசா. அந்த வகையில் கணக்கிட்டால் வாக்குச்சீட்டின் விலை ரொம்ப சீப்.

வாக்குச் சாவடியிலிருந்து சற்றுத் தொலைவில் நின்றபடி வாக்குச் சீட்டுகளை விலைக்கு வாங்கிய தேர்தல் ஏஜெண்டுகள், பின்னர் தாங்கள் வாக்களிக்கச் சென்றபோது அத்தனை வாக்குச் சீட்டுகளையும் தங்கள் கட்சி வேட்பாளரின் வாக்குப் பெட்டியில் போட்டனர். மறைவான இடம் என்பதால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால், விலைக்கு வாங்கிய வாக்குச் சீட்டுகளை அதே வாக்குச் சாவடியில் போட்டால் கண்டுபிடிக்க முடியாது. தேர்தல் ஏஜெண்ட்டுகளில் சிலர் தெரியாத்தனமாக வேறு வாக்குச் சாவடியில் கொண்டுபோய் போட்டனர். வாக்கு எண்ணிக்கை நடந்த இடங்களில், அதிகாரிகள் முதல் காரியமாக வாக்குச் சீட்டுகளை வரிசை எண்களின்படி அடுக்குவர். அப்போது குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்கு உரிய வாக்குச் சீட்டுகள் அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

வாக்குச் சீட்டுகளை நேரடியாக விலை கொடுத்து வாங்க முடிகிறது என்பதால் பின்னர் வாக்குச் சீட்டில் முத்திரை குத்தி ஒரே பெட்டியில் போடுகின்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x