Published : 23 Feb 2022 06:12 AM
Last Updated : 23 Feb 2022 06:12 AM

தேர்வாணைய அறிவிக்கைகளும் வேலையில்லா நெருக்கடியும்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான தேர்வுகளை அறிவித்திருப்பது இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 5,831 பணியிடங்களுக்குத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஆண்டுத் திட்டத்திலேயே 5,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முதல் நாளன்று தேர்வாணையம் அடுத்த சில நாட்களில் அறிவிக்கை வெளியாகும் என்று மீண்டும் ஒருமுறை அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளில் குரூப் 2, 2ஏ தேர்வுகளைத் தனித்தனியாக நடத்துவதற்கான திட்டங்கள், திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள், மொழித்தாளுக்கான முக்கியத்துவம் ஆகியவை போட்டித் தேர்வு மாணவர்களுக்கிடையே தொடர்ந்து குழப்பங்களை விளைவித்துவந்த நிலையில், இந்த அறிவிப்போடு அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

பட்டப் படிப்பு கல்வித் தகுதியில் குரூப் 2 தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கும் இதே நேரத்தில், மேல்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்குப் பணியாளர் தேர்வாணையமும் (எஸ்எஸ்சி) அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையே பொதுவாக யுபிஎஸ்சி தேர்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எஸ்எஸ்சி தேர்வுகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

ஆனால், இந்த முறை எஸ்எஸ்சி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் முன்னெடுத்துள்ளனர். மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டுக்கான கூடுதல் வாய்ப்பு என்ற அரசியல் நோக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், பெருந்தொற்றுக்குப் பிறகு மிகவும் தீவிரமாகிவரும் வேலையில்லா நெருக்கடியும் இந்தப் பிரச்சாரத்தின் பின்னணிக் காரணமாக இருக்கிறது. டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பில், வருவாய்த் துறை உதவியாளர் பணியிடங்களுக்குத் தொழிற்கல்வி பயின்றவர்களையும் அனுமதிப்பதிலிருந்தே வேலையில்லா நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பணிவாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 75,88,359. இவர்களில் 24-35 வயதுக்கு உட்பட்டவர்கள் 28,60,359. மேலும் 36-57 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 13,20,337. கடந்த சில ஆண்டுகளாக குரூப் 2 தேர்வு நடத்தப்படாத நிலையில், 5,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்குத் தேர்வு நடத்துவதே ஒரு சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில், போதுமான கல்வித் தகுதிகளோடு வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை பல நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது.

மத்திய அரசுப் பணிகளில் மட்டுமே சுமார் 8 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி, மருத்துவம், நகர்ப்புற மேம்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பு குறித்துப் பேசப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதுபோன்ற விவாதங்களுக்கு இடமளிக்காமல் தமிழ்நாடு அரசு தனது நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x