Published : 22 Feb 2022 09:00 AM
Last Updated : 22 Feb 2022 09:00 AM

புத்தகத் திருவிழா 2022 | சாகித்ய அகாடமியின் தொடர் பயணம்!

மொழிகள், மதங்கள், நிலப்பரப்புகள் என்று எல்லாவற்றிலும் பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவை இலக்கியத்தின் மூலம் இணைக்கும் உன்னத நோக்கத்தைக் கொண்டது சாகித்ய அகாடமி நிறுவனம். கலை, இலக்கியத்தின் ஆராதகரும் எழுத்தாளருமான ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில், சாகித்ய அகாடமி அமைப்பு தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே, இந்திய மொழி இலக்கியங்களுக்கு விருது வழங்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஆங்கிலேய அரசின் பரிசீலனையில் இருந்தது.

1944-ல் தேசியக் கலாச்சார அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, கலாச்சாரத்தின் அனைத்துத் துறைகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்று ‘ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி ஆஃப் பெங்கால்’ எனும் அமைப்பின் பரிந்துரையை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது. சுதந்திரத்துக்குப் பின்னர், இலக்கியத்துக்கான விருது அமைப்பை அரசே ஏற்று நடத்துவது என்று 1952 டிசம்பர் 15-ல் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 1954, மார்ச் 12-ல் சாகித்ய அகாடமி அமைப்பு முறைப்படி தொடங்கப்பட்டது. இதன் தலைவராக நேரு பொறுப்பேற்றார். துணைத்தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அரசு நிதியுதவியைப் பெறும் அமைப்பு என்றாலும் இது தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். சாகித்ய அகாடமியின் தலைவராகப் பொறுப்பெற்ற நேரு, ‘சாகித்ய அகாடமியின் தலைவருக்கான பணியில், பிரதமர் நேரு குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வேன்’ என்று உறுதியளித்தார்.

அதேசமயம், சாகித்ய அகாடமி தொடங்கப்பட்ட மறுநாளே, தனது ஆதர்ச எழுத்தாளரும் கவிஞருமான சூர்யகாந்த் திரிபாதி நிராலாவுக்கு உதவுமாறு சாகித்ய அகாடமியின் செயலாளரான கிருஷ்ணா கிருபாளினிக்குக் கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா. ‘புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியிருந்தாலும் பதிப்பாளர்கள் ஏமாற்றுவதால் வறுமையில் வாழ்கிறார் நிராலா. அவரிடம் பணமோ பொருளோ கொடுத்தாலும் அதை மற்றவர்களுக்குத் தானமாக வழங்கிவிடுகிறார். எனவே, அவருக்கு நேரடியாகப் பணம் வழங்காமல், அவரைக் கவனிக்கும் பணியைச் செய்துவரும் மற்றொரு கவிஞரான மகாதேவி வர்மாவிடம், நிராலாவுக்காக மாதம் ரூ.100 வழங்க ஏற்பாடு செய்யவும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நேரு.

சரியாக 4-வது நாள் (16-ம் தேதி), நேருவுக்குப் பதில் கடிதம் எழுதினார், கிருஷ்ணா கிருபாளினி. கல்வி அமைச்சர் மவுலானா அப்துல் கலாம் ஆசாதுடன் இது தொடர்பாகப் பேசிவிட்டதாகவும், அந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார் கிருஷ்ணா கிருபாளினி. நெருக்கடியான அரசு நிர்வாகப் பணிகளுக்கு இடையிலும், வறுமை நிலையில் இருந்த எழுத்தாளருக்கு உதவத் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்த நேருவின் காலம் மகத்தானது என்று குறிப்பிடுகிறார் ராமச்சந்திர குஹா. அதன் தொடர்ச்சிதான் சாகித்ய அகாடமி விருதுகளும் இந்திய மொழி ஒவ்வொன்றிலிருந்தும் பிற மொழிகளுக்கு இலக்கியங்களை மொழிபெயர்க்கும் தொடர் முயற்சிகளும்.

இலக்கியத்துக்காகப் பெரும் பங்களிப்பு செய்துவருபவர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுடன் வழங்கப்படும் தொகை பெரிதில்லை என்றாலும், எழுத்தாளர்களுக்கு அதன் மூலம் கிடைக்கும் சமூக அந்தஸ்து முக்கியமானது. அதனால்தான் எத்தனையோ சர்ச்சைகள், தேர்வுக் குழு அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலும் சாகித்ய அகாடமி விருது இன்றும் மதிப்புடையதாக இருக்கிறது.

சாகித்ய அகாடமி நிறுவனத்தின் மிக முக்கியமான செயல்பாடு இந்திய இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு. தமிழ் இலக்கியத்தில் ரஷ்ய இலக்கியங்கள், பிரெஞ்சு இலக்கியங்களின் மொழிபெயர்ப்புபோல சாகித்ய அகாடமி மூலம் வெளியான இந்திய இலக்கியங்களின் தாக்கமும் கணிசமானது. இயன்றவரை மூல மொழியிலிருந்து இலக்கு மொழிக்கு நேரடியாகவும், இயலாத பட்சத்தில் ஆங்கிலம் வழியாகவும் மொழிபெயர்க்கப்படுகிறது. சில நேரம் மொழிபெயர்ப்புகளின் போதாமை, தேர்வுகளில் உள்ள பிரச்சினை, எழுத்துப் பிழைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் சாகித்ய அகாடமியின் பணி மிகவும் முக்கியமானதே.

சமீபத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. இந்தி எழுத்தாளர் நாசிரா ஷர்மாவின் ‘பாரிஜாத்’ (தமிழில்: டி.சாய்சுப்புலட்சுமி), கன்னட எழுத்தாளர் போல்வார் மஹம்மது குன்ஹியின் ‘முத்துப்பாடி சனங்களின் கதை’ (தமிழில்: இறையடியான்), தெலுங்கு எழுத்தாளர் பண்டி நாராயணஸ்வாமியின் ‘சாப பூமி’ (தமிழில்: இளம்பாரதி), அருணாசல பிரதேசத்தின் ஆங்கில எழுத்தாளர் மமாய் தங் எழுதிய ‘கருங்குன்றம்’ (தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி), வங்க மொழி எழுத்தாளர் பாணி பசு எழுதிய ‘கனாமிஹிர் மேடு’ (தமிழில்: பானுமதி), மலையாளக் கவிஞர் பிரபா வர்மாவின் குறுங்காவியமான ‘கருமை நிறக் கண்ணன் (தமிழில்: சிற்பி பாலசுப்பிரமணியம்), பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமான ‘பீலர்களின் பாரதம்’ (ஆவணப்படுத்தல்: பகவான்தாஸ் படேல், தமிழில்: பெ.சரஸ்வதி), உருது எழுத்தாளர் ராஜீந்தர் சிங் பேடியின் ‘தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ (தமிழில்: எஸ்.கனகராஜ்) போன்ற நூல்கள் இந்தப் புத்தகக் காட்சியில் களம்கண்டிருக்கின்றன. பக்கங்களுடன் ஒப்பிட்டால் விலை மிகவும் குறைவு. இந்திய இலக்கிய வாசகர்கள் அனைவரும் அள்ளிக்கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் இவை. கூடவே, சாகித்ய அகாடமியின் மறுபதிப்பு நூல்களையும் நேரடித் தமிழ் நூல்களையும் வாசகர்கள் தவறவிட வேண்டாம்!

சாகித்ய அகாடமி அரங்கு எண்: 426-427.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x