Published : 09 Apr 2016 08:58 AM
Last Updated : 09 Apr 2016 08:58 AM

விதிகளை மீறுகிறதா அமேசான்?

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

ஆன்லைன் வர்த்தகம் எனப்படும் மின்வணிகம் இந்தியாவில் தொடக்கக் கட்டத்தில் இருந்தாலும், நாளுக்கு நாள் விரிவடைந்துவருகிறது. மின்வணிகத் தில் இந்தியாவைவிட மிக முக்கியமான நாடு அமேசான் நிறுவனத்துக்கு வேறொன்று இருக்க முடியாது. ஆனால், அமேசானின் இந்திய வளர்ச்சிக்கு ஒரு தடங்கல் ஏற்பட்டிருக்கிறது.

அரசின் கட்டுப்பாடுகள்

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு மின்வணிக நிறுவனங்களுக்குக் கடிவாளம் போட இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்தியச் சந்தையில் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பாரம்பரிய விற்பனையாளர்களுடன் போட்டியிடும் மின்வணிக நிறுவனங்களில் 100% நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சரக்குகளை வாங்கிக் கிட்டங்கிகளில் குவித்து வைத்துக்கொண்டு, இணையதள வழியாக விற்பனை செய்வோருக்கு இந்த நேரடி முதலீட்டு அனுமதி கிடையாது.

எல்லா மின்வணிக நிறுவனங்களும் பல்வேறு விற்பனையாளர்கள் மூலம் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அவர்களுடைய எந்த ஒரு தனி விற்பனையாளரும் அந்த மின்வணிக நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 25% அளவை மிஞ்சக் கூடாது. தங்களிடம் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிக் கூப்பன்களையோ, ரொக்கக் கழிவுகளையோ தந்து, சந்தையில் விற்கும் வியாபாரிகளின் விற்பனையைப் பாதிக்கக் கூடாது என்பன முக்கியமான கட்டுப்பாடுகள்.

இந்திய அரசு விதித்துள்ள புதிய விதிகள் அமேசான் மற்றும் அதைப் போன்ற வெளிநாட்டு மின்வணிக நிறுவனங்களின் விற்பனை உத்தி மற்றும் வழிமுறையைக் கணக்கில்கொண்டே இயற்றப்பட்டுள்ளன. இதில் முக்கியம் என்னவென்றால், இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று அரசு அறிவித்ததுதான். வெளிநாட்டு நிறுவனங்கள் இதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் தரப்படவில்லை. எனவே, வெளிநாட்டு மின்வணிக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வர்த்தக அமைப்பு இந்த விதிகள் தொடர்பாக விளக்கம் கேட்கவும், புது விதிகளைச் செப்டம்பர் வரையில் அமல்படுத்த வேண்டாம் என்று வற்புறுத்தவும் உத்தேசித்திருக்கிறது.

விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் இருக்காது என்று மின்வணிக நிறுவன உயர் நிர்வாகிகளும் ஆய்வாளர்களும் கருதுகின்றனர். விதிகளை மீறுவோர் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெளிவாக்கப்படாமல் இருக்கிறது. இதுவரையில் இத்தகைய வர்த்தகம் தொடர்பாக எந்தவிதத் தெளிவான வழிகாட்டுதலையும் அளிக்காத அரசு இப்போதாவது தங்களுக்குத் தெளிவான பாதையைக் காட்டியிருக்கிறதே என்று அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன.

வளரும் வர்த்தகம்

வெளிநாட்டு மின்வணிக நிறுவனங்கள் உள்நாட்டு வியாபாரிகளின் வர்த்தகத்தைப் பாதிப்பது தொடர்பாக அரசியல் ரீதியாகவே பலத்த ஆட்சேபங்கள் எழுந்தன. இணையவழி மூலமான வர்த்தகம் கடந்த ஆண்டு சுமார் 79,000 கோடி ரூபாய் மதிப்பில் இருந்தது. இதுவே 2020-ல் சுமார் 4,87,500 கோடி ரூபாயாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகத் தங்களின் இணையவழி விற்பனையை அதிகம் செய்யக்கூடிய நாடு இந்தியாதான் என்று அமேசான் அடையாளம் கண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி பி. பெசோஸ் 2014-ல் ஜோத்பூர் பாணி உடை அணிந்துகொண்டு பெங்களூரு நகர பஸ் மீது ஏறி நின்று, ‘200 கோடி டாலர்கள்’ என்று எழுதப்பட்ட உருப்பெருக்கிய காசோலையுடன் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார். அந்தத் தொகை இந்தியாவில் வர்த்தக விரிவாக்கத்துக்கு முதலீடு செய்யப்படும் என்றார்.

“இந்தியாவின் நடுத்தர வர்க்கம் பெருகிக்கொண்டே வருகிறது. அத்துடன் செலவு செய்யும் வேகமும் அவர்களிடம் அதிகரித்து வருகிறது. எனவே, மின்வணிக நிறுவனங்களுக்கு வர்த்தகத்தைப் பெருக்க அற்புதமான வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன” என்கிறார் ராபர்ட் டபிள்யு பெய்ட் நிறுவனத்தின் ஆய்வறிஞர் காலின் செபாஸ்டியன்.

மின்வணிகத்தின் வளர்ச்சியையும் வேகத்தையும் பார்த்துப் பாரம்பரிய வணிகர்கள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, மின்வணிக விற்பனைக்குக் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அரசு உருவாக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்துள்ளனர்.

சார்பு சில்லறை நிறுவனங்கள்

கணிசமான வெளிநாட்டு முதலீட்டைக் கொண்ட மின்வணிக நிறுவனங்கள், தங்களுடைய சரக்குக் கிடங்குகளில் பொருட்களைக் குவித்து வைத்து, சில்லறை விற்பனையில் ஈடுபடுவதை இந்திய அரசு ஆரம்பம் முதலே தடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அமேசான், வால்மார்ட், ஆப்பிள் போன்ற அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தக் கட்டுப்பாடுகளைக் கைவிடுமாறு அரசை வலியுறுத்தி வருவதால், அரசும் அவற்றில் சில தளர்வுகளை அவ்வப்போது செய்துவருகின்றது.

கட்டுப்பாடுகள் பாதித்துவிடாமலிருக்க அமேசானும் அதன் போட்டி நிறுவனங்களும் தங்களை மின்வணிகச் சந்தை விற்பனையாளர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளன. அமேசான் தன்னுடைய சுயேச்சையான விற்பனையாளர்களுக்காகக் கிடங்குகளையும் சரக்குகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வசதிகளையும் வைத்துக்கொண்டிருந்தாலும், சரக்குகளைத் தன் கையிருப்பில் நேரடியாக வைத்துக்கொள்வதில்லை. இதே நடைமுறையை அமெரிக்காவிலும் அது கடைப்பிடிக்கிறது.

எந்த ஒரு மின்வணிக நிறுவனமும் தன்னுடைய விற்பனைக்கு ஒரு சில விற்பனையாளர்களை மட்டும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது முக்கியமான நிபந்தனை என்பதை அரசு கடந்த வாரம் உறுதிப்படுத்திவிட்டது. கிளவுட்டெயில் என்ற ஒரு நிறுவனத்தை அமேசான் அதிகம் நம்பியிருக்கிறது. இனி அது சாத்தியமில்லை. இந்தியாவில் தனக்கு 80,000 விற்பனையாளர்கள் இருக்கின்றனர் என்று அமேசான் கூறிக்கொண்டாலும், அதன் விற்பனையில் 40% முதல் 50% வரையில் கிளவுட்டெயில் மூலம்தான் நடக்கிறது என்கிறார் ஃபாரஸ்டர் நிறுவனத்தின் மீனா.

கிளவுட்டெயின் நிறுவனத்தின் தாய் நிறுவனம், என்.ஆர். நாராயண மூர்த்தியின் கேடமரான் வென்சர்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். அமேசான் இந்த நிறுவனத்தின் பங்குகளில் 49%-ஐ தன் வசம் வைத்திருக்கிறது. ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் இதே போல மிகப்பெரிய சில்லறை நிறுவனத்தைச் சார்பு நிறுவனமாக வைத்திருக்கிறது.

பிரதிபலிப்புகள்

இந்த விதிகளை வகுத்தளித்த தொழில் கொள்கை - ஊக்குவிப்புக்கான துறை, விதிகள் மீறப்பட்டது குறித்து ஏதும் தகவல் தர மறுக்கிறது. அதே சமயம், புதிய விதிகளை அமேசான் நிறுவனம் ஆழ்ந்து படித்துப் பரிசீலித்து வருகிறது; இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர வணிக நிறுவனங்கள் மூலம் நுகர்வோரின் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வோம் என்று அமேசான் தெரிவிக்கிறது. ஃப்ளிப்கார்ட் நிறுவனமோ இது தொடர்பாகக் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

கிளவுட்டெயில் போன்ற நிறுவனத்தை மட்டும் அதிகம் சார்ந்திருக்காமல் இந்திய நிறுவனங்களுடன் பல கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து, அவற்றின் மூலம் விற்பதுதான் ஒரே வழி என்பது புரிகிறது. கிளவுட்டெயில் நிறுவனம் இப்போது செய்யும் மின்வர்த்தகத்தில் திடீரென மாற்றம் எதையும் செய்துகொள்ள முடியாது என்று கேடமரான் வென்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ஜுன் நாராயண் தெரிவிக்கிறார்.

மிக அதிக விற்பனையாளர்களைக் கொண்டிராத ஸ்னாப்டீல் நிறுவனம் மின்வணிகக் கட்டுப்பாடுகளை வரவேற்றுள்ளது.

தமிழில்: சாரி,

© தி நியூயார்க் டைம்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x