Last Updated : 14 Apr, 2016 11:21 AM

 

Published : 14 Apr 2016 11:21 AM
Last Updated : 14 Apr 2016 11:21 AM

கூட்டாட்சியே சரியான தீர்வு: திருமாவளவன் சிறப்புப் பேட்டி

ஆரம்ப காலத்தில் 'தேர்தல் பாதை திருடர் பாதை' என்று சொன்னவர் நீங்கள். தேர்தல் பாதைக்கு உங்களைத் திருப்பியது எது?

அதிகாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத இந்த மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கு இது முக்கியம் என்று நினைத்தோம். அதிகாரத்தில் பல வகை இருக்கிறது. நிர்வாக அதிகாரம் இருக்கிறது, பொருளாதார அதிகாரம் இருக்கிறது, கட்சி அதிகாரம் இருக்கிறது, ஆட்சி அதிகாரம் இருக்கிறது. கட்சியில் பல வகைகளில் அதிகாரம் இருக்கிறது. ஒன்றியச் செயலாளர்; அது ஒரு அதிகாரம், மாவட்டச் செயலாளர்; அது ஒரு அதிகாரம், கிளைச் செயலாளர்; அது ஒரு அதிகாரம். ஆட்சி அதிகாரத்தை விடுங்கள், கட்சி அதிகாரமே விளிம்புநிலை மக்களுக்கு எவ்வளவு எட்டாக்கனியாக இருக்கிறது!

இன்றைக்கெல்லாம் பெரிய கட்சிகளில் எத்தனை தலித்துகள் ஒன்றியச் செயலாளர் பதவிகளில் இருக்கிறார்கள்? எத்தனை முஸ்லிம்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்? கணக்கெடுத்துப் பாருங்கள்.

கட்சி அதிகாரம் ஒருவனுக்குப் பொருளாதார அதிகாரத்தைத் தருகிறது. நான் தவறான முறையில் குறிப்பிடவில்லை. அரசியல் பின்னணியில் உள்ளவர்களே அரசு ஒப்பந்தங்களை எடுக்கிறார்கள். ஒருவர் நேர்மையான ஒப்பந்ததாரராக இருந்தும் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், எத்தனை தலித்துகளுக்கு ஒப்பந்த வாய்ப்புக் கிடைக்கிறது? கழிப்பறையைக் கழுவுகின்றவன் தலித்தாக இருக்கிறான், அந்தக் கழிப்பறையின் கல்லாப் பெட்டியில் காசு வாங்கிப் போடுகிறவன் எவனாகவோ இருக்கிறான். அந்த ஒப்பந்தத்தைக்கூட ஒரு தலித்தால் எடுக்க முடியவில்லை என்பதுதானே நிதர்சனம்?

ஒரு சிறிய குழுவில் நான் இயங்கியபோது, நான் முன்வைத்தது தேர்தல் புறக்கணிப்பு அரசியல். தேர்தலில் பங்கெடுக்காமல் ஒரு புரட்சிகரப் பாதையில் இயங்க வேண்டும் என்கிற அரசியலாகவே என் ஆரம்ப கால அரசியல் நோக்கம் இருந்தது. மக்களோடு நெருங்க நெருங்க என்னுடைய நிலைப்பாடும், செயல்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் மாறியது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறை இல்லாத அமைதியான ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்கள். அதற்கு நாடாளுமன்ற ஜனநாயகப் பாதை சிக்கல் இல்லாததாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இதை உணர்ந்தே, தேர்தல் அரசியலில் பங்கெடுப்பது என்ற முடிவை எடுத்தோம். எனவே, நான் மாறிவிட்டேன் என்பதைவிட, மக்கள் என் நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்கள் என்பதே சரி. அது சரியான முடிவு என்றே நினைக்கிறேன்.

இந்த 18 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் பாடம் என்ன? அன்றைக்கு நீங்கள் யூகித்த அளவுக்குத்தான் இன்றைய அரசியல் இருக்கிறதா இல்லை அதைவிட மோசமாக அல்லது எளிதாக இருக்கிறதா? நீங்கள் எதை நினைத்து இங்கே வந்தீர்களோ, அந்த இலக்கை நோக்கி நகர முடிந்திருக்கிறதா?

மிகவும் கடினமானதொரு வாழ்க்கையாகத்தான் அரசியலை நான் பார்க்கிறேன். எந்தத் தளத்துக்குச் சென்றாலும், சாதி என்பது பெரிய இடர்ப்பாடாக இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இணைவதற்கான போராட்டம் பெரும் போராட்டமாக இருக்கிறது. ஆக, இது அவ்வளவு லகுவான பாதையாக இல்லை. இதையும் தாண்டி பொதுத்தளத்தில் நின்றாலும்கூட, தேர்தல் அரசியல் மிகவும் கடுமையானதுதான். எவ்வளவு நேர்மையாக உழைத்தாலும் அரசியல் களத்தில் நல்ல பெயர் சம்பாதிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்கிப் பழகுவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் எப்படி? சாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா? இருவருக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகள் என்ன?

நாங்கள் தேர்தல் அரசியலில் 1999-ல் அடியெடுத்து வைத்தோம். மூப்பனாருடன் முதல் கூட்டணி. 2001-ல் அவர் அதிமுக அணிக்குச் சென்றபோது, நாங்கள் திமுகவுடன் வந்துவிட்டோம். 2001 முதல் 2004 வரை திமுக அணியில் இருந்தோம். 2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உருவானது. ஆறு மாதம் அவர்களுடன் இருந்தோம். ஜெயலலிதாவை அடிக்கடி சந்திக்கவோ, நீண்ட நேரம் உரையாடவோ வாய்ப்பே கிடைத்ததில்லை. ஓரிரு முறைதான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எனவே, அவரது பரிமாணத்தை நான் மதிப்பிட முடியாது. ஆனால், 2006-க்குப் பிறகு 2014 வரை திமுகவுடன் இருந்திருக்கிறோம். மொத்தம் 11 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில் பல முறை கருணாநிதியைச் சந்திக்கவும், நெடுநேரம் அவருடன் உரையாடவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

அரசியலைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் ஒரு நெருக்கத்தை அவர் என்னிடத்தில் காட்டினார். என் உடல் நலம், எதிர்கால வாழ்க்கை தொடர்பாகவெல்லாம் அக்கறையோடு பேசியிருக்கிறார். கருணாநிதியைப் பொறுத்தவரை வெறும் அரசியல் ஆதாயம் என்றில்லாமல், எங்கள் மீது உண்மையாகவே ஒரு அக்கறையை வெளிப்படுத்துபவராக உணர்ந்திருக்கிறேன்.

இருவர் ஆட்சிக் காலகட்டங்களிலுமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அவற்றைத் தீர்ப்பதற்கான ஒரு கோரிக்கையோடு உங்களால் அவர்களை அணுக முடிந்திருக்கிறதா? பலன்கள் ஏதும் இருந்திருக்கின்றவா?

தலித்துகளுக்கு எதிரான வன்முறை இரு ஆட்சிகளிலுமே கடுமையாக நடந்திருக்கிறது. திமுகவுடன் நான் நெருக்கமாக இருந்த காலத்தில், தலித் மக்களின் பிரச்சினைகளை கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறேன். இயன்றவரை தலையிட்டு குறிப்பிடத் தக்க சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடக்கவேயில்லை என்பதை மிகுந்த வேதனையோடு சொன்னபோது, அதற்காக சிறப்புக் கவனம் எடுத்து, தேர்தலை நடத்திக்காட்டினார். ஒருமுறை வன்முறை நடந்தபோது, திமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி நடந்ததை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது, ஒரு குழுவை அனுப்பி ஒரு விரிவான அறிக்கையை திமுக சார்பில் வெளியிட்டார். அதிமுகவோடு ஒப்பிடும்போது, திமுக ஆட்சியில் எங்கள் குறைகளைச் செவிமடுக்கிற நிலை இருந்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். ஆனால், தலித்துகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குக்கூட சட்டசபையில் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுவாக, தலித் பிரச்சினைகளில் ஜெயலலிதா வெளிப்படையாக எந்தக் கருத்தையும் சொல்வதில்லை; கொடுமைகளைக் கண்டிப்பதில்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதுமில்லை. முற்றிலும் அவர் விலகி நிற்பவராகவே இருந்திருக்கிறார், இருக்கிறார்.

இன்றைக்கு தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுமே திட்டமிட்டு விசிகவிடமிருந்து விலகி நிற்பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. இதில் கருணாநிதியுடன் ஒரு நெருக்கமான உறவைப் பராமரித்தும்கூட உங்களால் திமுகவுடன் இணைந்திருக்க முடியவில்லை. எது உங்களைப் பெரிய கட்சிகளிடமிருந்து வெளியேற்றுகிறது?

வெளிப்படையாக எந்தக் கருத்து மோதலும், கசப்பான சம்பவங்களும் நடந்தேறவில்லை. தர்மபுரி வன்முறை வெறியாட்டத்துக்குப் பிறகு, ராமதாஸ் தலித்துகளையும் தலித் அல்லாதோரையும் எதிரெதிர் தரப்புகளாக நிறுத்துவதற்கான காய்களை நகர்த்தினார். தலித் வெறுப்பைத் தமிழகம் முழுமைக்கும் ராமதாஸ் தூவினார். தலித் வெறுப்புக்கான இலக்காக விசிகவைக் கட்டமைத்தார். திமுகவுக்கும் இயல்பிலேயே அச்சம் இருந்தது. எங்களை உடன் வைத்திருந்தால் அவர்களின் அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்று அவர்கள் உணர்வதை அவர்களுடைய புறக்கணிப்புகள் வெளிக்காட்டியபோது நாங்கள் வெளியேறினோம்.

தேர்தல் அரசியலில் நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் - நாம் எவ்வளவு நெருக்கமான ஒரு உறவைப் பராமரித்தாலும், பெரிய கட்சிகள் அதிகாரம் என்று வரும்போது விளிம்புநிலை மக்கள் அரசியலைத் தூக்கியெறிந்துவிட்டு போகத் தயங்காது என்பது! இந்தப் பாடத்துக்குப் பின்தான் விளிம்புநிலை அரசியலைப் பேசும் கட்சிகளை ஒருங்கிணைத்து, குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தின் கீழ் கூட்டணி அமைத்து, ஒரு கூட்டாட்சிக்கான முயற்சிகளைத் தொடங்குவது எனும் முடிவுக்கு வந்தோம்.

தனிக் கட்சி ஆட்சிமுறையைவிடக் கூட்டாட்சியே சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஆமாம். இந்தியா போன்ற பல்வேறு இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், எல்லாத் தரப்பினருக்குமான அரசியல் அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், அதுதான் இருப்பதிலேயே நல்ல வழி. மத்தியில் கூட்டாட்சி இருந்தபோது, தனிக் கட்சி ஆட்சியைக் காட்டிலும் அது மேம்பட்டதாகத்தானே இருந்தது?

ஒரு கட்சி ஆட்சி முறையில் பல கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பில்லை. அரசின் கொள்கைகளை, ஆட்சியின் கொள்கைகளைத் தீர்மானிக்கிற இடத்தில் அமர்ந்து விவாதிக்கக் கூடிய வாய்ப்பு பிற கட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கூட்டாட்சி என்றால், ஒவ்வொரு முறையும் அரசு தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது, ஆட்சி தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது அமைச்சரவைக் கூட்டத்தில் பேச வேண்டும். அமைச்சரவையில் பேசுகின்றபோது மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அங்கே இருப்பார்கள். உதாரணமாக, கம்யூனிஸ்ட்டுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரவையில் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் விரோதச் சட்டங்களை அத்தனை எளிதாக நிறைவேற்ற முடியுமா?

செல்வம் ஓரிடத்தில் குவிந்தால் அது முதலாளித்துவம். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்தால் அது எதேச்சாதிகாரம். இந்த அதிகாரம் ஒரே இடத்தில் குவிகிறபோது எல்லோருமே ஹிட்லர்களாகத்தான் மாறுவார்கள். நாளை திருமாவளவனிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்தாலும் அவனும் அப்படி மாறக்கூடும். அது நடக்கக் கூடாது. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதற்குக் கூட்டாட்சி முறை உதவும். இது பன்மைத்துவத்தையும் பிரதிபலிக்கும்.

நீங்கள் யோசித்துப்பாருங்கள்.. இன்றைக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், அடுத்து எங்கள் கைகளில் ஆட்சியைக் கொடுங்கள் என்று சொல்லும் தனிக் கட்சிகள் யார்? யாருடைய தரப்பு அவர்கள்? இதைக் கடலோடிகள் தரப்பு சொல்ல முடியுமா? இருளர்தரப்பு என சொல்ல முடியுமா? குறவர்களால் சொல்ல முடியுமா? இவர்களுக்கெல்லாம் எப்போது அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது? வலிமையானவர்களும் பெரும்பான்மையினரும் மட்டுமே போட்டி போட்டுக்கொண்டி ருந்தால், வலிமையற்றவர்கள், சிறுபான்மையினர் எப்போது போட்டியில் பங்கேற்பது? எப்போது அதிகாரத்துக்கு வருவது?

ஒரு சமூகத்தின் பல்வேறு தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு கூட்டமைப்பும் ஜனநாயகத்தைக் கட்டாயம் மேம்படுத்தும். ஆனால், இந்தியாவை பொறுத்தளவில் நம்மை சாதிரீதியாகப் பிரித்துவிட்டால் இன்றைக்குப் பெரும்பான்மை இனமாகத் தம்மைக் கருதிக்கொள்கிறவர்கள் கூட சிறுபான்மையினங்களின் தொகுப்பாகவே இருப்பார்கள். சிறுபான்மைச் சமூகங்களின் கூட்டாட்சி அரசியலுக்கு எதிர்வினையாக, பெரும்பான்மையினமாக நாம் குறிப்பிடும் சமூகங்களும் கூட்டமைப்பு அமைத்தால் இப்போதிருக்கும் நிலைமையைவிடவும் மோசமான சூழலை அது உருவாக்கி விடாதா? அப்படி ஒரு அபாயமும் இருக்கத்தானே செய்கிறது?

இது ஒரு நல்ல கேள்வி. அப்படியான அபாயம் நிச்சயம் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்கள் அமைக்கும் இந்த கூட்டாட்சி அரசியலின் மிகப்பெரிய சவாலும் பொறுப்பும் இது என்று சொல்வேன். நம்முடைய நோக்கம் இருதரப்புகளாகக் கொம்பு சீவி நிற்பதல்ல. அடிப்படையில் நாமும் அவர்களும் ஒன்றுகலப்பது. சிறுபான்மை இனங்களின் குரல்களும் எதிரொலிக்கும் ஒரு அரசாங்கம் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்துவதில் முக்கிய கவனம் எடுத்துக்கொள்ளும். அதன் பொறுப்புகளிலேயே முக்கியமானது மாற்றுத்தரப்பிலும் இந்த ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுப்பதுதான். சுருக்கமாக சொல்வதானால் நீங்கள் ஒரு சாதி,மதம். நான் ஒரு சாதி, மதம் என்று பிரிந்து நிற்கப்போவதில்லை. நமக்குள் இருக்கும் இந்த அடையாளங்களை மீறி நமக்குள் ஒன்றுகலப்பதுதான். சமத்துவம்தான் நோக்கமே தவிர, ஆதிக்கம் அல்ல.

உன்னதமானது என்றாலும் இது அவ்வளவு சீக்கிரம் நடக்கிற காரியமா?

ஓராண்டுக்கு முன் இதை நான் சொன்னபோது, "எப்போதோ வெற்றி பெறப்போகும் ஒரு தத்துவத்துக்காக இப்போது தோற்பதற்குத் தயாராகிவிட்டார் திருமாவளவன்" என்று சொன்னார் பீட்டர் அல்போன்ஸ். உண்மைதான். இது எளிதில் ஜெயிக்கக் கூடிய விஷயம் அல்ல. ஆனால், இது ஒரு வரலாற்று நிர்ப்பந்தம். ஒடுக்கப்பட்டவர்களுக்காக விளிம்புநிலைச் சமூகத்தினருக்காகப் பாடுபடுகின்ற யாரும் இந்தக் கோணத்தில்தான் சிந்திக்க முடியும்.

இன்றைக்கு இருக்கிற இந்த அரசியலில், இன்றைக்கு இருக்கிற இந்தத் தேர்தல் முறையில் விளிம்புநிலைச் சமூகம் எந்தக் காலத்திலும் அதிகார வலிமையைப் பெற முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. இன்றைய முறையில் தனிப்பட்ட வகையில் ஒரு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமர் நாற்காலி வரை உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால், சேரிகள் சேரிகளாகவேதான் இருக்கும். குறைந்தது ஆயிரம் தலைமுறைகள் அதிகாரத்தோடு தொடர்பில்லாமல் கிடந்திருக்கிறோம். நாளைக்கே அதிகாரத்தைக் கைப்பற்றித்தான் ஆக வேண்டும் என்று என்ன அவசரம் இருக்கிறது?

பெரிய கட்சிகளோடு சேர்ந்து நின்று நானும் இரண்டரை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக் கிறேன். ஐந்தாண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். என்ன சாதிக்க முடிந்தது? என் உணர்வுகளை அங்கே வெளிப்படுத்த முடிந்ததா? நான் விரும்பிய திட்டங்கள் எதையேனும் கொண்டுவர முடிந்ததா? பள்ளிக்கூடப் பிள்ளையைப் போல் மேஜையைத் தட்டிவிட்டு வர முடிந்ததே தவிர, எதையும் அங்கே சாதிக்க முடியவில்லை. பெரும்பான்மையின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதைவிட சிறுபான்மைகளின் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருப்பது நிச்சயம் பலன் அளிக்கக் கூடியது.

தமிழகத்தில் நீங்கள் சொல்லக்கூடிய விளிம்புநிலைச் சமூகங்களையெல்லாம் சேர்த்தால் குறைந்தது 40% தொடும். ஆனால், விளிம்புநிலைச் சமூகங்களின் அரசியலைப் பேசும் இயக்கங்களால் இரண்டு சதவிகிதம் ஓட்டுகளைக்கூடத் தனித்து வாங்க முடியவில்லையே.. என்ன காரணம்?

(தொடர்ந்து பேசுகிறார் திருமாவளவன்..)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x