Last Updated : 03 Apr, 2016 10:59 AM

 

Published : 03 Apr 2016 10:59 AM
Last Updated : 03 Apr 2016 10:59 AM

‘ரா’ உளவாளிகளை அடையாளம் காண முடியுமா?

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ‘ரிசர்ச் அண்ட் அனாலிசஸ் விங்’. சுருக்கமாக ‘ரா’வுக்கு உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செல்போனில் தனது குடும்பத்தினருடன் மராத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது சிக்கியதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் உள்ளவர்களிடம் பேசும் உரையாடல்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். அதன்படி கண்காணித்தபோதுதான் இந்தியரை பிடித்துள்ளனர். அவரிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்துள்ளது. சினிமாவில் நாம் பார்க்கும் உளவாளிகள் வேறு, உண்மையில் நடப்பது வேறாக நமக்கு தெரியும்.

சினிமாவில் வரும் உளவாளி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பார். கடினமான பயிற்சிகளைப் பெற்றிருப்பார். ஆனால் இது போல் தனிப்பட்ட நபர் ஒருவர் ரா உளவாளி என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏனெனில், அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ, பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ போலவே, ரா உளவு நிறுவனத்தின் ஏஜென்டுகளும் வழக்கமாக தூதரகங்களில் பணியமர்த்தப் படுகிறார்கள். அவர்களிடம் தூதரக பாஸ்போர்ட் இருக்கும். தற்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் கூட, அதுபோல் பாகிஸ்தானில் பணியாற்றியதாக எங்கோ ஒருமுறை படித்திருக்கிறேன். ஆனால், எனக்கு தெரிந்த வரையில் அவர் ஐபி.யில் (இன்டலிஜென்ஸ் பியூரோ) பணியாற்றி உள்ளார். ரா நிறுவனத்தில் அல்ல. உள்நாட்டில் உளவு பார்க்கும் பணியை செய்வதுதான் ஐபி.

ஐபி.யில் தோவல் பணியாற்றினால், பாகிஸ்தானில் அவர் என்ன செய்து கொண்டி ருந்தார். எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், வதந்திகள் மூலம்தான் ஐபி, ரா ஆகிய 2 உளவு அமைப்புகளின் நடவடிக்கைகள் பற்றி நமக்கு தெரியும். உண்மையான நடவடிக்கைகள் தெரியாது.

சில வேளைகளில் ரா அமைப்புக்குள் என்ன நடக்கிறது என்பது அதன் தலைவருக்குகூட தெரிவதில்லை. முஸ்லிம்களை பணியமர்த்துவதில்லை என்ற கொள்கையை ரா கடைபிடிப்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அவுட்லுக்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ரா அமைப்பில் பணிபுரியும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை.

ரா முன்னாள் தலைவர் ஏஎஸ் துலாத்திடம் ராய்ட்டர் நிறுவனம் பேட்டி கண்டபோது, ‘எனக்கு தெரிந்து ரா அமைப்பில் முஸ்லிம் இருந்ததாக தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ரா அமைப்பு ஊனமுற்றது என்றுதான் கூற வேண்டும்.

ரா அமைப்பின் மற்றொரு முன்னாள் தலைவர் கிரிஷ் சந்திர சக்சேனா கூறுகையில், ‘‘புலனாய்வு தகவல்களை சேகரிக்க முஸ்லிம் அதிகாரிகளின் தேவை அவசியமாக உள்ளது. ஒரு சிலருக்கு மட்டும்தான் உருது அல்லது அரபி மொழி பற்றிய அறிவு உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’’ என்று கூறியிருந்தார். ரா அமைப்பில் முஸ்லிம்கள் தேவை எனும் போது, அந்த அமைப்பு ஊனமுற்றதாக இருக்கும்போது, ஏன் முஸ்லிம்களை பணியமர்த்த கூடாது?

நான் ஹரப்பாவுக்கு சென்றிருந்தபோது ஐஎஸ்ஐ பற்றிய அனுபவம் கிடைத்தது. லாகூரில் இருந்து சில மணி நேரங்களில் ஹரப்பா சென்றேன். சிந்து சமவெளி நாகரிகம் இருந்த இடத்தை பார்க்க சென்றேன். அந்த இடம் மிக அழகாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் அங்கு சென்றேன்.

நுழைவு டிக்கெட் வாங்கும் இடத்தில், வெளிநாட்டவருக்கான அதிக கட்டண டிக்கெட்டை எனக்கு கொடுத்தனர். நான் உள்ளூர்காரன் இல்லை என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘யஹான் கோய் பாகிஸ்தானி நஹின் ஆதே’ (பாகிஸ்தானியர் யாரும் இங்கு சுற்றிப் பார்க்க வரமாட்டார்கள்) என்றார்.

இந்த முறை நான் டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்ற போது, எனக்கு உள்ளூர்காரருக்கான டிக்கெட் கொடுத்தனர். அப்போது நான் இந்தியன் என்று சொல்லவில்லை. உள்ளே சென்றபோது அங்கு சல்வார் கமீஸ் அணிந்திருந்த ஒருவர், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, லாகூர் என்று பதில் அளித்தேன். அதன் பிறகு அவர் சென்றுவிட்டார்.

எங்களுக்கு வழிகாட்டியாக (கைட்) வந்திருந்தவர், இந்தப் பகுதிக்கு வந்து செல்லும் வெளிநாட்டவர்களின் விவரங்களை ஐஎஸ்ஐ தொடர்ந்து கண்காணித்து பதிவு செய்கிறது என்றார். வரலாற்று சின்னங்களை பார்த்து விட்டு வெளியில் செல்லும் போது, மீண்டும் அந்த சல்வார் கமீஸ் மனிதர் எங்களை தடுத்து நிறுத்தி, ‘தேசிய அடையாள அட்டை’ எங்கே என்றார். (பாகிஸ்தானியர்கள் அனைவரும் தேசிய அடையாள அட்டையை தங்களுடன் வைத்துள்ளனர்)

நாங்கள் வெளிநாட்டவர் என்று தெரிந்ததும், எங்களை அங்குள்ள ஐஎஸ்ஐ அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் பாஸ்போர்ட் விவரங்களை குறித்து கொண்டனர். அத்துடன் பொய் சொன்னதற்காக கண்டபடி திட்டி எச்சரித்து அனுப்பினர். வெளிநாட்டினருக்கு அது எவ்வளவு பெரிய பயங்கரம் என்பது உங்களுக்கு தெரியாது.

ரா ஏஜென்டுகள் தூதரக பாஸ்போர்ட்டில் பயணம் செய்வார்கள் என்று முன்பு நான் கூறியிருந்தேன். ரா அமைப்புடன் எனக்கு கடந்த 2001 அக்டோபர் மாதம் ஒரு அனுபவம் ஏற்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தானில் போர் செய்திகளை சேகரிக்க நான் சென்றிருந்தேன்.

உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் வழியாகத்தான் ஆப்கானிஸ்தான் செல்ல முடியும். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே எல்லையில் வாகனம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அங்குள்ள ஒரு ஓட்டலில் நடுத்தர வயதுள்ள 2 இந்தியர்களை நான் பார்த்தேன். அவர்கள் கோட், டை அணிந்திருந்திருந்தனர். காலையில் சிற்றுண்டி சாப்பிடவும், மாலையில் பார் இருக்கும் இடத்திலும் இருப்பார்கள்.

எங்கள் வாகனம் தஜிகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைக்கு சென்றதும் அங்கிருந்த ரஷ்ய வீரர்கள் எங்கள் பாஸ்போர்ட்களை சரிபார்த்தனர். பல நாடுகளில் இருந்து வந்திருந்த நிருபர்களை ஆப்கனுக்குள் அனுப்பினர். ஆனால், அந்த 2 இந்தியர்களை மட்டும் மீண்டும் துஷான்பேவுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இரண்டு வாரங்கள் செய்தி சேகரித்த பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினேன். பின்னர் குதிரையில் சென்றபோது ஆற்றில் தவறி விழுந்து விட்டேன். அப்போது என் விசா முத்திரை தண்ணீரில் நனைந்து கறையாகிவிட்டது. அதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று பதற்றத்துடன் இருந்தேன்.

அப்போது, அந்த 2 இந்தியர்களில் ஒருவர் அங்கு இருந்தார். என்னிடம் வந்து, எங்கு போக வேண்டும் என்று கேட்டார். தான் அழைத்து செல்வதாக கூறினார். (அவர்கள் வெள்ளை நிற மெர்சிடஸ் பென்ஸ் கார் வைத்திருந்தனர்.)

எல்லையில் இறங்கி என்னுடைய பாஸ்போர்ட்டில் முத்திரை பதிப்பதற்காக வெளியில் எடுத்தேன். அந்த இந்தியர்கள் காரிலேயே இருந்தனர். குதிரையில் சென்று ஆற்றில் விழுந்தது, விசா முத்திரை அழிந்தது என மொத்த கதையையும் அங்கிருந்த அதிகாரியிடம் விளக்கினேன்.

ஆனால், அதை அவர் காதில் வாங்காமல் காரில் இருந்து அந்த 2 இந்தியர்களை ஒரு பார்வை பார்த்தார். அதன்பிறகு என்னை எல்லையில் அனுமதித்தார். அப்போதுதான் அந்த 2 இந்தியர்களும் யார் என்ற உண்மை எனக்கு புரிந்தது.

நான் அப்பாவியாக இருந்திருக்கிறேன். ஆனால், ரஷ்ய வீரர்களும், உஸ்பெகிஸ்தான் அதிகாரிகளும் ஒரு பார்வையிலேயே ரா ஏஜென்டுகளை அடையாளம் கண்டுபிடித்து விடுகின்றனர்.

தமிழில்: ஏ.எல்.பழனிசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x