Published : 08 Apr 2016 09:33 AM
Last Updated : 08 Apr 2016 09:33 AM

தொழிலாளரைக் காக்காத சீர்திருத்தம்!

தொழிலாளர் சட்டங்களைத் திருத்தியதால் எந்த நாட்டிலும் வேலை வாய்ப்பு பெருகவில்லை

பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளின் இரண்டாவது கட்டத்தில் முக்கிய இடம் வகிப்பது நிலம் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களைத் திருத்துவது. 1990 தொடங்கியதிலிருந்தே எல்லா துறைகளிலும் சட்டங்களைத் திருத்தும் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. 1990 முதல் 2014 வரையில் ஆட்சியில் இருந்த அரசுகள் நிலம், தொழிலாளர் சட்டங்களைத் திருத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அந்த அரசுகளுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை, நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து தன்னிச்சையாக நிறைவேற்றிவிட முடியாதபடிக்கு அவை கூட்டணிக் கட்சிகளால் கட்டுப்படுத்தப்பட்டன.

மசோதாக்கள் மீது நடவடிக்கை

‘நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை, விவசாயிகளுக்கு நியாயமான நஷ்டஈடு வழங்கல், மறுவாழ்வு, மறு குடியமர்வு’ஆகியவற்றுக்கான மசோதா என்று அழைக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தல் மசோதா நாடாளுமன்றத்தில் இரண்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டும் போதிய ஆதரவு இல்லாததால் இன்னமும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதே சமயம், மிகக் குறுகிய காலத்தில் 2 தொழிலாளர் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றிவிட்டது. ‘பயிற்சித் தொழிலாளர் (திருத்த) மசோதா-2014’, ‘பதிவேடுகளைப் பராமரித்தல், அறிக்கை அளித்தல் ஆகியவற்றிலிருந்து சில நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா-2014’ என்ற இரு மசோதாக்கள் நிறைவேறின. ‘ஆலைகள் சட்ட (திருத்த) மசோதா-2014’ மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. ‘தொழில் உறவுகள் மசோதா-2015’ தொடர்பாக வரைவு வாசகங்கள் தயார் செய்யப்பட்டன.

முதலில் கூறப்பட்ட மசோதாவானது 1948-ல் இயற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்தைத் திருத்தக் கோருகிறது. அடுத்தது, 1926-ல் இயற்றப்பட்ட தொழிற்சங்க சட்டம், 1947-ல் இயற்றப்பட்ட தொழில் தகராறுகள் சட்டம், தொழில்துறை வேலைவாய்ப்பு நிலையாணைகள் சட்டம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் திருத்தவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் சட்டம் 1948

1948-ம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டப்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபடும் ஒரு நிறுவனம் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால்கூட ஒரு ஆலையாகக் கருதப்படும். அதே பிரிவு உற்பத்திக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் 20 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொண்டால்தான் ஆலையாகக் கருதப்படும். இப்போது கொண்டுவரப்படும் ‘தொழிற்சாலைகள் சட்ட (திருத்த) மசோதா-2014’ தொழிலாளர் எண்ணிக்கையை 20-லிருந்து 40 ஆக உயர்த்துகிறது.

தொழில் உறவுகள் மசோதா-2015-க்கான வரைவு வாசகங்கள் தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வதற்குக் கடுமையான நிபந்தனைகளையும், தொழிலாளர்களை வேலையிலிருந்து அகற்ற எளிமையான வழிமுறைகளையும் கொண்டுள்ளது. 300 தொழிலாளர்கள் வரையில் வைத்து வேலைவாங்கும் தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்துறை அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த ஒரு தொழிலாளியையும் பணிவிலக்கு செய்ய புதிய மசோதா வகை செய்கிறது.

1947-ம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் பிரிவு V(B) படி, 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியில் அமர்த்திக்கொண்டுள்ள நிறுவனங்கள் தொழிலாளர்களைப் பணிவிலக்கம் செய்வதாக இருந்தால் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். தொழிலாளர் நலம் என்பது மத்திய, மாநில அரசுகளுக்கான பொது அதிகாரப் பட்டியலில் இருப்பதால், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் 1926-ம் ஆண்டு தொழிற்சங்கச் சட்டம், 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம், 1947-ம் ஆண்டு தொழில் தகராறு சட்டம் ஆகியவற்றுக்குத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளன. தொழிலாளர்களின் பிரதிநிதிகளோடு ஆலோசனை கலக்காமல் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) நடத்திய மாநாட்டின் 144-வது தீர்மானப்படி, தொழிலாளர் சட்டங்களில் எந்தத் திருத்தத்தை மேற்கொள்வதாக இருந்தாலும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளோடு மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை கலப்பது சட்டப்படி கட்டாயமாகும்.

முறைசார் வேலைவாய்ப்பு பெருக்கம்

நாடு சுதந்திரம் அடைந்தது முதலே நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்புரீதியாகக் கட்டமைக்கப்படாத துறைகளில், முறையான பணிநியமனம், வேலைநேர ஒப்பந்தம், திட்டவட்டமான கூலி, இழப்பீடு போன்ற எதுவும் அற்ற நிலையில்தான் வேலை பார்க்கின்றனர். தொழிலாளர் சட்டங்களில் காலத்துக்கு ஒவ்வாத, கடுமையான பிரிவுகளை நீக்குவதால் கட்டமைப்புள்ள தொழிற்சாலைத் துறையில் ஏராளமானோருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்று அரசு கூறுகிறது. பழைமையான சட்டங்களைத் திருத்துவதால் மட்டுமே முறைசார்ந்த தொழில்துறையில் எப்படி வேலைவாய்ப்பு பெருகிவிடும்?

இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன்னால் முறைசார்ந்த, முறைசாராத துறைகள் என்பதற்கு விளக்கம் அளிப்பது முக்கியம். தொழிலாளர் துறை புள்ளிவிவர நிபுணர்களால், 15-வது 17-வது சர்வதேச மாநாட்டில் இதற்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தில் இடம் பெற்றுள்ளதுதான் அந்த விளக்கங்கள். மின்சாரத்தை உற்பத்திக்குப் பயன்படுத்தும் ஆலைகள் 10-க்கும் குறைவான தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தால் அவை முறைசாராத தொழில்நிறுவனங்கள். மின்சாரத்தை உற்பத்திக்குப் பயன்படுத்தாமல் 20-க்கும் குறைவான தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களும் முறைசாராத நிறுவனங்களே.

போக்கில் மாற்றம்

அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு 546 லட்சம் என்பதிலிருந்து 1,016 லட்சங்களாக உயர்ந்திருக்கிறது. ஆனால், இதில் பெரும்பாலானவர்கள் முறைசாராத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட துறையில் முறைசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 38% ஆக இருந்தது 67% ஆக இப்போது உயர்ந்திருக்கிறது. முறைப்படி வேலை பெற்றவர்களின் பங்களிப்பு 62%-லிருந்து 33% ஆகக் குறைந்துவிட்டது. எண்ணிக்கை அளவிலும் இது எதிரொலிக்கிறது. கண்டிப்பான தொழிலாளர் சட்டங்கள் அமலில் இருந்தாலும், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகு தொழில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகரித்துவருவதை இது காட்டுகிறது.

இந்தப் போக்கு, பழமையான சட்டங்களைத் திருத்துவதால் தலைகீழாக மாறிவிடுமா? நிச்சயம் இல்லை. கடுமையான தொழிலாளர் சட்டங்கள் அமலில் இருக்கும்போதே தங்களுடைய தேவைக்கு ஏற்பத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை நிறுவனங்களால் மாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது என்னும்போது தொழிலாளர் சட்டங்களை வலுவற்றதாக்கி நீர்த்துப்போக வைக்கும்போது இந்தப் போக்கு மேலும் தீவிரமாகிவிடும் என்பதே உண்மை. தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போக வைத்தால் வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதால் பெரிய தொழில் நிறுவனங்கள் உருவாகும். அதன் காரணமாக வேலைவாய்ப்பு பெருகிவிடும் என்று மத்திய அரசு கூறுவதையும் ஜீரணிக்க முடியவில்லை; உலகம் முழுக்கவும் இயந்திரங்களின் துணையுடன் உற்பத்தியை மேற்கொள்வது இப்போது அதிகமாகிவிட்டது. அந்த இயந்திரங்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மட்டுமே தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். மிகப்பெரிய தொழில்நிறுவனங்களில்கூட தொழிலாளர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அல்லாமல் நூற்றுக்கணக்கில் என்று சரிந்துவிட்டது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்தியதால் எந்த நாட்டிலும் வேலைவாய்ப்புப் பெருகியதாக தகவல்களே இல்லை. இப்போது பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், வளரும் நாடுகளில் உள்ள சிறு நிறுவனங்களை இணைத்து சங்கிலித்தொடராக்கி வருகின்றன. ஃபோர்டு, டெய்லர் நிறுவனங்களின் காலம் மலையேறிவிட்டது. தொழிலாளர் சட்டத்தைத் திருத்தி அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது எப்படி என்று சிந்திப்பதைவிட, தொழிலாளர்களின் நலனை எந்த வகைகளில் காக்கலாம் என்று சிந்திப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

- எஸ்.பி. சிங், பேராசிரியர், அமித் கே. கிரி, ரூர்க்கி ஐ.ஐ.டி. நிறுவனத்தின் ஆய்வு மாணவர்.

தமிழில்: சாரி, © பிசினஸ் லைன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x