Published : 11 Feb 2022 05:59 AM
Last Updated : 11 Feb 2022 05:59 AM

பொறியாளர்களும் பொறியியல் கட்டுமானமும் 

சி. கோதண்டராமன்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகக் கட்டிடங்கள் இருக்கின்றன. அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பொறியியல் வளர்ச்சியையும் பறைசாற்றுகின்றன. பிரமிப்பான தோற்றங்களில் பல கட்டிடங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், அதே வேளையில் கட்டப்பட்ட குறுகிய காலத்துக்குள் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்வதையும் பார்க்கிறோம். இன்னும் சில கட்டிடங்கள் வசிப்பதற்கான தகுதியை இழந்துவிடும் சூழலையும் பார்க்கிறோம். ஏன் இந்தத் தவறு நடக்கிறது? எனது அனுபவம் ஒன்றிலிருந்து தொடங்குகிறேன்.

உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழாவுக்குச் சென்றிருந்தேன். அவர் பொறியாளர் அல்ல. ஒரு மேற்பார்வையாளர் உதவியுடன் தனது வீட்டைக் கட்டியிருந்தார். ‘என் வீட்டைக் கட்டி நான் பாதிப் பொறியாளர் ஆகிவிட்டேன்’ என்று பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவரை விதிவிலக்காகப் பார்க்கவில்லை.  கட்டிடம் கட்டுவதைப் பொறியியல்ரீதியாகக் கையாள வேண்டும் என்று நம்மில் பலர் கருதுவதில்லை. யாராலும் எளிதாகக் கட்டுனராக முடியும் என்று ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. எனது உறவினரும் இந்தக் கருத்தைத்தான் பிரதிபலிக்கிறார்.

  மேற்கத்திய நாடுகளில் பொறியியல் கோட்பாடுகளை முழுமையாகப் பின்பற்றித்தான் எந்தக் கட்டிடத்தையும் கட்ட முடியும். முதலில் பொறியியல்ரீதியாக வடிவமைக்க வேண்டும். அடுத்து அதை அரசுத் துறைக்குச் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெற்ற வரைபடத்தை அப்படியே பின்பற்ற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டுனர்கள்தான் கட்ட வேண்டும். ஆனால், நம் நாட்டில் அப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் கட்டலாம். எப்படி வேண்டுமானாலும் கட்டலாம். விதிமீறல்களுக்கு எப்படியோ ஒரு பரிகாரம் கிடைத்துவிடும்.

  அப்படியானால், பொறியாளர்களின் மேற்பார்வையில் ஒரு கட்டிடத்தைக் கட்டினால் எல்லாம் சரியாகிவிடுமா? இந்த இடத்தில் எனது இன்னொரு அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் பொறியாளர்கள் பங்கெடுத்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தேன். ஒரு பொறியாளர், அவர் கட்டுனருங்கூட, ஒரு கேள்வி எழுப்பினார். ‘தற்போதுள்ள கட்டிட ஒப்பந்தக்காரர்களில் பெரும்பாலானோர் பொறியியலில் பட்டயப் படிப்போ பட்டப்  படிப்போ படித்திராதவர்கள். அவர்களைக் கட்டிடம் கட்ட எப்படி அனுமதிக்கலாம்?’ என்று கேட்டார். ‘உங்கள் கேள்விக்குப் பதில் தருமுன் நான் சில கேள்விகள் கேட்கிறேன். ஆம் அல்லது இல்லை என்ற ஒரு வார்த்தையில் பதில் தாருங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.

நான் அவரிடம் கேட்ட கேள்விகள்: (1) உங்கள் அலுவலகத்தில் கான்கிரீட் விதி நூல் IS:456 Code Book உள்ளதா? (2) உங்கள் திறன்பேசியில் IS:456ஐ PDF வடிவில் சேமித்துவைத்துள்ளீர்களா? (3) நீங்கள் நவீனத் தொழில்நுட்பம் சம்பந்தமான மாநாடு அல்லது பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்பதுண்டா? (4) தொழில்நுட்ப இதழ்களுக்கு சந்தா கட்டுவதுண்டா?  (5) தொழில்சார் குழுமங்களில் உறுப்பினராக இருக்கிறீர்களா? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் ஒரே பதிலைத்தான் தந்தார்.  அது ‘இல்லை’ என்பதுதான்.    

 பொலிவிழந்த தொழில் 

நான் அந்தப் பொறியாளரிடம் சொன்னேன்: ‘நீங்கள் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு பொறியியல் பட்டம் பெற்றவர். அதற்குப் பிறகு தொடர்ந்து ஒப்பந்தக்காரராகப் பணியாற்றிவருகிறீர்கள். உங்களது தொழில்நுட்பத் திறமையையும் அறிவையும் நிகழ்நிலைப்படுத்தவோ மேம்படுத்தவோ நீங்கள் எவ்வித முயற்சியிலும் ஈடுபடவில்லை. இத்தனை வருடங்களாக உங்களது நேரத்தை உங்களைச் சுற்றியுள்ளவர்களைச் சமாளிப்பதில்தான் செலவிட்டிருப்பீர்கள்.   திறன் குறைந்த தொழிலாளர்கள், நம்பிக்கைக் குறைவான மேற்பார்வையாளர்கள், கண்டிப்பான வியாபாரிகள், எப்போதும் சந்தேகப்படுகிற வாடிக்கையாளர்கள்- இவர்கள்தான் உங்களச் சுற்றி இருக்கிறார்கள்.

கூடவே, தொழில்ரீதியான ஆரோக்கியமற்ற போட்டிகள். இப்படிப் பலவிதமான போராட்டங்களில் உங்களது பொறியாளர் என்கின்ற அடையாளம் காலப்போக்கில் மங்கிப்போய்விட்டிருக்கும். நீங்கள் பொறியியல் பட்டம் பெற்றவராக இருந்தாலும் காலப்போக்கில் பல சமரசங்கள் செய்துகொண்டு நீங்களும் ஒரு சராசரி ஒப்பந்தக்காரராக மாறியிருப்பீர்கள்.  நான் இப்படிக் கூறினால் நீங்கள் அதை மறுப்பீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்தார். அந்தப் புன்னகை  பல கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தியது. ஆம், பொறியாளர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்வதில்லை. பொறியியல் நடைமுறைகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும், இருக்க வேண்டிய ஒன்று.

அப்படி இல்லையென்றால் பொருளாதார மற்றும் சமுதாய  வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். பொறியாளர்கள் நேரடியாகக் கட்டினாலும் பொறியியல்ரீதியான சமரசங்கள் காலத்தின் வற்புறுத்தலாக மாறியுள்ளது. ஆக, இந்தக்  கட்டிடத் தொழில் பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் பொலிவிழந்து தனது  உண்மையான பொறியியல் அடையாளத்தைத் தொலைத்துவிட்டது. இந்தச் சூழல்தான் மிகக் குறுகிய காலத்திலேயே கட்டிடங்கள் பலவித இடர்பாடுகளை சந்திக்க நேருகிறது.  

 பொறியியல் கோட்பாடு ஏன்?

  ஒரு வீடு அல்லது ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தைப் பொறியியல் கோட்பாடுகள் தெரியாமல் கட்டிவிடலாம். சிற்சில கோட்பாடுகளை மீறினால் கூட அவை நிலைத்து நிற்கவும்கூடும். அப்படியிருக்க பொறியியல் கோட்பாடுகளின் அவசியம் என்ன?  அவற்றை ஏன் பின்பற்ற வேண்டும்? 

சமீபத்தில் புதுவையில் குடிசை மாற்றுவாரியம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளில் 12 முதல் 15   ஆண்டுகளே ஆன நான்கு குடியிருப்புகள் பாதுகாப்பற்றவை என்று அறிவிக்கப்பட்டு மக்கள் மாற்றிடங்களுக்குச் சென்றுவிட்டனர். பத்து வருடங்களுக்கு மேல் பாதுகாப்பாக இருந்தவை எப்படி ஆபத்தானவையாக மாறின என்று தெரிந்துகொள்வது முக்கியம். பளுவைத் தாங்கும் திறன் இருந்தாலும் அந்தக் கட்டிடங்களால் ஈரக் காற்று, மழை, தட்பவெட்ப மாற்றம் முதலான இயற்கையின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியவில்லை. அதனால் அவை மிகக் குறுகிய காலத்தில் தோற்றுவிட்டன. திருவொற்றியூர் அருவாக்குளம் குடியிருப்பு இப்படிப்பட்ட நிலையை 28 வருடங்களில் அடைந்துவிட்டது.

28 வருடம் என்பதுகூட ஒரு கான்கிரீட் கட்டிடத்துக்குக் குறுகிய காலம்தான்.   ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.  பூஜ் பூகம்பத்தில் (குஜராத், 2001) சுமார் ஆறு லட்சம் மக்கள் வீட்டை இழந்து வீதியில் நின்றார்கள். உயிரிழப்பு 20,000-ஐத் தாண்டியது, ஒண்ணே முக்கால் லட்சம் பேர் படுகாயம் அடைந்தனர். பூஜ் நகரத்தின் பொது மருத்துவமனை சேதமடைந்தது.  992 பள்ளிகள் சேதமடைந்தன. சேதமடைந்த கட்டிடங்களின் வயது என்ன என்பது இங்கு முக்கியமில்லை. இந்தக் கட்டிடங்களுக்குப் பளுவைத் தாங்கும் சக்தி இருந்தாலும், பூகம்பத்தால் ஏற்படும் வேறுவிதமான தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் சரிந்துவிட்டன. 

பூஜ் பூகம்பம் நமக்கு ஒரு முக்கியத் தகவலை விட்டுச்சென்றது.  பூஜ் நகரத்தில் பொறியியல் கோட்பாடுகளுடன் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் ஓரளவு சேதம் அடைந்தாலும், அவை தகர்ந்து விழவில்லை. அதில் இருந்தவர்கள் பலியாகவில்லை.  பொறியியல் விதிகளைப் புறக்கணித்த கட்டிடங்கள்தாம் பெரும் உயிரிழப்புக்குக் காரணமாயிற்று. ஒரே கட்டிடத்தை இந்தியாவின் மூன்று பகுதிகளில் கட்டுவதாக எண்ணிக்கொள்வோம். ஒன்று கடற்கரை நகரம், இன்னொன்று மத்தியப் பகுதி, மூன்றாவது வட எல்லையில். பயன்பாட்டின்படி அவை ஒரே கட்டிடமாக இருந்தாலும்  பொறியியல் கண்ணோட்டத்தில் மூன்று வெவ்வேறு கட்டுமான நுணுக்கங்களைக் கொண்டவை. 

கட்டிடங்களை வடிவமைக்கும்போது பளுவைத் தாங்குவதற்காக மட்டுமல்ல, அந்தப் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை இவற்றின்  தாக்குதலுக்கு எதிராகவும் வடிவமைக்க வேண்டும். பொறியியல் கோட்பாடுகளுடன் கட்டப்படும் கட்டிடங்கள் இவற்றைக் கணக்கில் கொள்ளும். ஆகவே, நமது பொறியாளர்கள் தங்களை நிகழ்நிலைப்படுத்திக்கொள்வதை ஊக்குவிப்பதும், பொறியியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப கட்டிடங்களைக் கட்டுவதை வற்புறுத்துவதும் நாம் நீடித்து நிலையாக வளர வழிவகுக்கும்.

- சி. கோதண்டராமன், புதுவை பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர். தொடர்புக்கு: skramane@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x