Published : 20 Apr 2016 08:55 AM
Last Updated : 20 Apr 2016 08:55 AM

கடலோடிகள் கண் வழியே கடல் வளர்ச்சியைப் பாருங்கள்!

இந்தியக் கடல் வளம் என்பது ஏழையின் காலடியின் கீழ் இருக்கும் தங்கச்சுரங்கம். அடுத்தடுத்து ஆட்சியில் அமருபவர்கள் கடல்சார் கருத்தரங்குகளிலும், நிகழ்ச்சிகளிலும் பேசுகையில் கடல் வாணிபம் தொடர்பாகப் பேசுவதோடு சரி. இதுவரை கடல் வளத்தை எப்படி நாட்டின் பொருளாதார மீட்சிக்குப் பெரிய வகையில் பயன்படுத்துவது என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத விஷயமாகவே இருந்திருக்கிறது.

மும்பையில் அண்மையில் நடந்த உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடல்வழிப் பயணம் மற்றும் வாணிபப்பெருக்குத் திட்டம் தொடர்பாகக் குறிப்பிடுகையில், கடல் வள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். தேர்தல் சமயங்களிலும் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னரும் கடல் வளங்களைப் பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மோடிக்குக் கொடுத்த யோசனைகள் இப்போது ஞாபகத்துக்கு வருகின்றன. கடலோர மாநிலமான குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி இந்த விஷயத்தில் தன்னுடைய அனுபவங்களைப் பெரிய அளவில் பயன்படுத்த முடியும்.

இந்தியாவின் மொத்த கடற்கரை நீளம் 7,500 கி.மீ. மேற்கிலும் கிழக்கிலும் முக்கியமான கடல்வழிப் போக்குவரத்தில் பல இந்தியத் துறைமுக நகரங்கள் இருக்கின்றன என்பது நமக்குள்ள பெரிய புவிசார் சிறப்புகளில் ஒன்று. கப்பல் போக்குவரத்து, கடல் வணிகம் மட்டுமல்லாமல் ராணுவ ரீதியாகவும் இந்தியக் கடல்பரப்பும் துறைமுகங்களும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை. எனினும் கடல் சார் வணிகம் நம்முடைய பொருளாதாரத்துக்கு அளிக்கும் பங்களிப்பு சொற்பம்.

இப்போது சமுத்திர மாலை என்று பொருள்படும் ‘சாகர் மாலா திட்ட’த்தை மத்திய அரசு வகுத்திருக்கிறது. கடல்துறை அடித்தளக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது முக்கியம் என்பது உணரப்பட்டிருக்கிறது. இத்திட்டம் துறைமுகத்தைச் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மிகப் பெரிய கப்பல்கள் எளிதில் வந்து செல்ல ஏதுவாகத் துறைகளை அமைப்பது, தகவல் தொடர்பு, ரயில் பாதை இணைப்பு உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது, சரக்குகளை அதிக அளவில் கையாள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, துறைமுக நகரைப் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வளப்படுத்துவது, துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் வரியற்ற வர்த்தக மண்டலங்களையும் உற்பத்திப் பிரிவுகளையும் நிறுவுவது, ஏற்றுமதி பெருக திட்டங்களை ஒருமுகப்படுத்துவது, பெரிய அளவில் சரக்குகளைக் கையாள்வதற்கேற்ப கிட்டங்கிகளை நிறுவுவது, தொழில் பூங்காக்களை நிறுவுவது, கடல் சார்ந்த பொருள்களின் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டுச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவது, சரக்குப் போக்குவரத்தை அதிகப்படுத்த முனையங்களை ஏற்படுத்துவது என்று பல்வேறு இலக்குகளை இத்திட்டம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. கூடவே கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பெரிய அளவில் கவனம் அளிக்கிறது.

இந்தியக் கடல்பரப்பில் அன்னியர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கும் இந்தியக் கப்பல்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு அளிப் பதற்கும் கடற்படை இப்போது முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது. கடல் பரப்பில் ராணுவரீதியிலான ஒத்துழைப்பை அமெரிக்காவுடனும் இந்தியா மேற்கொண்டுவருவதை நம்முடைய சமீபத்திய நகர்வுகள் சொல்கின்றன.

எல்லாம் சரிதான். ஆனால், கடலைக் கண்ணில் வைத்துத் திட்டமிடும் எந்த இலக்கிலும் கடலோடிகளின் கண் இந்த அரசுக்கு அவசியம். பல இடங்களில் கடலோடிகள் தரப்பிலிருந்து இது தொடர்பில் வரும் கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. கடலோடிகள் வளர்ச்சியும் பாதுகாப்பும் கடல்சார் வணிகத்தின் வளர்ச்சியும், பாதுகாப்பும் வேறு வேறு அல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x