Last Updated : 19 Apr, 2016 09:10 AM

 

Published : 19 Apr 2016 09:10 AM
Last Updated : 19 Apr 2016 09:10 AM

மக்களாட்சியேதான் வேணுமா?

முதல்வர் வானூர்தியில் பறந்தால்கூட, சாலைப் போக்குவரத்தை நிறுத்துகிற நாடு தமிழ்நாடு

ஆப்பிரிக்கக் கண்டத்தில் ‘காலக்கேயம்’ என்றொரு நாடு இருக்கிறது (வழக்கம்போலக் கற்பனைதான்). அதன் மன்னர் கடமுடா ‘நோட்டா’. ‘திராவிடநாடு’ பத்திரிகைவாயிலாகத் தம்பிமார்களுக்கு அறிஞர் அண்ணா கடிதம் எழுதியதைப் போல, வெளியுலகம் தெரியாத தன் மனைவிமார்களுக்கு ‘அரசிதழ்’ வாயிலாகக் கடிதம் எழுதுவது இவருடைய வழக்கம். எழுதுவார் என்பதைவிட, அவர் சொல்லச் சொல்ல.. மன்னரின் முப்பதாவது மனைவி முப்பிடாதி தட்டச்சு செய்வார் என்பதே சரி. அதை சிரமப்பட்டு மொழிபெயர்த்திருக்கிறேன்.

அன்பு மனைவியருக்கு,

நம் நாட்டிலே ‘காட்டாட்சி’ நடக்கிறது என்றும், ‘மக்களாட்சி’ மலர வேண்டும் என்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் சில புரட்சியாளர்கள். மன்னராட்சியைக் காட்டிலும் மக்களாட்சியே சிறந்தது என்று நீங்களும் விவரம் கெட்டுப்போய்ச் சிந்திப்பதாக அறிகிறேன். மன்னராட்சியின் மகத்துவத்தைச் சுட்டிக்காட்டவே இந்த மடல்.

உலக வரைபடத்தை உற்றுநோக்குங்கள், நம் நாட்டுக்கும் கீழே (கிழக்கே)அதலபாதாளத்தில் ஒரு நாடு தொங்கிக்கொண்டிருக்கிறதல்லவா அதுதான் இந்தியா. அந்நாட்டின் அடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு. அங்கே மக்களாட்சி நடக்கிறது. மக்களாட்சி என்றதும், மக்கள் எல்லோரும் ‘முடிசூடா மன்னர்’களாக வலம் வருகிறார்களென நீங்கள் கனவு காணலாம்.

மக்கள் பங்கு

ஆட்சியாளர்களைத் தேர்வுசெய்வதில் மக்களுக்குக் ‘கொஞ்சம்’ பங்கிருக்கிறது. ஆதலால், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மவுசு இருக்கிறது. அதைத்தான் மக்களாட்சி என்று புரூடாவிடுகிறார்கள். உண்மையில், மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களைப் பார்த்து, கேள்விகூடக் கேட்க முடியாது. வென்ற மறுநாளே, “என்னைக் கேள்வி கேட்க நீ யார்?” என்ற இறுமாப்பு வந்துவிடுகிறது ஆட்சியாளர்களுக்கு.

மன்னனாகிய என்னையாவது வேட்டைக்குப் போகும் வழியிலோ, நகர்வலம் வரும்போதோ மக்கள் பார்க்கலாம். அங்கெல்லாம் அதற்கு வாய்ப்பே கிடையாது. முதல்வர் வானூர்தியில் பறந்தால்கூட, சாலைப் போக்குவரத்தை நிறுத்துகிற நாடு அது.

சீனப் பயணி யுவான் சுவாங் போல, நம் நாட்டுப் பயணிகளான ஊப்ஸ், நாத்தம் ஆகியோரை அந்நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக அனுப்பியிருந்ததை நீங்கள் அறிவீர்கள். ஊழல் மலிந்த அந்நாட்டில் அவர்கள் நுழைந்தபோதே, சென்னை விமான நிலையக் கண்ணாடி உடைந்துவிழுந்திருக்கிறது. “பயப்படாதீர்கள். இங்கே இதெல்லாம் சகஜம். இது அறுநூறாவது முறை” என்று இயல்பாகச் சொல்லியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

கோட்டையில் ஒரு மாதகாலம் காத்திருந்தும், நம் பயணிகளால் முதல்வரைப் பார்க்க முடியவில்லை. கடைசியில், அவர் கொடநாடு கோடைவாசஸ்தலத்தில் ஓய்வெடுப்பதை அறிந்து அங்கே போயிருக்கிறார்கள். யாரெனக்கேட்டதால் இவர்கள் OPS, Natham என ஆங்கிலத்தில் பெயரெழுதிக் கொடுத்திருக்கிறார்கள். உள்ளே போன வேகத்தில் தெறித்து ஓடிவந்த உதவியாளர், “இந்தப் பேர் வெச்சிருக்கிறவங்கள எல்லாம் சி.எம் பார்ப்பதில்லை” என்று விரட்டியடித்துவிட்டாராம்.

புளுகோ… புளுகு!

இங்கே எப்படி ஒருவன் தன் தேவைக்காக அரசிடம் கெஞ்ச வேண்டுமோ, அங்கேயும் அப்படியே. மன்னர்களாவது ‘முடியும், முடியாது’ என்று உடனே சொல்லிவிடுவோம். அவர்கள் ‘பரிசீலிக்கிறோம்’, ‘ஆய்வில் இருக்கிறது’, ‘நிதிப் பற்றாக்குறை’ என்று புளுகுவார்கள். அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து திட்டத்தை நிறைவேற்றவைத்த பிறகு, உரிமை கொண்டாடுவதற்காக இரண்டு, மூன்று பேர் வந்துவிடுவார்கள். ‘எங்கள் ஆட்சிக் காலத்தில்தான் அடிக்கல் நாட்டினோம்’, ‘என் ஆட்சியில்தான் திறந்துவைத்தேன்’ என்று மல்லுக்கட்டுவார்கள்.

இப்போது அங்கே தேர்தல் காலம். இந்தியாவிலேயே அதிகமான கட்சிகளைக்கொண்ட மாநிலம் அல்லவா? திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, மதேமுதிக, இ.கம்யூ, மா.கம்யூ, இகுக, இஜக, பாஜக, பாமக, சமக, நாமக, காமக, மமக, மூமுக,புதிய தமிழகம், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிப் புலிகள், தேவர் புலிப்படை, சமூக சமத்துவப்படை, பெமக, கொஇபே என்று ஒரேமாதிரி பெயரிலேயே பல கட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கொள்கை இருக்கிறதாம். சில கட்சிகளில் அப்படியொரு வஸ்து இல்லாததால், தலைவர்களை வைத்தும், கொடியை வைத்தும் மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

தலைகீழ் காங்கிரஸ்

காங்கிரஸ் போன்ற பழைய கட்சிகள் சிலவற்றில் ஆரம்பத்தில் கொள்கைகள் இருந்திருக்கின்றன. ‘கரகாட்டக்காரன்’ என்கிற உலக சினிமாவை யூடியூப்பில் பார்த்தோமே நினைவிருக்கிறதா? பழுதடைந்த காரைத் தள்ளும் காட்சியில், “பெட்ரோல் வெல ஏறிப்போச்சுன்னு மண்ணெண்ணெய் ஊத்துனேன். மண்ணெண்ணெய் வெல ஏறிப்போச்சுன்னு குரூடாயில் ஊத்துனேன். இப்ப எந்த எண்ணெயில ஓடுதுன்னு அதுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது” என்று வசனம் வருமே.. அதைப் போல் ஆகிவிட்டது அக்கட்சிகள். என்ன கொள்கையில் கட்சி நடக்கிறது என்ற அவர்களுக்கே விளங்கவில்லை. புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிக்கும் கொள்கைக்காக ஆரம்பத்தில் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கமும் தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு ரொம்பவே மாறிவிட்டது.

பகுத்தறிவு, சமூகநீதி, தனித் திராவிட நாடு போன்ற கொள்கைகளுடன் தொடங்கப்பட்ட திமுக, இப்போது அத்தனையையும் உதிர்த்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பு போலாகிவிட்டது. அதிமுகவின் கொள்கை என்னவென்று விசாரித்தேன். அது அக்கட்சியைத் தொடங்கிய எம்ஜிஆருக்கே தெரியாதாம். அதனால்தானோ என்னவோ, அதே பாணியில் தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கிறார்கள் போலும். மதிமுக என்றால், மறுபடியும் திமுக என்கிறார்கள்.

மதச்சார்பற்ற அணி?

அப்படிப் பார்த்தால் பாஜக மட்டும்தான் தன் கொள்கையில் (இந்துத்துவா) உறுதியாக இருக்கிறது. இந்தியாவையே ஆண்டாலும், தமிழ்நாட்டில் தீண்ட நாதியில்லலாமல் கிடக்கிறது அக்கட்சி. முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்றவையும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களுக்கான கட்சிகள்தான். ஆனால், அவை அங்கம் வகிக்கும் அணியை ‘மதச்சார்பற்ற அணி’என்றழைக்கிறார்கள் கூட்டணித் தலைவர்கள்.

நேற்றுவரை ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருந் தவர்கள், பழைய பகையையெல்லாம் மூட்டை கட்டிவைத்து விட்டு மதச்சார்பற்ற அணி, முற்போக்கு அணி, மக்கள் அணி என்று பொதுப் பெயரில் ஒன்றுகூடிவிட்டார்கள். துணைக்கு ஆளிருக்கும் தைரியத்தில் எதிராளியை இன்னும் மோசமாகத் திட்டுகிறார்கள்.

கூட்டணியையாவது சகித்துக்கொள்ளலாம். கொள்கைக்காக உயிரையும் கொடுப்பேன் என்று முழங்கியவர்கள், திடீரெனத் தன் கொள்கைக்கு எந்தத் தொடர்பும் இல்லாத மாற்றுக் கட்சியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். கொள்கைப் பரப்புச் செயலாளர்களே பணத்துக்கும், காருக்கும் விலைபோய் இன்னொரு கட்சியில் சேர்வது அங்கே அடிக்கடி நடக்கிறது.

மே 16-ம் தேதி அங்கே தேர்தல். ஓட்டு மட்டும்தான் மக்கள் போடுவார்கள். வேட்பாளர்களை முடிவுசெய்வது கட்சித் தலைமைதான்.

முதல் புகலிடம்

ஒவ்வொருதொகுதியிலும் எந்தச் சாதியினர் அதிகம் இருக்கிறார்களோ, அந்தச் சாதியினரையே பெரும்பாலான கட்சிகள் வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றன. பிரச்சாரக் கூட்டத்தில், தலைவர்கள் இருக்கும் மேடையைக் குளுகுளுவென வைத்திருப்பார்கள். மக்களோ வெயிலில் சுருண்டுவிழுந்து சாவார்கள். இருந்தாலும், யார் நிறைய பொய் சொல்கிறார்களோ அவர்கள் வெற்றிபெறுவார்கள். முன்பெல்லாம், வென்றவர்கள் ஒன்றுகூடி தங்களை வேட்பாளராக அறிவித்தவரையே ‘ஜனநாயக முறை’ப்படி முதல்வராகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இம்முறை தேர்தலுக்கு முன்பே ‘முதல்வர்’களைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.

இப்போது சொல்லுங்கள்.. மன்னராட்சியைவிட மக்களாட்சி சிறந்ததா? சித்தாந்த அடிப்படையில் பார்த்தால், மன்னராட்சியைவிட மக்களாட்சி சிறந்ததாகத் தோன்றும். செயல்பாட்டளவில் மக்களாட்சி மோசமானது. ‘அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்’ என்பார்கள். அந்நாட்டைப் பொறுத்தவரையில் அதுதான் முதல் புகலிடமோ என்றுகூடத் தோன்றுகிறது.

மக்களாட்சி வந்தால், நம் நாடு எப்படியிருக்கும் என்று சொல்லிவிடுகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம். சாதிக்கொரு கட்சி தொடங்கி, நாட்டின் அமைதியைக் கெடுப்பார்கள். கட்சிக்கொரு டிவி தொடங்கி செய்தி என்ற பெயரில் வீட்டின் அமைதியையும் கெடுப்பார்கள். வெளிநாட்டு வியாபாரிகளும், முதலாளிகளும்தான் அரசாங்கத்தை இயக்குவார்கள். சுரண்டலும், ஆடம்பரமும் என்னைப் போன்ற மன்னர்களின் உரிமை. அவர்களோ அதைப் பரவலாக்குவார்கள். அரசு ஊழியர்களையும் லஞ்ச, ஊழலுக்குப் பழக்கப்படுத்துவார்கள். நீதியைக்கூட விலை பேசுவார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், நம் சொத்தை எல்லாம் பறித்துவிட்டு நடுரோட்டில் நிறுத்திவிடுவார்கள்.

இப்போது சொல்லுங்கள், பட்டமகிஷிகளே.. மக்களாட்சியேதான் வேணுமா?

தமிழில்: கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x