Last Updated : 31 Jan, 2022 07:34 AM

Published : 31 Jan 2022 07:34 AM
Last Updated : 31 Jan 2022 07:34 AM

‘பாகிஸ்தான் – ஜின்னா’ உத்தி: பாஜக வெற்றிக்கு உதவுமா?

நாட்டின் அனைத்து மாநிலத்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது, உத்தர பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல். அதிக தொகுதிகளைக் கொண்டதால் இது, மக்களவைத் தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் ஏழு கட்டங்களாக பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை நடைபெறுகிறது.

உ.பி.யின் 403 தொகுதிகளில் ஆட்சியமைக்கத் தேவையான 202 இடங்களையும் தாண்டி 312 இடங்களில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற பாஜக தன் ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரம் காட்டுகிறது. கரோனா பரவலால் நேரடிப் பிரச்சாரத் தடை, அப்னா தளம், நிஷாத் பார்ட்டி ஆகிய கூட்டணிக் கட்சிகளின் பலன், மத்தியில் ஏழு ஆண்டுகள், மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி என்று பல சாதகமான அம்சங்கள் பாஜகவுக்கு இருக்கின்றன. எனினும், கரோனா ஊரடங்கில் மத்திய, மாநில பாஜக அரசுகளின் நடவடிக்கைகள், அவற்றின் தாக்கத்தாலான வேலை இழப்புகள், விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், ஆளும் கட்சி மீதான எதிர்ப்புணர்வு, இந்துத்துவ நடவடிக்கைகள் போன்றவை எதிராக உள்ளன. கடந்த தேர்தலில் வீசிய மோடி அலை இந்த முறை சற்று ஓய்ந்துள்ளது.

தனது மத்திய, மாநில ஆட்சிகளின் சாதனைகளை பாஜக முன்னிறுத்துவதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள இணையவழி பிரச்சாரத்தில் பாஜக மட்டுமே அதிக வலுப்பெற்றுள்ளது. இதன் பிறகும், பாஜக வழக்கம்போல் தனது இந்துத்துவச் செயல்பாடுகளையே முக்கிய ஆயுதமாக்கிவருகிறது.

பாஜகவின் இந்துத்துவப் பிரச்சாரத்துக்கு இதுவரையிலும் ராமர் கோயில் பிரச்சினை உதவிவந்தது. இதன் பேரில் இந்து வாக்குகளை ஒன்றிணைத்து, மதநல்லிணக்க வாக்குகளைப் பிரித்து பாஜக பலனடைந்தது. நவம்பர் 2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அதற்குத் தீர்வு எட்டப்பட்டுவிட, அடுத்ததாக மதுரா பிரச்சினையை பாஜக எழுப்ப முயன்றது. அங்குள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகிலுள்ள கியான்வாபி மசூதி தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் வலுப்பெறவில்லை. இதற்கு 1991-ல் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட புனிதத் தலப் பாதுகாப்புகள் சட்டம் தடையாகவும் உள்ளது. இதனால், வேறுவழியின்றி பாகிஸ்தானை பாஜக உதவிக்கு அழைத்துள்ளது.

இதற்கு உதவியாக, தேர்தலுக்கு முன்பாக ஒரு ஆங்கில ஏட்டுக்கு அளித்த பேட்டியில் சமாஜ்வாதித் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அகிலேஷ் யாதவ், பாகிஸ்தானைவிட சீனாதான் நம் நாட்டின் முதல் எதிரி எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட பாஜக, சமாஜ்வாதி ஒரு பாகிஸ்தான் ஆதரவுக் கட்சி என்று முழக்கமிடத் தொடங்கியது. மறைந்த ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியதையே தான் எடுத்துரைத்ததாக அகிலேஷ் கூறியது எடுபடவில்லை.

இத்துடன், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய முகம்மது அலி ஜின்னா விவகாரமும் இணைந்துகொண்டது. கூடவே, ஜின்னாவுக்கு ஆதரவாக மற்றொரு சமயத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியதையும் பாஜக கையில் எடுத்துள்ளது. இதனால், வழக்கமாகத் தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ‘பாகிஸ்தான்-ஜின்னா’ விவகாரத்தை பாஜக விஸ்வரூபமாக்கிவருகிறது.

இதற்கு, பாஜகவினர் இடையே மட்டும் ஆதரவு கிடைத்தாலும் உபியின் நடுநிலை வாக்காளர்களும், முஸ்லிம்களும் இந்தப் பிரச்சாரத்தை விரும்பவில்லை. பாகிஸ்தான்-ஜின்னாவை முன்னிறுத்தும் பிரச்சாரமே பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. இதற்கு ஏதுவாக, எதிர்க் கட்சிகளில் வலுப்பெற்றுவிட்ட சமாஜ்வாதிக்கு உ.பி.யில் ஆதரவு பெருகத் தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு முன்பாக ஆளும் கட்சியிலிருந்து விலகும் முக்கியத் தலைவர்கள் சமாஜ்வாதியில் ஐக்கியமாவதுதான் இதற்குச் சான்று. பாஜகவின் மூன்று முக்கிய மாநில அமைச்சர்களான சுவாமி பிரசாத் மவுரியா, தாராசிங் சவுகான், தரம்சிங் செய்னி உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர். அகிலேஷுடனான மோதலால் தனிக்கட்சி தொடங்கிய அவருடைய சித்தப்பா ஷிவ்பால்சிங் யாதவ் மீண்டும் சமாஜ்வாதியில் ஐக்கியமாகிவிட்டார்.

உபியின் கிழக்குப் பகுதியில் அதிகமுள்ள ராஜ்பர் எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியையும் மேற்குப் பகுதியில் ஜாட் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியையும் தனது கூட்டணியில் சேர்த்துள்ளார் அகிலேஷ். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களில் பகுஜன் சமாஜின் (பிஎஸ்பி) மாயாவதியும், காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா காந்தியும், உபியின் வலுவான சிறிய கட்சிகளைத் தங்கள் கூட்டணியில் இணைப்பதில் பின்தங்கிவிட்டனர். இதனால், இவ்விரண்டு கட்சிகளும் உபி தேர்தல் களத்தில் முன்வரிசையில் இல்லை என்பது போன்ற உணர்வு எழுகிறது.

பிஎஸ்பியுடனோ காங்கிரஸுடனோ, அகிலேஷ் கூட்டணி அமைத்திருக்கலாமே எனவும் உ.பி.க்கு வெளியே ஒரு கேள்வி எழுகிறது. 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடனும், பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பியுடனும் அகிலேஷ் கைகோத்திருந்தார். இதில், சமாஜ்வாதியின் பலன் காங்கிரஸுக்கும், பிஎஸ்பிக்கும் கிடைத்தனவே தவிர, அவ்விரு கட்சிகளின் வாக்குகள் அகிலேஷுக்குக் கிடைக்கவில்லை. எனவே, இந்த முக்கியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பலனில்லை என அகிலேஷ் உணர்ந்து நிரந்தரமாக விலகிக்கொண்டார். எனினும், இப்போது, அவ்விரண்டு கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்கள் சமாஜ்வாதிக்கு மறைமுகமாக உதவுகின்றன.

பாஜகவுக்கு எதிராகக் கடுமையான பிரச்சாரம் செய்கிறார் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர் பிரியங்கா. இதற்கு செவிசாய்த்து பாஜகவுக்கு எதிராகத் திரும்பும் வாக்குகள் காங்கிரஸுக்குக் கிடைத்தால் அந்த வாக்குகள் ஆட்சி அமைக்க உதவாமல் வீணாகப் போய்விடுமோ என்ற அச்சம் உ.பி.வாசிகளிடம் எழுந்துள்ளது. அதேபோல், பாஜகவைவிட சமாஜ்வாதியையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சிப்பதால் சந்தேகத்துக்குரியவராகப் பார்க்கப்படுகிறார் மாயாவதி. இதனால், மாயாவதி கட்சிக்கு எதிரானவர்களுடன், காங்கிரஸுக்கு வாக்களித்துத் தங்கள் வாக்குகளை வீணாக்க விரும்பாதவர்களின் வாக்குகளும் சமாஜ்வாதிக்குக் கிடைக்கலாம். இடையில், பாஜகவுக்குச் சாதகமாக எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பவர்களும் இருக்கிறார்கள். அசாதுதீன் ஒவைசியின் கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் களத்தில் இருக்கின்றன. பாஜக கூட்டணியில் பிஹாரை ஆளும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் சுமார் 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்தச் சூழலில், பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையே மட்டும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. சமாஜ்வாதியின் வளர்ச்சி தவிர்க்க முடியாததாகிவிட்டது. தொங்கு சட்டமன்றத்துக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஒருவேளை அதற்கான சூழல் ஏற்பட்டால், அது பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும். எனினும், பிப்ரவரி 10 முதல் தொடங்கும் முதல்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின் பிரச்சாரங்கள் திசைமாறினால் அவற்றின் முடிவுகளும் மாறலாம்!

- ஆர்.ஷபிமுன்னா. தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x