Published : 28 Jan 2022 06:41 AM
Last Updated : 28 Jan 2022 06:41 AM

காடு அதிகரிப்பு: உண்மையை மறைக்கும் கணக்கெடுப்பு

இந்தியக் காடுகளின் நிலை குறித்த அறிக்கையை (ISFR) 2021, இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு (FSI) ஜனவரி இரண்டாவது வாரம் வெளியிட்டது. இந்தியக் காடுகள் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்த அறிக்கை 1987 முதல் வெளியிடப்பட்டுவருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி 2,261 ச.கி.மீ. காடு-மரஅடர்த்தி அதிகரித்திருக்கிறது. இந்தியப் புவியியல் பரப்பில் 24% காடு என்கிறது இந்த அறிக்கை.

இந்தக் கணக்கெடுப்பில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் காட்டுப் பரப்பு அதிகரித்துக்கொண்டே வருவதாக ஆரோக்கியமான சித்திரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அழகானதொரு சித்திரத்தைத் தீட்ட இந்த அறிக்கை முயன்றாலும் காட்டுப் பரப்பு அதிகரித்திருப்பதற்குக் களத்தில் எந்த ஆதாரமும் இல்லை. காடு என்றால் என்ன என்பதற்குக் காடு கணக்கெடுப்பு அமைப்பு வைத்துள்ள தவறான-திரிபான வரையறையே பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்கிறார் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த காட்டுயிர் அறிவியலர் எம்.டி.மதுசூதன்.

ஒரு ஹெக்டேர் நிலப்பகுதியில் வெறும் 10% மரங்கள் இருந்தாலே, அது பசுமைப்பரப்பு என்கிறது இந்த அமைப்பு. இந்தப் புதிய வரையறை அடிப்படையிலேயே காடு-மரஅடர்த்தி அதிகமுள்ள பகுதிகளை பசுமைப்பரப்பு என்று அடையாளப்படுத்தி இந்த அமைப்பு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. புதிய கணக்கெடுப்பு அறிக்கையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி மதுசூதன் உள்ளிட்ட காட்டுயிர் அறிவியலர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். சிலவற்றைப் பார்ப்போம்.

தேயிலையும் தென்னையும் காடுகள்?

இந்தியாவில் மிக மோசமாக காடு அழிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று அசாமில் உள்ள சோனித்பூர். ஆனால், இப்பகுதியில் காட்டுப் பரப்பு அதிகரித்துவருவதாகக் காடுகளின் நிலை குறித்த அறிக்கை தெரிவிக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? சோனித்பூரின் ரங்கபரா பகுதியைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைக் காடுகள் என இந்த அறிக்கை காட்டியுள்ளது.

சோனித்பூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வால்பாறை பகுதியிலும் தேயிலைத் தோட்டங்கள் காடுகளாகக் காட்டப்பட்டுள்ளன; பொள்ளாச்சி தென்னந்தோப்புகளும் காடுகளாகக் காட்டப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்னால் விலைமதிப்பற்ற பசுமைமாறா ஈரப்பதக் காடுகள் வால்பாறையில் துவம்சம் செய்யப்பட்டுத் தேயிலை, காபித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. 150 ஆண்டுகள் கழித்து அதே தேயிலை, காபித் தோட்டங்கள் காடுகளாகக் கணக்கெடுக்கப்படுவது வேடிக்கை!

இந்தியாவில் 90%-ம் அதிகமாகக் காடு இருக்கும் பகுதியாக லட்சத்தீவு கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தீவுகளில் இருப்பவை பெருமளவு தென்னை மரங்களே. அரசுக் கணக்குப்படி ‘அடர்த்தியான அந்தக் காட்டுப் பகுதி’யில் ச.கி.மீ.க்குத் தலா 2,000 மக்களும் வசித்துவருவதுதான் ஆச்சரியம். இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ஒன்றான கொல்கத்தாவில் மூச்சு முட்டும் கட்டிடங்களுக்கு மத்தியில் இருக்கும் 10-15 மரங்களும் காடாகவே கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

அதேபோல், டெல்லியில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டுவரும் பகுதிக்கு அருகே மத்திய அரசின் அலுவலகக் கட்டிடங்கள் அடங்கியுள்ள பகுதியும்கூட காடாகவே காட்டப்பட்டுள்ளது. நம் நாட்டு உயிரினப் பன்மைக்கு எதிரியாகக் கருதப்படும் சீமைக் கருவேல ஆக்கிரமிப்புப் பகுதியையும் காடாகவே இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு காட்டியுள்ளது. ராஜஸ்தானில் கடுமையாக வறண்ட பாலைவனப் பகுதியான ஜெய்சால்மரிலும்கூடக் காடு இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளதுதான் உச்சம்.

இந்தியாவில் காடுகளை அழிக்கும் செயல்பாடு 1980-களிலிருந்து சீராக அதிகரித்துவருகிறது. அதேநேரம் காட்டின் பரப்போ புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவருவதாக அறிக்கை கூறுகிறது. காடுகளின் பரப்பு குறைவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எந்தப் பின்னணியும் இல்லாமல் காட்டின் பரப்பு அதிகரிப்பதாக முன்வைக்கப்படும் சித்திரம் எப்படி நம்பகமான ஒன்றாக இருக்க முடியும்?

ஆதாரமற்ற சித்திரம்

மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு, தனது மதிப்பீடுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுகிறதே ஒழிய, எந்தக் காலத்திலும் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்திய செயற்கைக்கோள் வரைபடங்களை வெளியிட்டதே இல்லை. வரைபடங்கள்தானே உண்மையை எடுத்துரைக்கும்? தனது வரைபடங்கள் யாருக்காவது தேவையென்றால், ஒரு வரைபடக் கட்டத்தை ரூ.2,000-க்கு அந்த அமைப்பு விற்பனை செய்கிறது. இப்படி மொத்த வரைபடங்களையும் யாராவது வாங்க நினைத்தால் ரூ.50 லட்சத்துக்குக் குறையாமல் தேவை.

“இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு தனது அறிக்கைகளைச் சரிபார்ப்பதற்கான எந்த ஆதாரத்தையும் பொதுவெளியில் வெளியிடுவதில்லை. அப்படி ஆதாரங்கள் வெளியிடப்பட்டால், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை காட்டுப் பரப்பு அதிகரித்துவருகிறது என்று போலியான சித்திரத்தைக் கட்டியெழுப்பும் அந்த அமைப்பின் முயற்சி படாரென்று உடைந்துவிடும். ஒரு காலத்தில், புலிகளின் கால்தடத்தை அடிப்படையாகக் கொண்டு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகக் கூறப்பட்டு, பிறகு அது பொய் என்று நிரூபணமானது. அதைப் போன்றதுதான் காட்டுப் பரப்பு அதிகரித்துவருகிறது என்கிற கணக்கெடுப்பும்” என்கிறார் எம்.டி. மதுசூதன்.

நோக்கம் என்ன?

சரி, தவறான புரிதலின் காரணமாகத் தோட்டங்களையும் தோப்புகளையும் இந்தியக் காடு கணக்கெடுப்பு அமைப்பு காடு என வகைப்படுத்துகிறதோ என்கிற கேள்வி எழலாம். அப்படிச் சொல்ல முடியாது. மற்றொரு அரசு அமைப்பான ‘தேசிய தொலையுணர்வு மையம்’ (NRSC) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் வரைபடங்கள் காடு, தேயிலைத் தோட்டம், தென்னந்தோப்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை தெளிவாகக் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல், 2015-க்குப் பிறகு இந்தியக் காடுகளின் நிலை மிக மோசமாகச் சரிந்துவருவதையும் தேசியத் தொலைவுணர்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால், மேற்கண்ட அம்சங்களைத் தெரிந்துகொண்டே காடு கணக்கெடுப்பு அமைப்பு தவறான சித்திரத்தை வலிந்து உருவாக்க முனைகிறது என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படிச் செய்வதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? எரிபொருள், கனிமச் சுரங்கம், போக்குவரத்துக்கான சாலை வசதி, தொழிற்சாலைகளுக்குக் காடுகளைத் திருப்பிவிட அரசு முயல்கிறது. நடப்பில் காடுகளின் பரப்பு குறைந்துகொண்டே போகும்போது, காட்டை மேலும் அழிக்கும் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே பெருத்த கேள்விகள் எழக்கூடும். இந்தப் பின்னணியில் காடுகளுக்கான வரையறையையே மாற்றியமைத்துவிட்டால், காடுகளின் பரப்பு அதிகரித்ததாகக் காட்டிவிடலாம். மற்றொரு பக்கம், காடுகளை அழிப்பதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகிவிடும் என அரசு நினைக்கிறது.

அத்துடன், புவி வெப்பமாதலுக்கு எதிராகக் காடுகளின் பரப்பை அதிகரித்துக் காட்டுவதால், கார்பன் வர்த்தகத்தில் அதைப் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். காட்டின் பரப்பை அதிகரிக்கும் மூன்றாம் உலக நாடுகள் அதற்குப் பதிலீடாக பணக்கார நாடுகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, அந்த நாடுகள் கூடுதல் கார்பன் வெளியிட வழியமைக்க முடியும்.

உணர்ந்திருக்கிறோமா?

கரோனா வைரஸ் பரவலுக்குக் காடழிப்புதான் முதன்மைக் காரணம் என்பது உறுதியாகத் தெரிந்த பின்னரும் காடழிப்பை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். கரோனா வைரஸை விடவும் தீவிரமான-நீடித்த பிரச்சினைகளைக் காடழிப்பினால் இந்தியா எதிர்கொண்டுள்ளது. அஸாம் சோனித்பூர் பகுதியில் மட்டுமல்லாமல், காடழிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில் மனிதர்களுக்கும் யானை/புலி/சிறுத்தைகளுக்கும் இடையிலான எதிர்கொள்ளல் கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமாக அதிகரித்திருக்கிறது. இரு தரப்பிலும் உயிர்ப் பலிகளும் அதிகமாகவே உள்ளன. அதேபோல் சோனித்பூர் பகுதியில் மலேரியா காய்ச்சல் வழக்கத்தைவிட 8 மடங்கு அதிகரித்திருக்கிறது. காடுகளுக்கான வரையறையை அரசு மாற்றலாம். ஆனால், இதுபோன்ற மோசமான பக்கவிளைவுகளை வரையறை மாற்றங்கள் தடுக்கப் போவதில்லை. காடழிப்பு ஏற்படுத்தும் இதுபோன்ற நிஜமான பாதிப்புகளை அரசும் மக்களும் புறந்தள்ளிவருவதுதான் பிரச்சினைக்கு மூல காரணம்.

இயற்கையான காடுகள் உயிரினப் பன்மைக்கும், மக்களுக்கும் கணக்கற்ற பலன்களை வழங்கிவருகின்றன. காடும் இயற்கையும் வழிவழியாக நம்மை வந்தடைந்துள்ள உயிருள்ள மரபுச் சொத்துகள், பண்பாட்டு அடையாளங்கள். காட்டு வளம் என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளத்தின் அடையாளமும்கூட. யுனெஸ்கோ, ஐ.நா. சபை போன்ற அமைப்புகள், அந்த மரபுச் சின்னங்களை உரிய வகையில் அங்கீகரிக்கின்றன, போற்றுகின்றன, பாதுகாக்க வலியுறுத்துகின்றன. மாறாக, காடுகளுக்கும் இயற்கை வளத்துக்கும் உரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் வழங்காமல் வெறும் மேற்பூச்சை நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு உத்தரவாதமான வருங்காலம் இல்லை என்பதே காலம் உணர்த்தியுள்ள நிதர்சனம்.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x