Published : 25 Jan 2022 07:02 AM
Last Updated : 25 Jan 2022 07:02 AM

மொழிப் போர் தியாகங்களை மறக்க முடியுமா?

பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களைப் போலவே ஆண்டுதோறும் ஜனவரி 25-ல் மொழிப் போர் தியாகிகள் நினைவு தினத்தை அனுசரிப்பதும் திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுக்கு ஒரு வழக்கமாக மாறிவிட்டது. ஊர்தோறும் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களும் மற்றுமொரு அரசியல் மேடை என்பதாகவே சுருங்கிவிட்டன.

சுதந்திர தின விழாக்களிலாவது மாவட்டந்தோறும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. அதுபோல, 1965 மொழிப் போரில் முன்னின்று போராடிய, சிறைக் கொடுமைகளை அனுபவித்த தியாகிகளில் இன்னும் நலமுடன் இருக்கும் மூத்தவர்களை திராவிட இயக்கக் கட்சிகள் தங்களது மேடைகளில் அமர்த்தி மரியாதை செய்யலாம். அவர்களுக்குப் பெயரளவில் அளிக்கப்பட்டுவரும் ஓய்வூதியத்தை உயர்த்துவதையும்கூடப் பரிசீலிக்கலாம்.

முதல் தியாகி நடராசன்

இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் 1965-ல் நடந்த மூன்றாவது மொழிப் போராட்டம் தொடங்கப்பட்ட ஜனவரி 25-ம் தேதியே முக்கியமானதாக நினைவில் கொள்ளப்படுகிறது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூடுகளும் உயிர்ப் பலிகளும் ஆறா வடுக்களாகத் தமிழர்களின் ஆழ்மனதில் பதிந்துவிட்டன என்பது மறுக்க முடியாதது.

1937-ல் தொடங்கிய மொழிப் போராட்டத்தையும் கணக்கில் கொண்டு, ஜனவரி 15 தொடங்கி 25-ம் தேதி வரையில் மொழிப் போர் தியாகிகளை நினைவுகூர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேசத் தொடங்கியுள்ளது. காரணம், முதலாவது மொழிப் போரில் உயிரிழந்த முதலாவது தியாகி நடராசனின் நினைவு நாள் ஜனவரி-15 என்பதால். சிறையில் அவரது உடல்நிலை மோசமான நிலையில், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்வோம் என்று அதிகாரிகள் வற்புறுத்தியும் அதற்கு உடன்படாமல் மரணத்தைத் தழுவியவர் அவர்.

நடராசன் உயிரிழந்து ஒரு மாதம் கழித்து கைதான தாளமுத்துவும் சிறையில் உயிரிழந்தார். என்றாலும் மொழிப் போர் தியாகிகளை நினைவுகூரும்போது, தாளமுத்துவின் பெயரை முதலில் சொல்வதே வழக்கமாக இருக்கிறது. நெடில் எழுத்தில் தொடங்குவது எழுச்சியூட்டும்வகையில் அமைந்திருப்பதாகவும்கூட ஒரு காரணம் சொல்லப்படலாம். ஆனால், அதற்குள்ளும் ஒரு சாதிய மனோநிலை இயங்குவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உணர்த்த விரும்புகின்றனர்.

முதலாவது மொழிப் போர்

சுதந்திர இந்தியாவில் புதிய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னமே இந்தித் திணிப்புக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன என்பதும் அந்த முயற்சிகளுக்கு அப்போதே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின என்பதும் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை முன்னின்று நடத்தியவர்களில் பெரியாரும் ஒருவர். முதலாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காஞ்சிபுரம் மாநாட்டுக்குத் தலைமையேற்றவர் கே.வி.ரெட்டிநாயுடு. திருச்சி உறையூரிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட ஊர்வலத்தை வழிநடத்திய ‘தளபதி’ பட்டுக்கோட்டை அழகிரி. பூர்விகத் தமிழர்கள் இல்லை என்று ‘பட்டியூர்ப் பாவலர்களால்’ முத்திரை குத்தப்படும் இவர்கள்தான் முதலாவது மொழிப் போரை முன்னின்று நடத்தினர்.

தமிழறிஞர்களுடன் இணைந்து பெரியார் நடத்திய முதலாவது மொழிப் போரைக் காட்டிலும் பெரியார், அண்ணா இருவரும் இணைந்து நடத்திய இரண்டாவது போரைக் காட்டிலும் திமுகவின் தேர்தல் வெற்றிக்குக் காரணமாக அமைந்த மூன்றாவது மொழிப் போருக்கே இன்று முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மொழிப் போர் குறித்த நினைவுகளும்கூட மாநில சுயாட்சி முழக்கங்களால் இன்று மறக்கடிக்கப்படுகின்றன. அம்முழக்கம், அதற்காகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிற முயற்சிதானோ என்று நினைக்கவும் வைக்கிறது.

சட்டமன்றம், நிர்வாகம், நீதியமைப்பு ஆகியவற்றில் மாநில அரசின் அதிகாரம் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான முழுமையும் அரசமைப்பு சார்ந்த சிக்கலாகும். இது மற்ற மாநிலங்களுக்கும்கூடப் பொதுவானது. இந்தி பேசும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றாலும்கூட இதே முழக்கம் அங்கு எழக்கூடும். ஆனால், மொழித் திணிப்பு என்பது மத்திய அரசுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையிலான நேரடிச் சிக்கல். அதனால்தான் சாதி, மதம் என்ற அடையாளங்களையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் மக்கள் ஒன்றுதிரண்டு போராடினர். அறுபதுகளின் மத்தியில் நடந்த அந்தப் போராட்டங்களின் எழுச்சியால்தான் தமிழ்நாட்டின் ஒரு சில வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருந்த திமுக, மாநிலம் தழுவிய அளவில் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மாநில சுயாட்சியில் ஆட்சிமொழி உரிமையும் ஒரு அங்கம். மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்றபோதும், தாய்மொழிக்கான உரிமை மறுப்பே அவர்களை வெகுண்டெழச்செய்து போராட்டக்களத்தில் நிறுத்துகிறது. அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இடஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கும்கூட சட்டரீதியான கட்டுப்பாடுகளை விதிக்கிற மத்திய அரசும் நீதிமன்றங்களும் ஆட்சிமொழி விவகாரங்களில் அமைதிகாத்து வருகின்றன என்றால், அதற்கு ஒரே காரணம்தான்: மொழியுரிமைச் சிக்கல்கள் பெருந்திரளான மக்களிடம் எளிதில் கோபத்தை உருவாக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கின்றன.

தெளிவான வரலாறு தேவை

மொழியுரிமைப் போரில் உயிர்துறந்த முதல் வீரர் நடராசன். அவர் கடுமையான வயிற்றுவலியால் உயிரிழந்தார் என்கிறது அண்மையில் வெளிவந்துள்ள ‘போதி’ வரலாற்று ஆய்விதழ். அண்ணாவின் அணிந்துரையுடன் வெளிவந்த ஆலடி அருணாவின் ‘இந்தி ஏகாதிபத்தியம்’ நூலிலோ, முகத்தில் ஏற்பட்ட பரு வீக்கத்தின் காரணமாக நடராசன் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது. மொழிப் போரின் முதல் தியாகியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளக்கூட நமக்குத் தெளிவான சான்றாதாரங்கள் இல்லை என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் இது.

திமுகவும் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி, தமிழ் உரிமை என்றெல்லாம் பேசத்தான் செய்கிறது. ஆனால், முப்பதுகள் தொடங்கி மொழியுரிமைக்காக இதுவரை நடந்துவந்த போராட்டங்களை, கட்சி பேதம் பாராட்டாமல் முறையாகப் பதிவுசெய்யக்கூட அக்கட்சி இன்னும் தயாராகவில்லை. கட்சியிலிருந்து பிரிந்துபோன, பிரிந்துபோய் திரும்பவும் வந்து ஒன்றுசேர்ந்த உடன்பிறப்புகளின் பெயர்களையும் குறிப்பிட வேண்டிய தயக்கமோ?

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x