Last Updated : 25 Jan, 2022 06:44 AM

 

Published : 25 Jan 2022 06:44 AM
Last Updated : 25 Jan 2022 06:44 AM

மூன்றாம் தவணை தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?

‘தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் மீண்டும் கரோனா வருகிறதே, பிறகேன் தடுப்பூசி?’ என்ற கருத்தைத் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும்போது பலரும் குழம்பிப்போகின்றனர்!

கரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை நாடு முழுவதிலும் அதிதீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் மூன்று லட்சத்துக்கு அதிகமானோரும், தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கு அதிகமானோரும் புதிதாகத் தொற்றுப் பாதிப்பு அடைகின்றனர். இந்த எண்ணிக்கை இரண்டாம் அலையைவிடப் பன்மடங்கு அதிகமென்றாலும், மூன்றாம் அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருப்பதும், ஆக்ஸிஜன் தேவை அவ்வளவாக அதிகரிக்கவில்லை என்பதும் சற்றே ஆறுதல் தரும் விஷயங்கள்.

அதேசமயம், அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரில் வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்கள்… இவர்களில் குறிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்தான் அதிகம். நாடுதழுவிய இந்தத் தடுப்பூசித் திட்டத்தின் ஆரம்பம் தொடங்கி முன்களப் பணியாளர்களுக்கு அடுத்ததாக முதியவர்களுக்கும் இணைநோய் உள்ளவர்களுக்கும்தான் முன்னுரிமை வழங்கப்பட்டது. என்றாலும், பல்வேறு காரணங்களால் இவர்கள் இன்னமும் முழுமையாகத் தடுப்பூசித் தவணைகளைச் செலுத்திக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்.

ஜனவரி 17-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 88.62% பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 64.23% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

ஜனவரி 7-ம் தேதி நிலவரப்படி 15 – 18 வயதுக்கு உட்பட்ட 33.4 லட்சம் குழந்தைகளில் 21 லட்சம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், முதியோருக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதுதான் இப்போதைய பிரச்சினை. மாநிலத்தில் ஜனவரி 16-ம் தேதி நிலவரப்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 62% பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 48% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்தச் சதவீதம் குறைவுதான்.

ஜனவரி 10-ம் தேதி முதல் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி எனும் மூன்றாம் தவணைத் தடுப்பூசியும் தமிழ்நாட்டில் செலுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 9 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கும், 5.6 லட்சம் சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கும், 20 லட்சம் மூத்த குடிமக்களுக்கும் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது. இவர்களில் மூத்த குடிமக்களுக்கு இன்னமும் முதல் இரண்டு தவணைகளே செலுத்தி முடிக்காமல் இருப்பதால், மூன்றாம் தவணையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்திமுடிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறது மாநில நலவாழ்வுத் துறை.

மூத்தவர்களே முக்கியமானவர்கள்

உலகளவில் கிடைத்துள்ள தரவுகளின்படி, மூன்றாம் அலையின் வீரியம் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணமே தடுப்பூசிதான். இப்போது தமிழ்நாட்டில் இறந்தவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தால், இறப்பைத் தவிர்த்திருக்க முடியும். இயற்கையிலேயே, மூத்த குடிமக்களுக்கு உடலில் நோய்த் தடுப்பாற்றல் குறைந்திருக்கும் அல்லது அவர்களிடம் காணப்படும் இணைநோய்கள் அவர்களின் தடுப்பாற்றலைக் குறைத்திருக்கும். இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்குக்கூட 6 - 9 மாதங்களில் தடுப்பாற்றல் குறைந்திருக்க வாய்ப்புண்டு. அது தொற்றுப் பாதிப்புக்கு உடனே இடம்கொடுப்பதோடு நோய் நிலைமையைத் தீவிரமாக்கிவிடும். ஆகவே, மூத்த குடிமக்கள் கரோனாவிடமிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி உட்பட மூன்று தவணைத் தடுப்பூசிகளும் செலுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம்.

ஆனால், நடைமுறையில் இவர்கள் ‘வீட்டில்தானே இருக்கிறோம். வெளியில் செல்வதில்லையே.. பிறகு எதற்குத் தடுப்பூசி?’ என்று நினைத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. வீட்டில் உள்ளவர்கள் மூலம் இவர்களுக்குத் தொற்று பரவ அதிக வாய்ப்புண்டு. வீட்டில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும், அவர்கள் வெளியில் சென்றுவருவதால், அவர்களிடம் அறிகுறிகளற்ற கரோனா தொற்று இருக்கலாம். அது வீட்டிலுள்ள மூத்த குடிமக்களுக்குத் தொற்றும்போது அவர்களுக்கு அறிகுறிகளோடு நோய் தோன்றலாம். அது உயிராபத்தில் முடியலாம். அப்படியே தொற்றிலிருந்து மீண்டுவிட்டாலும், ‘லாங் கோவிட்’ எனும் நோய்ப் பின்தாக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். ஆகவே, மூத்த குடிமக்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

எப்போது செலுத்திக்கொள்வது?

‘தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் மீண்டும் கரோனா வருகிறதே, பிறகேன் தடுப்பூசி?’ என்ற கருத்தைத் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும்போது பலரும் குழம்பிப்போகின்றனர். தொற்றின் கடுமையைக் குறைத்து, உயிரிழப்பைத் தடுப்பதுதான் கரோனா தடுப்பூசியின் முக்கிய நோக்கம். ஆகவே, தகுதியுடையவர்கள் அனைவரும் 3 தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டாம் தவணையைச் செலுத்திக்கொண்ட 9 மாதங்களுக்குப் பிறகு – மிகச் சரியாகச் சொன்னால் 273 நாட்களுக்குப் பிறகு - மூன்றாம் தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்ட பிறகு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால், உறுதி செய்யப்பட்ட அந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குப் பிறகு மூன்றாம் தவணை செலுத்திக்கொள்ளலாம். அதேபோல், முதல் தவணை மட்டும் செலுத்திக்கொண்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால், அந்த நாளிலிருந்து 3 மாதங்கள் கழித்து இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம்.

அடுத்ததாக, முன்னெச்சரிக்கைத் தடுப்பூசித் திட்டம் செயலுக்கு வந்ததிலிருந்து இப்போதுவரை தமிழ்நாட்டில் கரோனா அறிகுறிகள் தொடர்பான சில அறிகுறிகளுடன் வீட்டுக்கு வீடு தொற்றாளர்கள் இருப்பதைக் காண முடிகிறது. இந்தத் தொற்று ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடுவதால், அநேகரும் பரிசோதனை செய்திருக்க மாட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத் துறையும் தற்போது எல்லாத் தொற்றாளர்களுக்கும் பரிசோதனை தேவையில்லை என்றே பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களும் இருக்கலாம். இவர்கள் எப்போது அவற்றைச் செலுத்திக்கொள்வது எனும் கேள்வி எழுகிறது.

ஒருவருக்குக் காணப்படும் அறிகுறிகளை வைத்து அது கரோனா பாதிப்பா, இல்லையா என்பதைக் கணிக்க முடியாது. காரணம், ஏற்கெனவே இங்கு இருந்த டெல்டா வைரஸுடன் இப்போது புதிதாக வந்திருக்கும் ஒமைக்ரானும் சேர்ந்துகொண்டு மூன்றாம் அலையைத் தீவிரப்படுத்துகிறது. அத்தோடு, பனிக்கால ஃபுளூவும் சேர்ந்துகொண்டது. டெங்குவும் பரவுகிறது. இவற்றில் கரோனா தொற்று உறுதியானவர்களும், பரிசோதனை செய்துகொள்ளாதவர்களும் தொற்றிலிருந்து மீண்ட பிறகு, 3 மாதங்கள் கழித்துச் செலுத்திக்கொள்ளலாம். கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியானவர்கள் உடனேகூட செலுத்திக்கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று, “மூன்றாம் அலைதான் கரோனாவின் கடைசி அலை என்று சொல்ல முடியாது; இன்னும் பல அலைகள் வரலாம்” என்றே வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். கரோனா மீண்டும் உருமாறி வருவது நமக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் அளவைப் பொறுத்தே இருக்கிறது என்கின்றனர். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நம்மையும், நம் உறவுகளையும், முக்கியமாக முதியவர்களையும் கரோனாவின் பிடியிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசிகளை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x