Published : 24 Jan 2022 07:00 AM
Last Updated : 24 Jan 2022 07:00 AM

திக் நியட் ஹான்: சமூகக் கடப்பாடுடைய ஆன்மிக ஆசிரியர்

மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் இணக்கத்தையும் வெற்றிகரமாக வாழ்வதன் சூட்சுமங்களையும் சொல்லிக்கொடுப்பதுதான் நம் கால பிரபல ஆன்மிக ஆசிரியர்களின் அடையாளமாக இருக்கிறது. எல்லா மனிதர்களும் சமமாக, மகிழ்ச்சியாக, நீதியாக வாழ முடியாத ஒரு எதார்த்தத்தில் அந்தத் துயரத்துக்கும், அந்த அநீதிகளுக்கும், அவர்கள் எதிர்கொள்ளும் தனிமைக்கும் முகம்கொடுப்பதும் ஒரு ஆன்மிகவாதியின் பணிதான்.

வாழும் காலத்தில் சகமனிதர்களும் சமூகங்களும் எதிர்கொள்ளும் துயரங்களையும் நெருக்கடியையும் தனிமையையும் பரிசீலிப்பதும் செயல்படுவதும் மெய்யான ஆன்மிகத்தின் ஒரு பகுதி என்று காட்டிய சமகால ஆன்மிக ஆசிரியர்களில் ஒருவர் திக் நியட் ஹான். ஒதுங்கிய கட்டிடத்தில் அமர்ந்து தியானிப்பது மட்டுமல்ல, வலியும் காயமும் கொண்டு அலறும் மக்கள் கூட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதை ‘கடப்பாடு கொண்ட பௌத்தம்’ என்ற நெறிமுறையாக மாற்றி வெற்றிபெற்ற ஆன்மிக ஆசிரியர் திக் நியட் ஹான் (95) கடந்த சனிக்கிழமையன்று வியட்நாமில் காலமானார்.

1960-களின் நடுவில் வியட்நாம் நாடு, போரால் பெரும் இழப்புகளையும் நிச்சயமின்மையையும் சந்தித்திருந்தது. வெறுப்பு, வன்முறை, பிரிவினை உணர்வுகளும் இன்றைப் போல மேலோங்கியிருந்த தருணத்தில் வியட்நாமிய சமூகத்தின் காயங்களைத் தீர்ப்பதற்கு புத்தரின் போதனைகளை மருந்தாகப் பயன்படுத்துவது மட்டுமே தீர்வு என்ற முடிவுக்கு வந்தார், அந்நாட்டைச் சேர்ந்த பௌத்தத் துறவியான திக் நியட் ஹான். அவர் ‘ஆர்டர் ஆஃப் இன்டெர்பீயிங்’ என்ற அமைப்பைத் தொடங்கி, மனிதர்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த இணைப்பின் வழி சமாதானமான சகவாழ்வை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கினார்.

அமெரிக்காவால் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு சின்னாபின்னமாகியிருந்த வியட்நாம், கிராமங்களில் தனது மடாலயத்தைச் சேர்ந்த பிட்சுகள், பிக்குணிகளோடு காயம்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதைத் தனது பணியாகத் திக் நியட் ஹான் தெரிவுசெய்துகொண்டார். தியானத்தில் மனம்நிறை கவனத்தைச் (mindfulness) செலுத்துவதைப் போலவே மக்கள் பணியிலும் மனநிறைக் கவனத்துடன் செயல்பட முடிவுசெய்தார். அதைத்தான் அவர்கள் கடப்பாடுடைய பௌத்தம் என்று கூறத் தொடங்கினார்கள். அது இப்போது நிலைபெற்ற ஒரு பதம் ஆகிவிட்டது. மனம்நிறைக் கவனம் என்பது முழுமையான ஈடுபடுதலின் நிலை ஆகும். ஒரு காட்சியைக் காணுவது மட்டுமல்ல... அங்கேயே செயலும் தொடங்கிவிடுகிறது. உலகின் நிஜமான பிரச்சினைகளை நோக்கி விழிப்பு கொள்ளத் தொடங்கும்போது அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உதவிகளிலும் இறங்கத் தொடங்கிவிடுவதைத்தான் அவர் கடப்பாடுடைய பௌத்தமாக ஆக்கினார்.

1966, பிப்ரவரி மாதத்தில் மூன்று ஆண் துறவிகள், மூன்று பெண் துறவிகளுடன் தனது ஊழியத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். ‘ஆர்டர் ஆஃப் இன்டெர்பீயிங்’ என்ற அமைப்பின் மூலம் 14 கொள்கைகளை அனுசரித்து, நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஊழியத்தில் இந்த ஆறு உறுப்பினர்களே முழுமூச்சாகச் செயல்பட்டனர். மரபான பௌத்த நெறிமுறைகளைச் சமகால அரசியல், சமூக, சூழலியல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கச் செய்தார். இப்படித்தான் கடப்பாடுடைய பௌத்தம் வியட்நாமில் தோன்றி திக் நியட் ஹானின் முத்திரையுடன் மேற்கு நாடுகளில் தற்போது நிலைத்துப் புகழ்பெற்றிருக்கிறது. அன்புதான் அகிம்சையின் சாராம்சம்; இதுதான் திக் நியட் ஹானின் அடிப்படையான செய்தி. வல்லாதிக்க அமெரிக்கப் படையினரால் பாதிக்கப்பட்ட அப்பாவி வியட்நாமிய மக்களுக்குப் பணியாற்றியதோடு, காயம்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் நடுவிலும் சேவை செய்தவர் அவர்.

“அன்பின் வழியாகவும் சுயநலமில்லாமல் நடந்துகொள்ளும் விருப்பத்தின் வழியாகவும் அகிம்சைக்கான உபாயங்களும் செயல்முறைகளும் இயற்கையாகவே உருவாகிவிடுகின்றன. பேராசை, வெறுப்பு, அச்சம் அல்லது அறியாமை போன்ற குருட்டு ஆற்றல்களால் செயல்படுவதல்ல அகிம்சைப் போராட்டம். துயரத்தின் மூலகங்கள் தொடர்பிலான விழிப்பினாலும் நேசத்தாலும் பிறந்து போஷிக்கப்பட்டது அகிம்சைப் போராட்டம். அல்லல்களைச் சந்திப்பதற்கான செயலூக்கம் கொண்ட தீர்வு அகிம்சையே’’ என்கிறார் திக் நியட் ஹான். மதங்கள், சாதி, அடையாளங்கள், பழைய பெருமிதங்கள், கருத்தியல்களின் பெயரால் பிரிவினை, சந்தேகம், வெறுப்பில் பிளவுண்டு போயிருக்கும் நமது காலத்தில், திக் நியட் ஹான் சொன்ன 14 நெறிமுறைகள் முக்கியமானவை.

கோட்பாடு, நெறிமுறை, கருத்தியல் எதுவாக இருந்தாலும் அது பௌத்த நெறிமுறையாக இருந்தாலும் கண்மூடித்தனமான வழிபாட்டுத் தன்மையுடன் அணுகக் கூடாது என்பதே அதில் முதன்மையானது. இன்னொருவரது உணவும் இன்னொருவரது உடையும் இன்னொருவரது பாலுறவுத் தேர்வும் ஒடுக்கப்பட வேண்டியதாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், எந்த நம்பிக்கையும் எந்தக் கருத்தும் எந்த நிலையும் எப்போதும் மாறக்கூடியது என்கிறார் திக் நியட் ஹான். அறுதியான உண்மை என்று எதுவும் இல்லை என்கிறார். மாற்றுத் தரப்புகளை, மாற்றுக் கருத்துகளை அங்கீகரிக்கவும் உரையாடவும் திறந்த மனமும், தனது கருத்துகளுடன் ஒட்டுதலற்ற தன்மையும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். குழந்தைகள் உட்பட யாரிடமும் கருத்து உட்பட எதையும் திணிக்கக் கூடாது என்கிறார். அதிகாரம், மிரட்டல், பணம், பிரச்சாரம், கல்வி எதன் வழியாகவும் ஒரு கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார். அடிப்படைவாதம், குறுகல்வாதம் கொண்ட மனிதர்களைக் கூட பரிவு கொண்ட உரையாடல் வழியாகவே மட்டிறுத்த வேண்டுமென்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

துயரத்தை, எதிர்மறை விஷயங்களைப் பார்க்கக் கூடாது என்று பொதுவாகக் கூறப்படும் காலத்தில் துயர மனித நிலைமைகளுக்கு முகம்கொடுக்க வலியுறுத்துகிறார் திக் நியட் ஹான். கோடிக்கணக்கான மக்கள் பசியாக இருக்கும் நிலையில் பணத்தையோ உல்லாச வாழ்க்கையையோ தேடிப் போகாமல் எளிமையாக வாழச் சொன்னவர் அவர். கோபம், வெறுப்பு ஆகியவற்றை இயல்பான உணர்வு எழுச்சிகளாகக் காணச் சொன்ன அவர், அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டியதில்லை என்கிறார். ஒவ்வொரு முறை கோபமும் வெறுப்பும் எழும்பும்போது மூச்சை நோக்கிக் கவனத்தைப் பதிக்கச் சொன்னவர் அவர். பாலுறவு வேட்கை, வெறுப்பு, கோபம் ஆகியவை எழுந்து அடங்கும் இயற்கையைப் புரிந்துகொள்ளும் எளிமையான வழிமுறையைக் கற்றுத்தந்த ஆசிரியர் அவர். உலகம் முழுவதும் வெறுப்புப் பேச்சுகள் சூழ்ந்திருக்கும் நிலையில், பொய்ச் செய்திகளே நமது அன்றாடத்தின் அங்கமாக மாறியிருக்கும் நிலையில், பொய்யாகச் செய்திகளைக் கூறுவதும், பிரிவினையையும் வெறுப்பையும் பரப்புமாறு பேசுவதும் சமூகங்களுக்கிடையே முரண்பாட்டையும் பேதத்தையும் உருவாக்கும் என்று கூறியவர் அவர்.

சமாதான நோபல் பரிசு பெற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரால் அதே பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட (ஆனால் கிடைக்கவில்லை) திக் நியட் ஹான், துயரத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றுக்கொன்று சந்தித்துக்கொள்ளாத அம்சங்களாகப் பார்க்கவில்லை. துயரம் என்ற சேற்றிலிருந்து மலரும் அல்லிதான் மகிழ்ச்சி என்பதைத் தனது பணியாகவும் செய்தியாகவும் வெளிப்படுத்தியவர்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x