Published : 23 Jan 2022 07:15 AM
Last Updated : 23 Jan 2022 07:15 AM

விவாத களம்: அயோத்திதாசர்- கட்டுக்கதையா, கலகமா?

கட்டுக்கதைதான்

ஞான.அலாய்சியஸால் ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்ற இரு பெருந்தொகுதிகள் தொகுக்கப்பட்டு, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தால் 1999-ல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது தொகுதி 2003-ல் வெளிவந்தது. அயோத்திதாசர் அவர் சார்ந்த தாழ்த்தப்பட்ட இன மக்களுக்காக இடைவிடாது போராடியவர். ஆளும் பிரிட்டிஷ் அரசை பௌத்த தன்ம அரசைவிட மிகச் சிறந்த அரசு என்று பெருமையுடன் கூறியவர். ஒடுக்கப்பட்டோர் அரசியலில் சீர்திருத்தமே அவரது இலக்கு.

தன் சாதி இன மக்களின் பூர்விகத்துக்கு ஒரு பெருமையைத் தர வேண்டுமென அவர் பூர்வ பௌத்தத்தை முன்னெடுத்தார். துரதிர்ஷ்டவசமாக அவரே கட்டிக்கொண்ட கதைகளையே அதற்கு ஆதாரம் என்றார். சமணத்தைக்கூட பௌத்தமே என்று துணிந்து சொன்னார். பறையர்கள் பூர்வ பௌத்தர்கள் என்று நிறுவுவதற்காக சாதி அடிப்படையைக் கொண்ட புராண பௌத்தத்தைக் கதையாக வைத்தார்.

பிராமணர்களை வேஷ பிராமணர்கள் என்றழைத்த அயோத்திதாசர் அந்த இடத்தில் பறையர்களைப் பூர்வ பிராமணர் என்று முன்வைத்தார். அம்பேத்கரும் தன்னளவில் இது போன்ற பௌத்தக் கதைகளையே முன்வைத்து தலித்துகளின் பூர்வ மதம் என்றார். அம்பேத்கரின் சூத்திரர்கள் யார் என்ற நூல் குறித்து ஆர்.எஸ்.சர்மா: “அண்மைக் காலங்களில் கீழ்ச்சாதி மக்களில் கல்வி கற்ற பிரிவினரிடம் பெரிதும் காணப்படுகிற போக்கான, சூத்திரருக்கு ஓர் உயர்ந்த தோற்றுவாயை நிரூபிப்பது என்று நிர்ணயித்துக்கொண்ட நோக்கத்தில் அவர் ஆய்வு செய்ததாகத் தெரிகிறது” என்கிறார். இத்தகைய மனநிலையே அயோத்திதாசரின் கட்டுக்கதைகளில் பூர்வ பௌத்தமாக நீக்கமற நிறைந்து கிடக்கிறது. அடிமைத்தனத்தின் பிரதான வடிவத்தைப் பொருளியல் அடிப்படையில் ஆராய்ந்து, உழைக்கும் வர்க்கக் கருத்தியலை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, பழம்பெருமையை முன்வைக்கும் ஆண்ட பரம்பரைக் கதைகளைப் பண்பாட்டுத் தளத்தில் வைத்தார் அயோத்திதாசர். முன்னொரு காலத்தில் எங்கள் சாதிக்கும் ஆண்ட பரம்பரை வரலாறு இருந்தது என்று கட்டமைப்பதே அயோத்திதாசரின் பண்பாட்டு அரசியலாக இங்கு உருப்பெற்றது. தாழ்த்தப்பட்டோர் அரசாண்ட பௌத்தப் பரம்பரை என்று சொன்னதன் அடிப்படையில், அயோத்திதாசர் ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பமாக ஆனார்.

வாழ்நாள் முழுக்கப் பிராமணர்களை, வேஷ பிராமணர்கள் என்று கூறிவந்த அயோத்திதாசரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததாக அறிவித்தவர்கள் எவரும், அயோத்திதாசரின் பார்ப்பனிய வரையறையைத் திறனாய்வு செய்யவோ அதற்கொரு விளக்கமோ கொடுக்கவில்லை. மாறாக, நேரடியாக பெரியாரின் பகுத்தறிவு மரபைத் தாக்கத் தொடங்கினார்கள். அது அயோத்திதாசரை பெரியார் மறைத்தார் என்கிற அபத்தமான கூற்றிலிருந்து தொடங்கியது.

அபத்தமான இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்புலமாக இருப்பது, பெரியாரின் புகழில் அயோத்திதாசருக்கு வெளிச்சம் பாய்ச்சுவதே. அயோத்திதாசரை பெரியார் மறைத்தார் என்ற விமர்சனத்தின் மூலம் பெரியாருக்கு இணையானவர் அயோத்திதாசர் என்ற இடத்தை நோக்கி நகர்த்துவதே அவர்களது நோக்கமாக இருந்தது. அயோத்திதாசர் பிராமணர்களை வேஷ பிராமணர்கள் என்றும், பூர்வ பறையர்களே ஒரிஜினல் பிராமணர்கள் என்றும் கூறிய கட்டுக்கதைக்கு ஆதாரமாக ‘இந்திரர் தேச சரித்திரம்’, ‘நாராதிய புராண சங்கைத் தெளிவு’ என்ற பெயரிலான வரலாற்று ஆதாரமற்ற புராணக் கதைகளை முன்வைத்தார். இரண்டு நூல்களுக்கும் வரலாற்றில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அயோத்திதாசரின் பூர்வ பௌத்தமானது பிராமணர்கள் செய்துவந்த அனைத்தையும் பூர்வத்தில் பௌத்தத்தின் பேரில் தலித் மக்கள் செய்துவந்ததாகத்தான் நிரூபித்தது.

உழைக்கும் வர்க்கமாக இல்லாத பூசாரி வர்க்க பிராமணர்கள், புத்தர் இறந்து 1,800 ஆண்டுகளுக்குப் பிறகு பிராமணர்கள் இங்கு வந்தார்கள், தங்களைப் போலவே உழைக்காமல் சோறுண்டு வாழும் பௌத்தர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டு, உழைக்காமல் வாழும் வேட்கையின் காரணமாக வேஷ பிராமணர்களாக மாறினார்கள் என்பதை எல்லாம்தான் அயோத்திதாசர் தனது பூர்வ பௌத்தமாக முன்வைத்தார். உழைக்கும் வர்க்கத்துக்கு இத்தகைய பௌத்தத்தில் இடமில்லை. இதன் காரணமே பறையரில் ஒரு பிரிவினரான வள்ளுவப் பறையர்களை முன்வைக்கக் காரணமாக அமைந்தது. உழைக்கும் வர்க்கப் பறையர்கள் குறித்து அவரது கவனம் சீர்திருத்த நோக்கத்தோடு முடிந்துபோனது.

‘நாராதிய புராண சங்கைத் தெளிவு’ என்ற ஒரு பிரதி இருந்ததாகவும் அது தொலைந்துபோனதாகவும், மற்றொரு இடத்தில் களவுபோனதாகவும் அயோத்திதாசரால் சொல்லப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்களது ஆண்ட பரம்பரைக் கதைகளை ஒடுக்கும் சாதி மரபிலிருந்தே எடுக்கின்றன. அதற்கு அயோத்திதாசரும் அவர் முன்மொழியும் சுயசாதி பௌத்தமும் இதில் விதிவிலக்கல்ல.

பௌத்தம் சாதியை எதிர்க்கவில்லை என்பதையும், புத்தர் எந்த இடத்திலும் வேதத்தைப் பழிக்கவில்லை என்பதற்கும் பண்டைய பௌத்த நூல்களில் ஆதாரம் உண்டு. “பிராமணர்களை அவர் விமர்சித்தார். ஆனால், அவரது விமர்சனம் மன்னர்கள், வணிகர்கள் ஆகியோரது பார்வையை ஒட்டியே அமைந்திருந்தது. ஆனால், மற்றவர்களைச் சுரண்டும் இவர்களுடைய உரிமையை அவர் எதிர்க்கவில்லை. சொத்துடைமையாளர்களான பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையில் நிலவிய முரண்பாடானது, பிராமணியத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான முரண்பாட்டை ஓரளவே விளக்குகிறது. ‘உண்மையான’ பிராமணர்களைக் காட்டிலும், போலி பிராமணர்களையே புத்தர் அதிகமாக எதிர்த்தார். ‘முற்காலத்திலோ, பிற்காலத்திலோ, இடைக் காலத்திலோ எக்காலத்திலும் எதனையும் தனதெனக் கொள்ளாதிருப்போரையும் ஏழையாக இருப்போரையும் உலக ஆசைகளிலிருந்து விடுபட்டிருந்தோரையுமே உண்மையில் ‘ஒரு பிராமணன்’ என்று நான் கருதுவேன்’ (தம்ம பதம்).

புத்தருடைய சங்கம் கடன்பட்டவர், அடிமை, படைவீரர்களை ஏற்றுக்கொள்ளாததன் மூலம் ஆளும் வர்க்கத்துக்கே சேவை செய்தது. அசோகருடைய கல்வெட்டுகளில் வருணத்தைப் பற்றியோ சாதியைப் பற்றியோகூட எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், அயோத்திதாசர் இதைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை. அவரது சாதிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பௌத்த வரலாற்றை ஆண்ட பரம்பரை வரலாறாக முன்வைத்தார். அயோத்திதாசரது பௌத்தம் ஆண்ட சாதிப் பெருமையை மட்டுமே முன்வைக்கும் பௌத்தமேயன்றி பண்டைய பௌத்தம் அல்ல.

- வசுமித்ர, ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: makalneya@gmail.com

******

கலகம்

அயோத்திதாசர் மீது காட்டப்படும் புதிய அக்கறைகள் ஆச்சரியமூட்டுகின்றன. இவற்றுள், ஏராளம் கேலிகள்; பல அவதூறுகள்; ஒன்றிரண்டு கண்டனங்கள்; அத்திபூத்தாற்போலக் கரிசனங்களும்; ஆனால், பெருவெடிப்புபோல உற்சாகங்கள். சொல்லப்போனால், 2020-ல் எனது ‘அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூல் வெளியானபோது, இதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன்: அவர் தொடர்பான உரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும். அந்த உரையாடல் எத்தன்மை உடையதாகவும் இருக்கலாம். பேச ஆரம்பித்தால் போதும். மீறி ஆட்கொள்கிற வேலையை அயோத்திதாசரின் எழுத்துகள் பார்த்துக்கொள்ளும் என்பதே எனது நம்பிக்கை.

இன்றைக்கு நாம் எதிர்கொள்வது, ‘அயோத்திதாசர் இரண்டாவது அலை’. 2000 வாக்கில், அவரது எழுத்துகள் ஞான.அலாய்சியஸால் தொகுக்கப்பட்டபோது, எழுந்த அதிர்வுகளைத் தமிழ்நாடு அறியும். அன்றைக்கு, அயோத்திதாசர் குறித்து இரண்டு முரண்பட்ட அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன - அயோத்திதாசர் பெரியாரால் வஞ்சிக்கப்பட்டவர்; அருந்ததியரைத் தூற்றியவர். உண்மையைச் சொன்னால், அன்றைக்குப் பெரிதாய் எதுவும் விவாதிக்கப்படவில்லை.

இரண்டாவது அலையில் அப்படி இல்லை. அவரது பூர்வ பெளத்தம் என்ற கோட்பாடு கேள்விக்கு உள்ளாகியுள்ளது; ‘இந்திர தேச சரித்திரம்’ என்ற படைப்பு பலரின் நிம்மதியைத் தொலைத்திருக்கிறது; பண்டிகைகளை ஆட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது; ‘அடித்தள மக்களின் பேச்சு’ (Subaltern Speech) எல்லோரின் காதுகளிலும் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலை சமூக ஊடகங்களால் மட்டுமே சாத்தியமானது என்று சொல்லலாம். பத்தி எழுத்துகள், நிலைத்தகவல்கள், துண்டறிக்கைகள் போன்ற ‘குறு எழுத்துக’ளையே (ensembles) நாம் இன்று எதிர்கொள்கிறோம். துறை சார்ந்த அங்கீகாரம் (நிபுணத்துவம் அல்ல) சமூக ஊடகங்களில் ஒரு பொருட்டில்லை என்பது ஒரு சாதகம். குறிப்பிட்டுச் சொல்வது என்றால், ராவணன் அம்பேத்கர், யாத்ரா மனோஜ், சுரேஷ் பிரதீப் போன்ற புதியவர்கள் எழுத வந்துள்ளனர். தொடர்ச்சியாகக் கருத்துப் படங்கள் வரையும் ரஞ்சித் பரஞ்சோதி என்ற இளைஞர் தெரியவந்திருக்கிறார். அயோத்திதாசர் ஜனரஞ்சக உரையாடலாக (populist discourse) மாறத் தொடங்கியிருப்பதன் அறிகுறிகள் இவை.

இந்த விவாதங்களின் மையப் புள்ளிகள் என்றும், அவற்றை எவ்வாறு அணுகுவது என்றும் நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

1. பெளத்தவயமாதல் என்பது ஒரு அரசியல் செயல்பாடு. பண்டிகைகளை ஆட்கொள்வதே அதன் போராட்ட வடிவம். ஒவ்வொரு திருவிழாவின்போதும் அதன் பெளத்த விளக்கத்தை அறிவிப்பதும் விவாதிப்பதும் கோருவதும் இதன் அங்கம். அச்சு முதலீட்டியக் காலத்தில் அயோத்திதாசர் ‘தமிழன்’ இதழ் மூலமாக இதே உத்தியைத்தான் மேற்கொண்டிருந்தார். அதன், ‘சமூக ஊடக’ வடிவத்தையே தற்போது அயோத்திதாசரியர்கள் கடைப்பிடித்துவருகின்றனர். இனி ஒருபோதும், தமிழகத்தில் திருவிழாக்கள் முன்பைப் போல இருக்கப்போவதில்லை. அம்மன் திருவிழாக்கள், தீபாவளி, கார்த்திகை தீபம், போகிப் பண்டிகை, புத்தகத் திருவிழா என ஒவ்வொரு தருணத்தையும் இவர்கள் ஆட்கொள்ளப் போகிறார்கள்.

2. பூர்வ பெளத்த அடையாளம், பலரும் அனுமானிப்பதுபோல, ஆணவத்தை வழங்குவது அல்ல. அந்த அடையாளம் இரண்டு காரணங்களால் முக்கியமானது என்று நினைக்கிறேன். ஒன்று, பிராமண எதிர்ப்பு என்ற கலகத்தை முதலில் ஆரம்பித்தவர் பூர்வ பெளத்தர் என்ற அறிவிப்பு. இரண்டு, புத்தரும் அவர்தம் தம்மமும் பிராமண எதேச்சதிகாரத்துக்கான எதிர்வினை என்ற கற்பனையை இது கேள்விக்குள்ளாக்கியது. அந்த வகையில், பூர்வ பெளத்தம் என்ற கருத்தாக்கம் வலுவான அரசியல் தன்னிலையை உருவாக்கக்கூடியது. அதே வேளையில், தமிழகத்தின் பிராமண எதிர்ப்பு அரசியலின் மரபையும் அது மீட்டுத்தருகிறது.

3. அயோத்திதாசரின் பெளத்த சிந்தனைகளை மதக் கருத்துகள் என்று அழைப்பதை விடவும் சமயப் போதனைகள் என்று சொல்வது சரியாக இருக்கும். மதம், ஒரு நிறுவனம்; எனவே, அதிகாரங்களை வழங்கக்கூடியது; நிலையானது. சமயமோ, காலத்தைக் குறிக்கும் சொல். காலத்திடம் வழங்குவதற்கான அதிகாரம் எதுவுமில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சிந்தனை எவ்வெவ்வாறு கருதப்படுகிறது என்பதை மட்டுமே அது சுட்டுகிறது. அந்த வகையில், அயோத்திதாசரின் பெளத்தத்தைத் ‘தற்கால பெளத்தம்’ என்று சொல்ல வேண்டும்.

4. ‘அயோத்திதாசரின் வரலாற்றுச் சிந்தனை’ என்று எதையாவது நீங்கள் பேசத் தொடங்கினால், முகவரி மாறி வந்திருக்கிறீர்கள் என்று பொருள். அவருடையது விடுதலை அரசியலுக்கான சிந்தனை. அதை உருவாக்கும் முகமாக வரலாற்றையும் அவர் தனக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார். இதை நிரூபிக்க வேண்டியதும், மறுக்க வேண்டியதும் வரலாற்றறிஞர்களின் வேலை. எழுத்திலிருந்து மட்டுமல்ல, வாய்மொழி மரபுகள் மூலமாகவும் வரலாற்றை எழுத முடியும் என்று ஜேன் வான்சினா முதற்கொண்டு பலரும் வழங்கிய தெளிவின் மீதே அயோத்திதாசரிய விவாதங்கள் கட்டப்பட வேண்டும்.

5. அயோத்திதாசர் இடைவெளிகளை நிரப்புகிறவர். பேச்சு மரபுக்கும் (orature) எழுத்து மரபுக்குமான (literature) வேறுபாட்டில் செயல்படுகிறவர். வாய்மொழி மரபின் ரகசியங்களை எழுத்து வடிவுக்குக் கொண்டு வரும்போது, உருவாகக்கூடிய புதிய மொழி வகைமைகளை அவர் உருவாக்கிக் காட்டுகிறார். அவருடைய எழுத்தில் புராணங்கள், பழமொழிகள், வதந்திகள், அபிப்பிராயங்கள் என அனைத்தின் மதிப்பும் கூட்டப்படுகின்றன (hybridization).

6. அயோத்திதாசர் முன்மொழிகிற போராட்டத்தை பிராமண/பிராமணிய எதிர்ப்பு என்று மட்டும் சுருக்கிவிட முடிவதில்லை. அவர், பிராமணம் என்ற கருத்தாக்கத்தையும் பிராமணர் என்ற சாதியையும் வேறுபடுத்துவதன் மூலம், கருத்தாக்கத்தின் மீதான சாதிய ஆக்கிரமிப்பைக் கேள்வி கேட்கத் தொடங்குகிறார். அந்த வகையில், அயோத்திதாசரியம் என்பது எதேச்சதிகாரம்/ மேலாண்மைக்கு எதிரான போராட்டம் என்று பொருள்படும்.

- டி.தருமராஜ், பேராசிரியர், ‘நான் ஏன் தலித்தும் அல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: dharmarajant@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x