Last Updated : 21 Jan, 2022 06:22 AM

 

Published : 21 Jan 2022 06:22 AM
Last Updated : 21 Jan 2022 06:22 AM

கல்விக் கடன்: சவால்களைச் சாதனையாக்குவது எப்படி?

மனித வளத்தை வளர்த்தெடுக்கும் ஒரு சாதனம் உயர் கல்வி. தனிநபர் திறன் வளர்ப்பு. நாட்டின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு, பொருளாதாரத் திறனை அதிகரிக்கச் செய்தல், நிலையான வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் வழிவகை ஆகியவற்றில் உயர் கல்விக்கு ஒரு தனித்துவமான பங்கு இருக்கிறது. இத்தகைய உயர் கல்வியை வழங்கும் பொறுப்பும் கடமையும் அரசின் கையிலேயே இருக்க வேண்டும் என்று கோத்தாரி கல்விக் குழு கூறியது. அவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் மாறிவிட்டன. இன்றைக்குச் சுமார் 80% உயர் கல்வி நிறுவனங்கள் தனியார் கையில் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தியேனும் நாட்டின் முன்னேற்றம், தனிநபர் மேம்பாடு ஆகியவற்றை அடைய கல்விக் கடன் ஒரு மாற்று உபயம்.

கல்விக் கடன் வழியாகத் தனிநபர், நாட்டின் முன்னேற்றம் என்பதெல்லாம் உலகமயமாக்கல் சூழலில் உலகளாவிய உத்தியே. உலகெங்கும் வழங்கப்படும் கல்விக் கடன்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. மரபார்ந்த அடமானக் கடன். படிப்பு முடிந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாதாந்திர இஎம்ஐ (EMI) தொடங்கும்.

2. படிப்பு முடிந்து கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் இஎம்ஐ-யை முடிவுசெய்தல்.

3. படிப்பு முடிந்ததும் வங்கியால் ஒரு குறைந்தபட்ச இஎம்ஐ தீர்மானம் செய்யப்படும். அதற்கு மேல் செலுத்துவதைக் கடன் பெற்றவர் தன் வருவாயைப் பொறுத்து முடிவுசெய்யலாம்.

இந்த மூன்று வகைகளிலும் கடன் பெறும் மாணவர்களுக்குப் பாதகமான முறை முதலில் கூறப்பட்ட மரபார்ந்த அடமானக் கடன் முறை. இந்த முறையை அடியொற்றியே இந்த கல்விக் கடன் முறையை இந்திய வங்கிகள் வடிவமைத்துள்ளன. கல்விக் கடனை முன்னுரிமைப் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கி சேர்த்திருந்தாலும் இதுவரை வழங்கப்பட்ட கல்விக் கடன் மொத்த முன்னுரிமைக் கடனில் 3.3% மட்டுமே. கடந்த பத்தாண்டுகளை மட்டும் கணக்கில் கொண்டால், 2013-14-ல் கல்விக் கடன் வழங்கும் அளவு குறையத் தொடங்கியது. 2018-19-ல் கடன் கேட்டுச் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களின் அளவே குறைந்துவிட்டது.

2020-21-ல் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 54% வீழ்ந்துவிட்டது. இதற்கு இந்தியத் தொழிற்கல்வியை நாடுவோரின் விகிதாச்சாரம் குறைந்துபோனது; கரோனா பெருந்தொற்று என்று பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கரோனா தொற்று வருவாய் இழப்பு, வேலையிழப்பு, கணினி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கல்விக் கடன் தேவை அதிகரித்திருக்க வேண்டுமே தவிர, குறைந்துபோக வாய்ப்பு இல்லை. இதற்கெனக் கூறப்படும் காரணங்கள் தவறு என்பதை மதுரை மக்களவைத் தொகுதி கள ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கல்விக் கடன் விண்ணப்பங்களே பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 54% குறைந்துள்ள நிலையில், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கல்விக் கடன் ரூ. 100 கோடி பெற்றுக்கொடுத்துள்ளார். இது பெரும் சாதனை என்பதைத் தாண்டி, ஒரு மக்கள் பிரதிநிதியின் முன்மாதிரிச் செயல்பாடு என்றும் கூறலாம். இது எப்படிச் சாத்தியமானது என்று அவரிடம் கேட்டபோது, “கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் உயர் கல்வி வாய்ப்பை இழப்போர் ஒருவர்கூட இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டோம்” என்றார்.

இந்தத் திட்டமிட்ட முயற்சியின் முதல் பணியாக, மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம், மக்களவை உறுப்பினர் அலுவலகம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டன. அனைத்து (357) மேல்நிலைப் பள்ளிகளிலும், ஆகஸ்ட் 2021-ல், பள்ளிக்கு ஓர் ஆசிரியர் என்று பொறுப்பு அளிக்கப்பட்டது. கல்விக் கடன் நாடும் ஒவ்வொரு மாணவருக்கும் கடன் விண்ணப்பங்கள் வித்யாலட்சுமி போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டன. ஆட்சியர் அலுவலகத்தில் கல்விக் கடன் உதவி மையம் புதிதாக உருவாக்கப்பட்டது. வங்கிகளின் சார்பில் அலுவலர்கள் நிச்சயிக்கப்பட்டு, உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க மக்களவை உறுப்பினர் அலுவலகத்திலும் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. 2021 ஆகஸ்ட் 31-ம் தேதியன்று, அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் 9,000 மாணவர்கள் கலந்துகொண்ட காணொளிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

பிற கடன்களுக்கான வங்கி தொடர்பான விளம்பரங்களைப் போலவே, இதற்கும் விளம்பரங்களைச் செய்தன வங்கிகள். ஒவ்வொரு பள்ளி, கல்லூரி வாசல் முன்பும் விளம்பரங்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக இரண்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாதம் ஒரு முறை வங்கிகள் கொடுத்த கடன்கள் பற்றி பரிசீலனை செய்யப்பட்டது. வழக்கமான ஆய்வுகளில், வங்கிகள் எவ்வளவு கடன் கொடுத்தன என்பது பற்றியே பேசப்படும். இதற்கு மாறாக, கல்விக் கடன் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பற்றி ஆய்வுசெய்ய சு.வெங்கடேசன் வலியுறுத்தினார். தேவையற்ற காரணங்களைக் கூறிக் கடன் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதனைக் கண்காணிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாகக் கல்விக் கடன் சிறப்பு முகாம்களை நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. 20.10.2021 அன்று நடந்த முகாமில் 12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், 16 தனியார் வங்கிகள் கலந்துகொண்டன. அன்றைய தினமே 1,355 மாணவர்கள் உயர் கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்தனர். 171 மாணவர்களுக்கு ரூ.11.81 கோடி வங்கிக் கடன் முகாமிலேயே வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களும் தொடர்ச்சியாக விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலனைசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாவட்ட வரலாற்றில் ரூ. 100 கோடிக் கல்விக் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அது எட்டப்பட்டுவிட்டது.

கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த 1,355 பேரில் 1,011 பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் வழியாக விண்ணப்பித்தோரில் 80% பயன்பெற்றுள்ளனர். பொதுத் துறை வங்கிகளான கனரா வங்கி 38.27%-ம் பாரத ஸ்டேட் வங்கி 28.09%-ம் கடனையும் வழங்கியுள்ளன. இந்தக் கல்விக் கடன் வழங்கும் பொறுப்பில் சுமார் 92%-ஐ அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் ஏற்றுள்ளன. தேவைப்படும் எல்லோருக்கும் கடன் கிடைக்கும் சூழல் ஏற்பட்டால், சமூக-பொருளாதாரரீதியில் எவ்வளவு பேருக்குச் சென்றுசேர்ந்துள்ளது என்ற அளவீடுகளைக் குறைத்துக்கொள்ளலாம்.

கரோனா பெருந்தொற்றால் விண்ணப்பங்கள் வரப்பெறவில்லை என்று வங்கிகள் கதவை அடைத்துவிட்டு அமைதிகாக்கும் சூழ்நிலையில், மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட நிர்வாகமும் வங்கிகளும் இணைந்து செயல்பட்டால், எத்தனை பெரிய இலக்கையும் எட்ட முடியும் என்பதையே மதுரை மாவட்ட கல்விக் கடன் ஆய்வு உணர்த்துகிறது.

- நா.மணி, பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை,

ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x