Published : 20 Jan 2022 06:27 AM
Last Updated : 20 Jan 2022 06:27 AM

கரும்பு மானியங்கள் இனிமேலும் தொடருமா?

கரும்பு விவசாயிகளுக்கு மானியங்கள் அளிப்பது தொடர்பாகக் கடந்த மாதம் உலக வர்த்தக நிறுவனத்தின் பூசல் தீர்வுக் குழுவால் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது. வரிவிதிப்புகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது உடன்பாட்டுக்கு (காட்) மாறாக, இந்தியா தனது கரும்பு விவசாயிகளுக்கு மானியங்களைத் தொடர்ந்து அளித்துவருகிறது என்று ஆஸ்திரேலியா, பிரேசில், குவாட்டமாலா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. உலக வர்த்தக நிறுவன விதிமுறைகளின்படி, கரும்பு உற்பத்தியின் மொத்த மதிப்பில் 10%-க்கு மேல் மானியங்கள் வழங்கப்படக் கூடாது.

ஆனால், இந்தியாவில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி மானியங்கள் இந்த அளவைக்காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் அதனால் இந்தியாவின் கரும்பு உற்பத்தி அதிகரித்து சர்வதேசச் சந்தையில் தாங்கள் விலைக் குறைவைச் சந்திப்பதாகவும் இந்நாடுகள் 2019-ல் பூசல் தீர்வுக் குழுவின் முன்னால் புகார் தெரிவித்திருந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இது தொடர்பில் உலக வர்த்தக நிறுவனம் அளித்துள்ள தீர்ப்பானது, இந்தியக் கரும்பு விவசாயிகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. உற்பத்தி, கையிருப்பு, சந்தைப்படுத்துதல், போக்குவரத்து என ஒவ்வொரு நிலையிலும் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்களை 120 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தக நிறுவனம் இந்தியாவுக்குப் பரிந்துரைத்துள்ளது.

கரும்பு விவசாயிகளை ஆதரிக்கும் உள்நாட்டுத் திட்டங்களைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் பூசல் தீர்வுக் குழு இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள இந்தியா, தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் மேல்முறையீடு செய்துள்ளது. உலகளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப் பெரிய கரும்புச் சர்க்கரை உற்பத்தியாளராக இந்தியா விளங்கிவருகிறது. இந்தியாவில் 5 கோடிக்கும் மேலானவர்கள் கரும்பு விவசாயத்தை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

கரும்பு விவசாயிகளுக்கு நேரடியாக எந்த மானியமும் அளிக்கப்படவில்லை என்பதால், சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் விதிமுறைகளை மீறியதாகக் கொள்ளக் கூடாது என்பது இந்தியாவின் வாதம். ஆனால், மத்திய - மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பாலைகள் வாங்கும் கரும்புக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பதையும்கூட மற்ற கரும்பு உற்பத்தி நாடுகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாக மாநில அரசுகள் தங்களது சூழல்களை அனுசரித்து நிர்ணயித்துக்கொள்கின்றன.

நியாயமான விலை நிர்ணயங்களால் கரும்பு உற்பத்தி அதிகரித்தாலும் அதன் சந்தைத் தேவை நிலையாக இருப்பதால், சர்க்கரை விலை குறைந்து கரும்பாலைகள் கடன் சுமைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. அதைத் தவிர்க்க எத்தனால் தயாரிப்பை அரசு ஊக்குவிப்பதோடு கரும்பாலைகளுக்குக் கடனுதவிகளைச் செய்து ஏற்றுமதியையும் ஊக்குவிக்கிறது. இந்நிலையில், உலக வர்த்தக நிறுவனத்தின் மேல்முறையீட்டு அமைப்பிலும் இந்தியாவின் நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், தற்போது அளிக்கப்பட்டுவரும் கரும்பு மானியங்களைக் குறைத்துக்கொள்ள நேரலாம். தற்போதைக்கு, உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளால் மேல்முறையீட்டு அமைப்பு இயங்கவில்லை என்பதே தற்காலிக ஆறுதல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x